திங்கள், 18 செப்டம்பர், 2017

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லுமா?* சட்டவிதிகளும் வல்லுநர்களும் சொல்வது இதுதான்!



தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லுமா?* சட்டவிதிகளும் வல்லுநர்களும் சொல்வது இதுதான்!

சென்னை: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாது என்பது குறித்த சட்ட விதிகள், வல்லுநர்கள் கருத்துகள் அடிப்படையிலான விரிவான ஆய்வை பார்க்கலாம்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை இந்திய அரசமைப்புச் சட்டம் பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டனர் என்கிறது அரசின் செய்திக் குறிப்பு.
இந்த பத்தாவது அட்டவணையின்படி தகுதி நீக்கம் என்பதற்கான வரையறை இதுதான். எம்.எல்.ஏ. ஒருவர், வேறு கட்சியில் இணைந்துவிட்டாலோ/ கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாலோ/ கொறடா உத்தரவை மீறி செயல்பட்டாலோ தகுதி நீக்கம் செய்ய முடியும்.

முதல்வரை மாற்ற மட்டும் கடிதம்


ஆனால் தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்களும் கட்சியை விட்டும் விலகவில்லை; வேறு கட்சியிலும் விலகவில்லை; அதே கட்சியில் நீடிப்பதாகவும் முதல்வரை மட்டும் மாற்ற வேண்டும் என்றும்தான் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த அடிப்படையில் பார்த்தால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தவறு.

தகுதி நீக்கம் செல்லாது
எதியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மட்டும் மாற்றுங்கள் என கோரியுள்ளனர். ஆகையால் அத்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.


நீதிமன்றம் தலையிட முடியுமா?


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் கீழான விதிகளோ, சபாநாயகரின் முடிவுகளே இறுதியானது என்கிறது. ஆனால் சபாநாயகரின் முடிவில் சிவில் மற்றும் கீழமை நீதிமன்றங்கள்தான் தலையிட முடியாது; உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் பல முறை தலையிட்டு சபாநாயகர்களின் முடிவை ரத்து செய்திருக்கிறது என்பதுதான் நடைமுறை.

மிரட்டல் போக்குதான்


தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள எடப்பாடி அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நடைமுறையில் 18 தொகுதிகளும் காலியாக இருக்கின்றன என அறிவிக்க வேண்டியது தேர்தல் ஆணையம். ஏற்கனவே ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்னமும் நடைபெறவில்லை; உள்ளாட்சித் தேர்தலையும் எடப்பாடி அரசு எதிர்கொள்ள தயங்குகிறது; தற்போது 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை அவ்வளவு சீக்கிரமாக கொண்டு வந்துவிடுமா எடப்பாடி அரசு என்பது நடைமுறையில் கேள்விக் குறி. காலியாக இருப்பதாக அறிவிக்கும் நடைமுறை என்பது ஒருவகையான மிரட்டல் போக்கு என்றுதான் கூறப்படுகிறது.


என்ன தீர்ப்பு வரலாம்


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடிவடையும் போது 1) 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. 2) 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கமே செல்லாது என உத்தரவு பிறப்பிக்கலாம். 3) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள்; அதில் 18 எம்.எல்.ஏக்களும் பங்கேற்கட்டும்; அவர்களின் வாக்குகளை தனியே வைத்திருக்கவும். இறுதி முடிவு நீதிமன்றத்துக்குட்பட்டது என்கிற உத்தரவுகளில் ஒன்று வர வாய்ப்புள்ளது.

அரசு தரப்பு வாதம்


18 எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் தரப்பு நீதிமன்றத்தை நாடலாம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என்கிற உத்தரகாண்ட் தீர்ப்பை சுட்டிக்காட்ட வாய்ப்புள்ளது. ஆனால் தற்போதைய அரசே பெரும்பான்மை இழந்துவிட்ட நிலையில் பெரும்பான்மை கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ள சூழலில், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது; அது செல்லாது என எதிர்தரப்பில் வாதிடுவர்.

அடுத்து என்ன நடக்கலாம்?


ஒருவேளை 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தங்களுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்புகள் வந்தால் திமுகவின் 21 எம்.எல்.ஏக்களை உரிமை மீறல் பிரச்சனையை முன்வைத்து சஸ்பென்ட் செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி 21 திமுக எம்.எல்.ஏக்களை சஸ்பென்ட் செய்வது என்பதே பெரும்பான்மையை நிரூபிக்கத்தான் என திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

முரண்பாடில்லா முக்கிய தீர்ப்பு

தற்போதைய சூழ்நிலையில் திமுக எம்.எல்.ஏக்களின் உரிமை மீறல் பிரச்சனை வழக்கு, திமுகவின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரும் வழக்கு, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆகிய வழக்குகளுக்கு முரண்பாடற்ற வகையில் ஒரு தீர்ப்பு

வரக் கூடும் என்றே தெரிகிறது. அத்தீர்ப்பானது, சட்டசபையில் தற்போதைய நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்கலாம்; அப்போது 21 திமுக எம்.எல்.ஏக்கள், 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கலாம். நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது என்கிற வகையில் இருக்கலாம் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக