செவ்வாய், 5 செப்டம்பர், 2017

தலைவர் திருமாவளவன் ஏன் அமைதி காக்கிறார்?அவர் திருப்பி அடிக்க வேண்டாமா?



தலைவர் திருமாவளவன் ஏன் அமைதி  காக்கிறார்?அவர்  திருப்பி அடிக்க வேண்டாமா?'

எனக் கேட்பவர்களுக்கு அவரே பதில் சொல்கிறார்.

நல்லூர் சேரி மீதான தாக்குதலைக் கண்டித்து செங்கல்பட்டில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் பேசியது..

'சில தம்பிகள் இன்னுமா இன்னுமா அமைதியாக இருப்பது ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்திக் கொண்டிருப்பது என்று முகநூலிலும் இணையதளங்களிலும் எழுதுவதை நான் காண்கிறேன்.
அடங்க மறுப்போம்; அத்துமீறுவோம் என்று இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். மக்கள் தயாராகிற வரையில் அதை சொல்லிக் கொண்டிருப்போம். அதை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

வினாயகர் சதுர்த்தி இனி கொண்டாட மாட்டோம் என்று மக்கள் தயாராக வேண்டும்.

குடிசைகளைக் கொளுத்து அவனை வெட்டு, கடப்பாரையால் குத்து, அந்தக் கொடிக்கம்பங்களை வெட்டி சாய்த்துவிட்டு வா என்று சொல்லியனுப்புகிற தயாரிப்பு இல்லை. அப்படிச் சொல்ல முடியாதா நம்மால். அந்தத் தயாராகுதல் வேறு. மக்கள் இன்னும் அரசியல் ரீதியாக தயாராகுகின்ற பக்குவத்தை பெற வேண்டும்.

அவன் அடிக்கிறான் என்பதற்காக அவனை நாம் திருப்பி அடிப்பது உடனடியாக நமக்கு ஒரு ஆறுதலைத் தரும். ஆனால் இப்போது நம் மீது இரக்கம் காட்டுகிறவர்கள் கூட நமக்கு எதிராக திரும்பிவிடுவார்கள். அதுதான் இந்தச்சமூகம். இவன் ஏன் தூண்டிவிடுகிறான் இவன் ஏன் அடிக்கிறான் இவன் அமைதியாகத்தானே இருக்க வேண்டும் என்று சொல்லுகிற நிலை தான் இன்றைக்கும் இந்தச்சமூகத்தில் இருக்கின்றது.

தலித்துகளின் கோபத்தையோ தலித்துகளின் போராட்டத்தையோ நூறு விழுக்காடு அதில் நியாயம் இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்கிற பக்குவம் இந்தச் சமூகத்தில் இன்னும் வளரவில்லை. ஆகவே உடனடியாக நாம் எதிர்வினையாற்றினால் நம்மை தனிமைப்படுத்திவிடும் இந்தச் சமூகம். ஆகவே தனிமைப்படுத்தாத வரையில் தனிமைப்பட்டுவிடாத வகையில் சனநாயக சக்திகளோடு இணைந்து போராடக்கூடிய வலிமையை பக்குவத்தை நாம் பெற்றாக வேண்டும். அதுதான் மிக முக்கியமானது. பொதுநீரோட்டத்திலே நாம் இணைந்து நிற்க வேண்டும். இல்லையென்றால் இதனை ஒரு சாதியவாத அமைப்பாக சாதி சங்கமாக முத்திரைக் குத்தி நம்மை தனிமைப்படுத்திவிடுவார்கள். அதனால் அறவழியிலே நாம் மிகவும் கட்டுபாடோடு களத்திலே நின்று இந்தச் சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கின்றோம்.

நமக்கென்று ஒரு அரசியல் கட்சி இருக்கின்றது. நமக்காக போராட ஒரு தலைமை இருக்கின்றது. நமக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு போராடுகிற ஒரு இயக்கம் இருக்கின்றது என்று புரிந்துகொள்பவர்கள் இன்னும் கணிசமானோர் இச்சமூகத்திற்கு தேவைப்படுகிறார்கள்.

அம்பேத்கர் பிறந்தநாளைக் கூட கொண்டாடாத இம்மக்கள் வினாயகர் சதுர்த்திவிழாவினை கிராமம் கிராமமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களின் அரசியல் புரிதலை நாம் அறியலாம்.

இன்றைக்கு நல்லூர் சேரியிலே வினாயகர் சதுர்த்தி கொண்டாடி இருக்கிறீர்கள். அதிலிருந்து பிரச்சனை வந்திருக்கின்றது. இதே நல்லூர் கிராம மக்களைப் பார்த்து நான் கேட்கிறேன், இதுவரை உங்கள் சேரியிலே புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை வைத்து அவர் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறீர்களா? அவருக்கு நன்றி செலுத்தியிருக்கிறீர்களா? அவருக்கு பூஜை செய்திருக்கிறீர்களா? இன்றைக்கு நீயும் நானும் இங்கே பந்தல்போட்டு மேடை அமைத்து கூடிப்பேசுகிற உரிமையைப் பெற்றுத்தந்தது யார்? புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்திருக்கவில்லையென்றால் இப்படி கூட நம்மை அனுமதிப்பார்களா? அரசியல் தலைவர்கள் நம் மேடைக்கு வருவார்களா? நம்மை மதித்திருப்பார்களா? இப்படி நூற்றுக்கணக்கில் இங்கே நாம் இங்கே கூடியிருப்பததற்கு உரிமை பெற்றுத்தந்தது நீங்கள் சதுர்த்தி கொண்டாடுகிற வினாயகர் அல்ல. புரட்சியாளர் அம்பேத்கர் தான் என்கிற அரசியல் புரிதல் வேண்டும்.

நீங்கள் பக்குவப்பட வேண்டியது தயாராக வேண்டியது சாதிவெறியர்களைப் போல குடிசைகளைக்கு கொளுத்து கைய வெட்டு தலையை வெட்டு என்கிற தயாராகுதல் அல்ல. திருமாவளவன் பேசுகிற அரசியல் என்ன? மற்றத் தலைவர்கள் பேசுகிற அரசியல் என்ன? ஏன் இந்த மக்களுக்காக போராடுகிறோம்? திருமாவளவன் ஏன் வினாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்கிறான்  என்கிற அரசியல் தெளிவு வேண்டும். சிந்திக்க வேண்டும். இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ளுகிற காலம் எப்போது வருமோ அப்போது தான் நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று கொள்வேன். அப்படி இன்னும் தயாராகவில்லை. நாடு முழுவதும் சாதிவெறி மதவெறி சக்திகள் நம்மை எளிதாக பயன்படுத்த கொள்கின்றன. தலித்துகளின் ஓட்டுகளை எப்படியாவது வாங்கிவிட முடியுமென்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

எளிய மக்கள் இந்த பக்குவமும் புரிதலும் பெற்று தயாராகுகிற வரையில் சொல்லுவோம்.

அடங்க மறுப்போம் அத்துமீறுவோம்!
திமிறிஎழுவோம் திருப்பி அடிப்போம்!!'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக