எம்.பி.பி.எஸ். படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் தலித் மாணவி சுகன்யா
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு வாய்ப்பு கிடைக்காமல் அனிதா உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பல லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் தலித் மாணவியின் நிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பாஸ்கரன் – சத்யா தம்பதியின் மகள் சுகன்யா. கடந்த 2012ஆம் ஆண்டு பிளஸ் டூ முடித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளார்.
இதற்காக தலித் சமுதாயத்தை சேர்ந்த சுகன்யாவின் தந்தை பாஸ்கரன், தனக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் மற்றும் சொத்துகளை விற்று, 45 லட்சம் ரூபாய் நன்கொடையாகவும், 8 லட்சம் ரூபாய் முதலாமாண்டு கல்வி கட்டணமாகவும் செலுத்தியுள்ளார்.
மாணவி சுகன்யா சிறப்பான முறையில் படித்து, முதலாமாண்டை முடித்து, இரண்டாம் ஆண்டை தொடர்ந்த நிலையில், 2013ஆம் ஆண்டு இறுதியில் அவரது தந்தை பாஸ்கரன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இதனால், பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட சுகன்யா குடும்பம், மன்னார்குடியில் இருந்து கோவைக்கு, தாத்தா குடியிருக்கும் பகுதிக்குச் சென்றுள்ளது.
கடும் போராட்டங்களுக்கு இடையே இரண்டாம் ஆண்டு கட்டணத்தையும் செலுத்திய நிலையில், கல்லூரி விதிப்படி, 3ஆம் ஆண்டு கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாத சுகன்யாவை 2ஆம் ஆண்டு தேர்வை எழுத ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று மாணவி சுகன்யா வேதனை தெரிவித்துள்ளார்.
தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், கட்டணத்தை செலுத்த முடியாததை ஏற்க மறுத்துவிட்ட ஸ்ரீபாலாஜி மருத்துவ கல்லூரி நிர்வாகம் மாணவி சுகன்யாவை கல்லூரியில் இருந்தும், விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளது.
இதனால், மனமுடைந்த சுகன்யா, கோவையில் தனது தாத்தா வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கே வந்துவிட்டார்.
தாத்தாவும், அம்மாவும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்று வரும் நிலையில், ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி தி.மு.கவின் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்பதால் திமுகவைச் சேர்ந்த பலரை மாணவி சுகன்யா சந்தித்து உதவி கோரியுள்ளார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.
கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டு, 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், பலமுறை நிலையை விளக்கச் சென்ற சுகன்யாவையும், தன்னையும் ஸ்ரீபாலாஜி மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் தொடர்ந்து அலைகழித்ததாக அவரது தாய் சத்யா வேதனை தெரிவித்துள்ளார்.
இறுதியாக சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனைச் சந்தித்தபோது, கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிக்க உதவுவதாகவும், ஆனால், கட்டணத்தை செலுத்த உதவ முடியாது என்றும் கூறியதாக தெரிவித்த மாணவி சுகன்யா, தனக்கு யாராவது கல்விக் கட்டணத்தை செலுத்தினால், கண்டிப்பாக படிப்பை முடித்தபிறகு திருப்பிச் செலுத்துவிடுவேன் என கண்ணீர் வடிக்கிறார்.
தன்னுடன் படித்த மாணவிகள் தற்போது இறுதியாண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், 2ஆம் ஆண்டு புத்தகங்களே கதியென மாணவி சுகன்யா, உதவிக்காக காத்திருக்கிறார்.
மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் நிதி உதவியை வாரி வழங்கி வருகின்றனர்.
ஆனால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் முடித்த தலித் மாணவி சுகன்யாவுக்கு யாரும் உதவவில்லை.
அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்யும் சிலர், உயிரோடு இருக்கும் சுகன்யாவுக்கு உதவ முன்வராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக