தேசிய நெடுஞ்சாலை, 'கூடு' திட்டம்: தமிழகத்தில் இடங்கள் தேர்வு!
*தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து தரும், 'கூடு' என்ற, திட்டத்திற்கு, தமிழகத்தில் இடங்களை தேர்வு செய்யும் பணிகள், துவங்கப்பட்டுள்ளன.*
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பல்வேறு வசதிகள் செய்து தரும் வகையில், மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழியாக, இரண்டு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த உள்ளது.
இதற்கு, 'தேசிய நெடுஞ்சாலை கிராமம்' மற்றும் 'தேசிய நெடுஞ்சாலை கூடு' என்று, பெயரிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கிராமம் திட்டத்திற்கு, ஐந்து ஏக்கருக்கும், 'கூடு' திட்டத்திற்கு ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேவை.
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இடம் வைத்துள்ள தனியார் மற்றும் முதலீட்டாளர்களும், இதில் சேரலாம். இந்த இடத்தில், பெட்ரோல் பங்க், வாகன ஓட்டிகள் தங்கும் விடுதி, உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக, தமிழகத்தில், ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து, மேலும், 12 இடங்களில், 'கூடு' திட்டத்தை, செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான, இடம் தேர்வுப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேசிய நெடுஞ்சாலை கூடு திட்டத்திற்கு மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், இடங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிந்ததும், டில்லியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
*ஒப்புதல் கிடைத்ததும், திட்டத்திற்கு தனியார் பங்களிப்பு பெறப்படும்.*
*இவ்வாறு அவர் கூறினார்!*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக