அன்புள்ள மகளே....
உனக்கு அனிதா என்றொரு அக்கா இருந்தாள்,
அவளை நாங்கள் கொன்றுவிட்டோம், அவள் பிறந்த பொழுது சாதியால் கொன்றோம், வளரும் பொழுது வறுமையால் கொன்றோம், பள்ளி முடித்து பட்டப்படிப்பில் மருத்துவம் பயிலத் தேவையான மதிப்பெண் பெற்ற பின்பும் நீட் என்றொரு தூக்குக் கயிற்றில் இனி கொல்ல முடியாதபடி கொன்றுவிட்டோம்.
ஒரு மாபெரும் நிலத்தின் மக்களுக்கு தன் உயிரை நீக்கி மருத்துவம் செய்திருக்கிறாள் உன் அக்கா . ஆம் எல்லாவற்றையும் சகித்தல் எனும் நோய் முற்றிப்போயிருக்கிறது எம் மக்களுக்கு அதற்கு ஏதோ அவளால் முடிந்த மருத்துவத்தைச் செய்து போயிருக்கிறாள்.
இனி நீயும் உன் தமிழ் நிலத்தில் வாழும் கோடான கோடி சகோதர சகோதரிகளும் அனிதாவைக் கற்கவேண்டும், அவள் ஏன் உயிர் துறந்தாள் , என்பதைக் கற்கவேண்டும் புறத்தில் கூறப்படும் எந்தக்காரணத்தையும் ஏற்காமல் இதன் வேர் எது என்பதை ஆய்ந்தறிய வேண்டும்.
நீங்கள் எல்லோரும் ஆளுக்கொரு கனவு வைத்திருப்பீர்கள் அல்லவா அதற்காகப் போராடுவீர்கள் அல்லவா அது தோல்வியையோ துரோகத்தையோ தழுவும்போது அதிலிருந்து மீண்டு அடுத்த இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றிபெறப் போராட வேண்டும் ஏனென்றால் நீங்கள் தான் எங்கள் வாழ்வின் அர்த்தங்கள் உங்களை வழ்விக்கவே நாங்கள் இந்தப்போக்கற்ற வாழ்வை வாழ்கின்றோம்.
நாம் இந்தியா என்றொரு நாட்டில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதில் தமிழ் மொழி பேசுவதால் தமிழ்நாடு என்கிற மாநிலமாகப் பிரக்கப்பட்டு, இந்தியாவின் அரலசியலமைப்புச் சட்டத்தின்படி அதன் ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்களாக இருக்கின்றோம், நீ கூட இந்தியக்குடிமகள் தான் ஆதார் அட்டை வைத்திருக்கிறாய் அல்லவா.
தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் கூத்துக்களை நீ செய்தி ஊடகங்களில் பார்க்கிறாய் அல்லவா நீயே சொல் அவர்களுக்கு நம் பிரச்சனைகளைக் கேட்கவோ தீர்வு காணவோ நேரமிருக்கிறதா அவர்கள் தர்ம யுத்தம் பிரிப்பு இணைப்பு அணிகள் சொகுசு விடுதிகள் பதவி சொத்து கட்சி சின்னம் வழக்கு ரைடு என்று தங்களைத் தக்கவைப்பதற்கே நேரம் போதாமல் அலைகிறார்கள் எதிலும் மெத்தனம் கடைசி நேர நடவடிக்கை மத்தியை எதிர்க்க முடியாத கையாலாகாத அடிமை நிலை என்று மக்களையும் மாணவர்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்கள் எனவே அவர்களைக் கோபித்துக்கொண்டு எதைச் செய்தாலும் பயனில்லை வேரோடு அகற்ற வேண்டும்
நீ சென்னையில் பிறந்து வளர்ந்திருக்கலாம் ஆனால் நம் பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் என்பதை அறிவாயல்லவா அந்த மாவட்டத்தில் காரைக்குடி என்றொரு ஊர் இருக்கிறது அங்கு எச்.ராஜா என்றொரு பா ஜ க அரசியல்வாதியும் அதற்கு அருகில் உள்ள ஊரான கண்டனூரில் ப.சிதம்பரம் என்றொரு காங்கிரஸ் அரசியல் பிரமுகரின் மனைவி வழக்கறிஞர் நளினி சிதம்பரம் என்பவரும் அனிதா விடயத்தில் முக்கியமானவர்கள்.
காங்கிரசும் பா ஜ க வும் எதிரெதிர் அரசியல் கட்சிகள் என்றுதானே சொன்னேன் அதெப்படி இருவரும் ஒரு விடயத்தில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறாயா இந்த இரு அணிகளுமே முதாலாளித்துவத்தின் அடிமைகள் இவர்களின் முதலாளிகள் குழு ஒன்றுதான் எனவே அடியாழத்தில் சென்றால் நமக்கு கிடைப்பது ஒரே வேர்தான் இந்த அரசியலை நீயும் உன் தமிழ்ச் சகோதர சகோதரிகளும் புரிய வேண்டும்.
பல்வேறு சாதி மதம் மொழி இனம் கலாச்சாரம் பண்பாடு உணவுப் பழக்கமென்று பலதரப்பட்டவைகளின் கலவைதான் இந்தியா. அதை அப்படியே அனுமதித்துத்தான் இத்தனை பரந்த நிலத்தையும் இத்தனைகோடி மக்களையும் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியோடு ஒரு குடியரசு நாடாக மிகப்பெரிய ஜனநாயக நாடக கட்டமைத்து நடத்தி வந்தார்கள ஆட்சியாளர்கள்
ஆனால் இப்பொழுது அந்தப் பிணைப்புச் சரடில் எல்லாக் கண்ணிகளும் பலவீனமடைந்துவிட்டன . ஒரே நாடு ஒரே மொழி ஒரே கல்வி ஒரே கலாச்சாரம் ஒரே சந்தை ஒரே வரி என்று நம் இனக்குழுக்களின் மொழி பண்பாடு அரசியல் உணவு கல்வி அன்றாட வாழ்வு அத்தனையிலும் வேறொரு இனக்குழுவின் விருப்பம் தினிக்கப்பட்டு வருகிறது. எனவே நாம் இவர்களை முறியடிக்கும் அறிவாற்றல் பெறவேண்டும் வலிமை பெறவேண்டும் கல்வியும் திட மனமும் பெறவேண்டும்.
நம் நிலத்தை நமது நீண்ட நெடிய பாரம்பரியத்தை வரலாற்றை வரலாற்றில் மறைக்கப்பட்டவற்றை நீங்கள் வாசிக்கவேண்டும் நமக்கு இழைக்கப்படும் அநீதியையும் நம் உரிமையைப் பிடுங்கும் அரச அராஜகத்தையும் நீங்கள் மூர்க்கமாக எதிர்த்துப்போராட வேண்டும். எங்களால் ஆன வரை நாங்கள் போராடுவோம் நாங்கள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து நீங்கள் போரட வேண்டும் நல்ல தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி என்றொரு தலைவர்?! இருக்கிறார் அவரைப்போன்றவர்களை ஒருபோதும் தேர்ந்தெடுத்துவிடக்கூடாது.
உன்னைப்போல் ஒரு மகளுக்கு என்னைப்போல் ஒரு தந்தை நாளை கடிதம் எழுதலாம் அது நேரு தன் மகள் இந்திரா பரியதர்சினிக்கு இந்திய சுதந்திரத்திற்கான போரட்டத்தில் சிறையிலிருந்து எழுதியதைப்போல் வேறெரு சுதந்திரப்போராட்ட சிறையிலிருந்து எழுதலாம் எப்படியேனும் உங்கள் காலத்தில் உங்கள் அக்காவிற்கு நடந்த கொடுமை உங்களுக்கு நடந்துவிடாமல் காப்போம் என்று உறுதியாக நம்புகின்றோம்
நீங்களும் எந்த நிலையையும் எதிர்கொள்ளும் மன திடத்தோடு சாதி மத பேதமின்றி பொருளதார ஏற்றத்தாழ்வை பொருட்படுத்தாமல் தமிழர்களாக ஒன்றிணைந்து வாழ வேண்டும்
உணர்வோடு இருப்போம் மகளே ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக