"அப்பா நல்லாருக்காரா தம்பி?'' -ஸ்டாலினிடம் உருகிய திருமாவளவன் தாயார்.
சே.த.இளங்கோவன்.வி.ஶ்ரீனிவாசுலு
'புரட்சி ஒரு திருவிழா' என்பார் லெனின். ஒரு அரசியல் இயக்கமாக மக்களை சந்திக்கும் ஒவ்வொரு கட்சிக்கும், அவை நடத்தும் மாநாடுகளும், மேடைகளும் திருவிழா அரங்கமாகவே தோற்றமளிக்கும். தங்கள் தலைவர்களை நேரில் காணும் மகிழ்ச்சியில் , கட்சியின் தீவிரமான தொண்டருக்கும் அது திருவிழாவாக கொண்டாட்டம் அளிக்கும். மக்களை சந்திக்கும் தலைவர்கள், அவர்களின் எதிர்பார்ப்புக்கு உண்மையாக உள்ளனரா ? இல்லை மக்கள் திரள் ஆதரவை தமது தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்கின்றனரா என்பதெல்லாம் விவாதத்துக்குட்பட்டதே. ஆனாலும் மாநாடு என்றால் அது தொண்டர்களுக்கான திருவிழா என்பதில் ஐயமில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நடத்திய மாநில சுயாட்சி மாநாடு பல அரசியல் திருப்பங்களுக்கு விதைபோட்டிருக்கிறது. அந்த மாநாட்டில் தலைவர்கள் கருத்துரைகள் கடந்து மேடையில் அரங்கேறிய சில சுவாரஸ்யங்களை மாநாட்டுக்கு வர இயலாமல் போன அக்கட்சியின் தொண்டர்களுக்கும் குறிப்பாக மக்களுக்கும் கடத்தும் ஒரு பாலமாகவே கட்டுரையை பரிசளிக்க விழைகிறோம். இதோ வாருங்கள், விடுதலை சிறுத்தைகள் நடத்திய 'மாநில சுயாட்சி' மாநாட்டுக்குள் நுழைவோம். அதன் சுவாரசியங்கள் சில அறிவோம்.
மாநில எல்லைகள் கோடிட்ட, இந்திய வரைபடம் கொண்ட மேடை அனைவரையும் வரவேற்றது. மேடை இருபுறமும் உள்ள திரையில், மாநில சுயாட்சி குறித்த அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துக்கள் ஸ்லைடுகளாக ஒளிபரப்பப்பட்டன. 'மாநில சுயாட்சி குரல்கள் கடந்து வந்த பாதை' குறித்த ஆவணப் படம் திரையிடப்பட்டது. அரியலூர் அனிதா குறித்த ஒலிப்பேழை ஒன்று வெளியிடப்பட்டு, அதன் பாடல் ஒன்றும் ஒளிபரப்பட, பாடலோடு இணைந்து கோரஸ் பாடியது அரங்கம். அதன்பிறகு மாநாட்டை விளக்கும்விதமாக பேசிய விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் சிந்தனைச்செல்வன், "புதிய இந்தியா உருவாக்குவோம் என்று பி.ஜே.பி கூறிவருகிறது. நாங்களும் புதிய இந்தியா உருவாக்கவே இங்கே திறந்துள்ளோம். நாங்கள் உருவாக்கும் புதிய இந்தியாவில் தேசிய நூலாக பகவத் கீதை இருக்காது. திருக்குறளே எங்கள் தேசிய நூல். எங்கள் இந்தியா எல்லோரையும் அரவணைக்கும் இந்தியா" என்றார். "காவி இருள் அகல கருப்பு சூரியன் தெற்கிலிருந்து புறப்படுகிறது" என்று மாநில சுயாட்சி மாநாடு குறித்து நோக்க உரை நிகழ்த்தினார் ரவிக்குமார். மேடையில் தலைவர்கள் அமர்ந்திருப்பதற்கு பின்புறம் பெரிய ஸ்க்ரீனில் 'லைவ் ' ஓடிக்கொண்டிருந்தது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் .திருமாவளவனை காண்பிக்கும்போது மட்டுமல்ல அண்ணல் அம்பேத்கர், பெரியார் படத்தை காண்பிக்கும்போதும் கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றியபோது மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இதனால் உரை நீண்டு செல்ல, பொறுமையிழந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் கரவொலி எழுப்பியபடியே இருந்தனர். இதை உணர்ந்துக்கொண்ட பினராயி விஜயன், "நாம் இங்கே விவாதிப்பது மிக முக்கிய விஷயங்கள். இதை கவனமாக கேட்க வேண்டும். நம்மை ஒடுக்கி வரும் மத்திய பி.ஜே.பி-யின் காதுகளில் ஒலிக்க வேண்டும். நீங்கள் ஒலி எழுப்புவது நோக்கத்தை திசை திருப்பிவிடும்" என்றார் அழுத்தமான குரலில். ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. சில நொடி இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தொடர்ந்த கேரளா முதல்வர் "நீங்கள் உற்சாகத்தில், அன்பில் ஒலி எழுப்புகிறீர்கள்.புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும் எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதால் கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள் " என்றார் புன்னகையோடு. அதன்பிறகு திருமாவளவனும், "கட்டுப்பாடு தான் எனக்கு பெருமை சேர்க்கும், வலிமை சேர்க்கும்" என்றதும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டது அரங்கம். இதற்கிடையே ஒரு சிறுமி திருமாவளவனை சந்தித்து படம் பிடித்துக்கொள்ள மேடையேற, அவரை கீழே இறக்கினர் பாதுகாவலர்கள். 'அம்மா திருமா மாமா கூட படம்பிடிக்கணும்' என அடம்பிடித்து அழுதார். அவரை தேற்ற பெரும்பாடுபட்டார் அவர் தாயார்
மேடைக்கு சற்று தாமதமாக வந்தார் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி. நாற்காலியில் அமரும்போது திருமாவளவன், ப்ரோட்டோகால்படி கி.வீரமணி என்று ஒட்டப்பட்டிருந்த நாற்காலியில் மாறி அமர்ந்துவிட்டார். இதை உணர்ந்த திருமாவளவன் எழுந்திருக்க, "அட, உக்காருங்க. நீங்களும் நானும் ஒன்றுதான் " என சிரித்தபடியே அமரவைத்தார் கி.வீரமணி. புதுவை முதல்வர் நாராயணசாமி பேசியபோது, " உங்க தீர்மானம் எல்லாமே சூப்பர். 'ஆளுநர் பதவியை ஒழிப்போம்' என்கிற 7-வது தீர்மானத்தை மட்டும் 2-வது தீர்மானமாக மாத்துங்க. எங்க மாநிலத்துல துணை ஆளுநரால் (கிரண் பேடி ) ரொம்பவே அல்லோல்படுறோம் " என்றார் வேடிக்கையாக. "முதல்வர் கோரிக்கையை ஏற்கிறேன். அவர் சொன்னதுபோலவே ,அதை 2-வது தீர்மானமாக மாற்றுகிறேன் " என சிரித்தபடியே கூறிய திருமாவளவன், அதன்படியே மாற்றினார்.
நாராயணசாமியும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசும் உரையாற்றியபோது, 'இந்தி திணிப்பை எதிர்ப்போம்' என்றனர். நாராயணசாமி உரை வேடிக்கையாகவும் அதேநேரம் "ஆட்சி பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. எனக்கு கொள்கையே முக்கியம்" என்றும் கர்ஜித்தார். இதன்பிறகு பேசிய விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் சிந்தனைச்செல்வன், "திருநாவுக்கரசு தமிழராக முழங்கினார் என்றால் புதுவை முதல்வர் , விடுதலை சிறுத்தைகளாகவே மாறி சீறினார். பி.ஜே.பி க்கு எதிரான அவரின் முழக்கம் 'அத்துமீறு .அடங்கமறு' என்கிற எங்கள் முழக்கம் போல காட்சி தந்தது" என்க , இதை வெகுவாக ரசித்தார் முதல்வர் நாராயணசாமி. விடுதலை சிறுத்தை கட்சியினர் எழுதிய அரசியல் புத்தகங்கள் மேடையில் வெளியிடப்பட்டன. இதை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி பெற்றுக்கொண்டார். அப்போது புத்தகத்துக்கான தொகையை திருமாவளவனிடம் வழங்கினார். அவரோ, அதை வாங்க மறுக்க, உடனே குறுக்கிட்ட தி.க கி.வீரமணி, "அட என்ன நீங்க பணம் கொடுத்து வாங்கினால் தான் மதிப்பு, அதுதான் மரபு. அய்யா பெரியார் இப்படி நன்கொடையாக புத்தக தொகைகளை பெற்றுத்தான் இயக்கத்தையே வளர்த்தார். உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லையே" என்றார் சிரித்தபடியே. அடுத்து வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கான தொகையை புன்னகையோடு பெற்றுக்கொண்டார் திருமாவளவன்.
மாநாட்டுக்கு மாலை 6 மணியிலிருந்து மேடையில் அணியமாகினர் பல கட்சி தலைவர்களும் .மாநாட்டின் இடையிடையே, தலைவர்களுக்கு தேநீர், ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில் மாநாடு நள்ளிரவு 12 மணி கடந்தும் நீள, அப்போதும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்நாக்ஸை ஸ்டாலின் தவிர்க்க, "அச்சோ நேரத்துக்கு சாப்பிடணும். எங்களால தான் ரொம்ப நேரமாகுது. இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க. இல்லைனா உடம்பு என்னத்துக்கு ஆகுறது?" என அன்போடு திருமாவளவன் பகிர, "உங்களுக்காக கொஞ்சம் எடுத்துக்கொள்கிறேன்" என்றார் ஸ்டாலின் கனிவோடு.
பல தலைவர்களும் மகனுக்கு புகழாரம் சூட்ட, உருகிய திருமாவளவனின் தாயார் கண்கலங்கினார். "கருணாநிதி அய்யாவோட மகன பாக்கணும்." என விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் மூலம் மேடையேறியவர் , ஸ்டாலினைப் பார்த்ததும் 'அப்பா நல்லாருக்காரா தம்பி ?' என்றபடியே பொன்னாடை போர்த்தினார். "அம்மா, உங்களுக்கு நாங்கள் தான் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ய வேண்டும்" என்றபடியே ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தினார். கைகளை உயர்த்தி தலைவர்களுக்கும், மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்களுக்கும் நன்றி செலுத்தினார். ஒரு தாயின் மரியாதையாக மிளிர்ந்தது மாநில சுயாட்சி மாநாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக