மாநில சுயாட்சி மாநாடு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. வீரவணக்கம்!
----------------
மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால்
படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள்
சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் கார்த்திக்ராஜா, ஓடைப்பட்டி கருப்பையா, பெருங்குடி மாரிச்சாமி, அரியலூர்- சிறுகடம்பூர் நந்தினி, பெரம்பலூர்- குரும்பலூர் ஐஸ்வர்யா, திருச்சி- திருப்பாஞ்சலி கதிரேசன், வந்தவாசி- புளியரம்பாக்கம் வெங்கடேசன், ஆகியோருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
2.மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்!
---------------------------------------
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றுக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தலாம். அன்னிய படையெடுப்பு போன்ற ஆபத்தான காலங்களில் மட்டும் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே கையாளலாம். மற்ற நேரங்களில் மாநிலங்கள் தமது அதிகாரங்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். இதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் விளக்கம். ஆனால் கடந்த எழுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றைப் பார்த்தால், மாநிலங்களின் அதிகாரங்கள் மெள்ள மெள்ள பறிக்கப்பட்டு பெருவாரியாக மத்தியில் குவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
மத்திய – மாநில உறவுகளை ஆராய்வதற்கென மத்திய அரசும், தமிழக அரசும் அவ்வப்போது பல்வேறு ஆணையங்களை அமைத்துள்ளன. அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் போதிய அக்கறைகாட்டவில்லை. அதற்கு மாறாக, மாநிலங்களுக்கென இருக்கும் ஒருசில அதிகாரங்களையும் பறிப்பதிலேயே முனைப்பாக உள்ளனர்.
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று கேட்பது பிரிவினைவாத கோரிக்கையும் அல்ல. மாநில மக்களுக்குரிய பிரச்சினைகளையும் தேவைகளையும் மத்திய அரசைவிட அந்தந்த மாநில அரசுகளே சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தமுடியும்.
” இந்திய சுதந்திரத்தை சாதித்த தேசிய இயக்கமானது, பிராந்திய உணர்வுகளைச் சரியாக உள்வாங்கிக் கட்டப்பட்டதே ஆகும். ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படுகிற மொழிகளின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்ட பிறகுதான், காங்கிரஸ் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்தது. தேசிய உணர்வுக்கும் மாநிலங்களின் ஒருமைப்பாட்டுக்கும் இடையிலான கூட்டுறவே நாம் சுதந்திரத்தை வென்றெடுக்க உதவியது “ என 1955 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியது இன்றைக்கும் பொருந்தகூடியதாக உள்ளது..
தேசிய ஒருமைப்பாடு என்பது ’மாநில சுயாட்சி’ உரிமையை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடும், மாநில சுயாட்சியும் எதிரெதிரானவை அல்ல. அவை, கூட்டாட்சி என்னும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
உண்மையில் இந்தியாவை வலிமையானதொரு நாடாகக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், மாநிலங்கள் தன்னாட்சியோடு செயல்படுவது அவசியமாகும்.
எனவே, இத்தகைய மாநில சுயாட்சி உரிமையை வென்றெடுக்க, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டுமென இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது. .
3.மத்திய - மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைத்திட வேண்டும்!
---------------------------------------
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்- 11 ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான உரிமைக் குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. எனவே, மத்திய அரசு 1966-லேயே மத்திய மாநில உறவுகளை ஆய்வுசெய்வதற்காக "நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை" அமைத்தது. அது பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் மன நிறைவுகொள்ளாத அன்றைய திமுக அரசு, 1969 ஆம் ஆண்டு நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அத்துடன், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பியது . அன்று தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம், இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
பின்னர்,1973-இல் பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அனந்தபூர் சாகிப் தீர்மானத்தை இயற்றவும்; 1979-இல் மேற்குவங்கத்தில் ஆட்சி செய்துவந்த இடதுசாரி அரசு மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவும் அதுவே தூண்டுகோலாக அமைந்தது.
அவற்றின் காரணமாக மத்திய மாநில உறவுகளை ஆராய 1983-ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையமும் 2007-ஆம் ஆண்டு நீதிபதி பூஞ்சி ஆணையமும் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. .
இந்நிலையில், தற்போதைய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகள் இதுவரை அமைதி காத்துவந்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. கர்நாடகத்தில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்படுகின்றன; கேரளத்தில் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்படுகிறது.
இவ்வாறான தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளில் நிலவும் சிக்கல்களை அடையாளம் காணவும், மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் கூடுதலாக அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளின் தேவைகளை ஆராயவும் ஏதுவாக, மீண்டும் ஆணையம் ஒன்றை அமைத்திடவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
4.இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைத் திணிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்!
----------------------------------------
“மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி" என்பது திராவிட இயக்கம் (திமுக), இந்திய சனநாயகத்துக்கு வழங்கிய கொடை எனலாம். 1960-களில் தமிழ்நாட்டில் வெடித்தெழுந்த மொழி உரிமைப் போராட்டத்தின் நீட்சியாக முன்வைக்கப்பட்டதே ‘ மாநில சுயாட்சி’ முழக்கம். 1960- களில் இருந்ததைவிட தற்போது மிகவும் முனைப்போடும் மூர்க்கத்தோடும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவிப்பதில் தீவிரமாக உள்ளது.
அத்துடன், இந்தியாவின் பன்மைத்துவத்தைச் சிதைக்கும் வகையில், "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி , ஒரே தேர்தல், ஒரே ஆட்சி" என்கிற ஃபாசிச நிலையை நோக்கி இந்தியாவைக் கொண்டு செல்கிறது. குறிப்பாக, தற்போதுள்ள நாடாளுமன்ற சனநாயக முறையை ஒழித்துவிட்டு ' அதிபர் ஆட்சி ' முறையிலான ஒரு சர்வாதிகார ஆட்சி முறையை இந்தியாவில் அமைப்பதே அவர்களின் நோக்கமென தெரியவருகிறது.
1999- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவதற்கென நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் ஆணையம் ஒன்றை பாஜக அரசு அமைத்தது. அப்போது நாடெங்கும் எழுந்த வலுவான எதிர்ப்பின் விளைவாக அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதே நோக்கத்தோடுதான் இன்றும் பாஜக அரசின் நகர்வுகள் உள்ளன என்பதை அறியமுடிகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற ஜனநாயக முறையை பலவீனப்படுத்தி படிப்படியாக இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைத் திணிக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என இம்மாநாடு உறுதியேற்கிறது.
5.ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்!
----------------------------------
நாடாளுமன்றத்துக்கும் இந்தியா முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சட்ட வல்லுனர்கள் பலர் எச்சரித்துவருகின்றனர். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டவும், கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்ப்பதற்கும்தான் இது வழிவகுக்குமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1999-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 16 சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்துள்ளது. அதில் வாக்களித்த 77 சதவீதம் பேர் நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகிய இரண்டுக்கும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளனர் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1999-ல் இந்தப் போக்கு 68 சதவீதமாக இருந்தது, 2014-ல் அது 86 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்சினைகளே முதன்மை பெறும். அதில் தேசிய கட்சிகளே மேலாதிக்கம் செலுத்தும். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கட்சிகளும், மாநில நலன்களை முன்னிறுத்தும் மாநிலக் கட்சிகளும் ஓரங்கட்டப்படும். இந்தப் போக்கானது, அடித்தள மக்களை நோக்கி சனநாயகம் பரவலாவதற்குத் தடையாக அமைந்துவிடும். எனவே, மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது என்னும் முயற்சியைக் கைவிட வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
6.அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்!
------------------------------------------
மத்திய, மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள், 'மத்திய பட்டியல்' 'மாநிலப் பட்டியல்' 'பொதுப்பட்டியல்' - என அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வரும் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது:
1)மாநிலங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களை அளித்து அவற்றைச் செயல்படுத்தப் பணிக்கும் வகையில், சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்ட உறுப்புகளான( பிரிவுகள்) 154 மற்றும் 258 ஆகியவை நீக்கப்படவேண்டும்.
2)அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இதர அதிகாரங்கள் ( Residuary Powers ) யாவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.
3)மாநிலங்களுக்குச் சிலவற்றைச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 256, 257, 339(2), மற்றும் 344(6) ஆகியவை நீக்கப்படவேண்டும்.
4)பொதுப்பட்டியல் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும்;
பொதுப் பட்டியலில் உள்ளவை தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகுமென ஆக்கப்படவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 254 திருத்தப்படவேண்டும்.
5)மாநில அரசு அவசர சட்டம் இயற்றுவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 213 (1) நீக்கப்படவேண்டும்.
6)மாநிலப் பட்டியலிலுள்ள அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வகை செய்யும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 249 நீக்கப்படவேண்டும்.
7)சட்ட மேலவையை உருவாக்கவும், கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 169 திருத்தப்படவேண்டும்.
8)மாநிலங்களில் மத்திய படைகளை ஈடுபடுத்த வகைசெய்யும் சட்ட உறுப்பு 257(ஏ) நீக்கப்படவேண்டும்.
9)வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மீதான அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்காணும் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
7.ஆளுநர் பதவி ஒழிக்கப்படவேண்டும்!
-------------------------------------
ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, தம்மை நியமிக்கும் கட்சியின் முகவர்களாகவே அவர்கள் செயல்படுகின்றனர்.மத்தியில் ஆளுகிற கட்சியல்லாத பிற கட்சிகளின் அரசுகள் மாநிலங்களில் அமையுமெனில் அவற்றுக்கு தேவையற்ற நெருக்கடிகளைத் தருவதற்கும் குழப்பங்களை உருவாக்குவதற்கும் ஆளுநர்கள் மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றனர். சிலவேளைகளில் மாநில அரசுகளைக் கலைப்பதற்கும் ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசின் ஆட்சிநிரவாகத்திற்கு ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே, ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைப் பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. இந்நிலையில,
மாநில மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
8.மாநிலங்களுக்குப் பொருளாதார தற்சார்புநிலையை உருவாக்க வேண்டும்!
----------------------------------------
மாநில அரசுகள்அனைத்துவகை பொருளாதார தேவைகளுக்கும் மத்திய அரசையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. மாநில அரசுகள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதையும் எவ்வளவு செலவழிக்கலாம் என்பதையும் மத்திய அரசே தீர்மானிக்கிறது. கிராமப்புற வேலை உறுதித்திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உட்பட மாநில அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் பெரும்பாலானவை மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்களாகும், மத்திய அரசின் நிதி நல்கை இல்லாவிட்டால் அவற்றைத் தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 (3) உட்பிரிவு (a) ன் படி நிதி ஆணையம்தான் மத்திய அரசின் வரி வருவாயை எந்த விகிதத்தில் மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவது என முடிவுசெய்கிறது. இந்த நடைமுறை ஒழிக்கப்படவேண்டும்.
வரியை வசூலிப்பது மத்திய அரசு, செலவுசெய்வதற்கு மட்டும் மாநில அரசு என்ற நிலை மாற்றப்படவேண்டும். மத்திய அரசின் வரி வருவாயில் 75 விழுக்காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வகை செய்யவேண்டும். இதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படவேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
9.ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும்!
--------------------------------------
’ஒரே நாடு ஒரே வரி’ என்ற கவர்ச்சியான முழக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி என்னும் 'சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு' முறை மிகபெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரே வரி என்று சொல்லப்பட்டாலும் 5% 12% 18% 28% என நான்குவகையான வரிகள் வசூலிக்கப்ப்படுகின்றன. சுமார் 60 விழுக்காடு பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே 28 % ஜிஎஸ்டி வரி விதிக்கும் நாடு இந்தியா மட்டும்தான். இந்த வரிவிதிப்பு முறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
அத்துடன், 'பணமதிப்பு அழிப்பு' நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு தணிவதற்கு முன்பே எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் சிறு வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்துவருகிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மாநிலங்களை கிராமப் பஞ்சாயத்துகளின் நிலைக்குத் தள்ளிவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சிபெற்ற மாநிலங்களின் வரி வருவாய் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஜிஎஸ்டியால் ஏற்படும் வருவாய் இழப்பை சில ஆண்டுகளுக்கு மட்டும் ஈடுசெய்வதற்காக குளிர்பானங்கள், புகையிலை, நிலக்கரி, ஆட்டோமொபைல் முதலான குறிப்பிட்ட சில பொருட்களின்மீது மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் கூடுதல் வரி அரசியல் சட்டத்துக்கும் ஜிஎஸ்டி சட்டத்தின் நோக்கத்துக்கும் எதிராக உள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழ்நாடு மட்டுமின்றி அகில இந்தியாவின் பொருளாதார நிலை மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை முற்றாக கைவிட்டு, மாநிலங்களுக்கும் வரிவசூலிக்கும் அதிகாரமளிக்கும் வகையில் வரிவிதிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவர
வேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
10.மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்!
---------------------------------
மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான தொகுதிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதால், பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இந்தியாவின் பிரதமாராவதற்கும், கேபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்குமான சூழல் உருவாகிறது. இதனால், சிறிய மாநிலங்கள் பலவகைகளில்
வஞ்சிக்கப்படும் நிலை உருவாகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், ஆட்சியதிகாரப் பகிர்வு மற்றும் பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்ட வலுவான அதிகாரமுள்ள பதவிகள் ஆகியவற்றில் சிறிய மாநிலங்களுக்கும் சுழற்சி அடிப்படையில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அத்துடன், தற்போது மக்களவைக்கு நடைமுறையில் இருப்பதைப் போல மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளிலும் கேபினட் அமைச்சரவையிலும் தலித் மற்றும்
பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
11.நீதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்!
--------------------------------
நமது அரசியலமைப்புச் சட்டம் இந்தியா முழுமைக்கும் ஒருங்கிணைந்த நீதிமுறை அமைப்பை உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும்,
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் மாநில அரசின் ஆலோசனைகள் பெறப்படவேண்டும். ஆனால், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.
அடுத்து, மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்குகளில் பெரும்பாலும் மத்திய அரசின் மேலாதிக்கத்துக்கு ஊறு நேராவகையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நீதி நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்கு எத்தகைய அதிகாரமுமில்லை என்னும் நிலையே இவற்றுக்கு காரணமாகும். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதி நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 217, 222, 223, 224, 224 ஏ ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
12.தேசியப் புலனாய்வு முகமையை ( என்ஐஏ ) கலைக்கவேண்டும!
------------------------------------------
சட்டம் ஒழுங்கைப் பேணுவது உள்ளிட்ட காவல்துறை அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் உள்ளன. மத்திய அரசிடமிருக்கும் சிபிஐ என்னும் புலனாய்வு அமைப்பு மாநிலத்தில் ஒரு வழக்கை விசாரிக்கவேண்டுமெனில் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் பெறப்படவேண்டும், அல்லது நீதிமன்றத்தின் ஆணை பெறப்படவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், மாநில அரசின் காவல்துறை அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் 'தேசிய புலனாய்வு முகமை' (என்ஐஏ ) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பயங்கரவாதக் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கென தனிச் சட்டம் ஒன்றின்மூலம் இந்த அமைப்பு உருவாக்கபட்டது. நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் அந்த மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே பயங்கரவாதக் குற்றம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு இந்த தேசிய புலனாய்வு முகமை என்னும் அமைப்புக்கு அச்சட்டம் வகை செய்கிறது.
சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்துவரும் நிலையில், மதச்சார்பின்மைக்கு எதிரான வகுப்புவாத கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை ஏவிவிடக்கூடிய பேராபத்து உள்ளது.
எனவே, மாநில அரசின் காவல்துறை அதிகாரத்துக்கு எதிராகவுள்ள தேசிய புலனாய்வு முகமை என்னும் என்ஐஏ அமைப்பைக் கலைக்கவேண்டுமெனவும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கே அளித்திட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
13.கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும்!
--------------------------------------
அரசியலமைப்புச் சட்ட அவையில் நடைபெற்ற விவாதங்களின்போதே கல்வியைப் பொதுப் பட்டியலில் வைக்கவேண்டும் என்ற திருத்தம் சில உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டது. பள்ளிக் கல்விக்கு மேலுள்ள மாநில அதிகாரங்களைக் குறைத்திட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தத் திருத்தங்கள் டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்றவர்களின் வாதத்தால் நிராகரிக்கப்பட்டன.
அடுத்து, உயர் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என 1965 ஆம் ஆண்டு 'சப்ரூ கமிட்டி' பரிந்துரை செய்தது; கல்வி முழுவதையும் பொதுப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்பதற்காக அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா 1971 இல் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இறுதியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட 42-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம்தான் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால்தான் தற்போது 'நீட்' என்னும் 'தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வு' நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்களிக்கவேண்டும் எனத் தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கும், இதனால் தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
கல்வி வளர்ச்சியிலும், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியிருப்பதிலும் ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு மேம்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.
தமிழகத்தில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'மாவட்டம்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி' என்னும் திட்டத்தைப் போன்றதொரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
இவ்வாறு, மருத்துவக் கல்வியில் மிகவும் சிறப்பான நிலையில் வளர்ச்சியடைந்திருக்கும் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வைத் திணிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
மாநில அரசின் கல்வி அதிகாரத்தை முற்றிலும் பறித்து, அவற்றை மத்தியில் குவிக்க முனையும் பாஜக அரசின் அணுகுமுறை தமிழக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.
எனவே, நீட் நுழைவுத் தேர்வை இந்திய அளவில் முற்றாக ரத்து செய்வதோடு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
14.இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்!
---------------------------------------
1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப்போர்த் தியாகிகளைக்கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. எனினும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது இந்தியைப் பயிற்று மொழியாகக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்கவேண்டும் என்கிற ஒரு நெருக்கடியை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் மூலமாகஉருவாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு, தமிழ்நாட்டின்மீதும் இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீதும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இந்திய அளவில் மிக மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என இம்மாநாடு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும்; அதுவரை ஆங்கிலமே அலுவல் அல்லது இணைப்பு மொழியாக நீடிக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழியாகவும் ஆங்கிலமே இருக்கவேண்டும். உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாநில அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியே இருக்கவேண்டும். மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் அந்தந்த மாநில மொழிகளில் தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.
எனவே, இந்தியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 343 ம், இந்தி மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 351 ம் நீக்கப்படவேண்டும்; எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாக நடத்தவேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக