வீரபாண்டி ஆறுமுகம் முதல் திருமுருகன் காந்தி, பத்திரிகையாளர்கள் வரை ‘குண்டாஸ்’ வந்ததும் வளர்ந்ததும்!
இன்று திருமுருகன் காந்தி, நேற்று வீரபாண்டி ஆறுமுகம்
வீரபாண்டி ஆறுமுகம் முதல், திருமுருகன் காந்திவரையில் இந்த 'குண்டாஸ்' சட்டம் வந்ததும், வளர்ந்ததும், பாய்ந்ததும் குறித்து ஆராய்ந்தால், மலைப்பாக இருக்கிறது... விதவிதமான உள்குத்துக்கள் அத்தனையும் பார்த்தபடி ஆசனமிடாமலே ஒரு மார்க்கமாக அமர்ந்திருக்கிறது, குண்டாஸ் சட்டம்! தமிழக சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் பல அறிவிப்புகள் சட்டமாகவும், திட்டங்களாகவும் ஆகி இருக்கின்றன. விதி மீது நம்பிக்கை வைத்திருந்த பலரின் தலைவிதியை இதே 110-வது விதிதான் பலமுறை மாற்றியமைத்தது என்பது கடந்தகால வரலாறு. தமிழக சட்டசபையில் 12-8-2014 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 19 சட்ட மசோதாக்களை அவசரமாக முன்மொழிந்து, அதை அமலுக்குக் கொண்டுவந்தார்.
*குண்டாஸ் சட்டப்பிரிவை மாற்றிய ஜெயலலிதா*
குண்டர் சட்டத்தில் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டும் என்றால் அதற்கு பல நிபந்தனைகள் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 'இந்தியக் குற்றவியல் சட்டப்படி (ஐ.பி.சி) தண்டிக்கப்படக்கூடிய ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களைச் செய்து, அந்த குற்றத்தின் காரணமாக வழக்குப் பதிவுசெய்யப்பட்ட நபர் மீதுதான் குண்டர் சட்டம் போடலாம்' என்பதே அது. அதைத்தான் 110-வது விதியின் கீழ், ஜெயலலிதா உடைத்து நொறுக்கினார். சட்டசபையில் குண்டர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர, ஜெயலலிதா வேகம் காட்டியதன் பின்னணியில் இருந்தது இருவர். ஒருவர், சென்னையில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த ப. ரங்கநாதன். இன்னொரு நபர் தி.மு.க-வின் சேலம் மாநகர தளபதியாக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். 2012-ம் ஆண்டின் தொடக்கத்தில் இவர்கள் மீது அடுத்தடுத்து குண்டர் சட்டங்களை ஏவியது ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழக அரசு. அதே ஆண்டில், சில மாதங்களிலேயே இவர்கள் மீதான 'குண்டர் சட்டம் செல்லாது' என்று அறிவித்தது உயர் நீதிமன்றம். அரசுக்குக் கோர்ட் குட்டு வைத்ததை அடுத்துதான், குண்டர் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா.
*ஆள்தூக்கி சட்டமா ?*
ஆட்சியாளர்களைக் கேட்டால், “அரசுக்கு எதிராகச் செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை சீர் குலைத்தார்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள். ஆகவே, இவர்களை 'குண்டாஸ் ஆக்ட்'-டில் ஓராண்டு சிறையிலடைக்கக் காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இதில் ஆளும் அரசு எங்கிருந்து வந்தது?" என்பார்கள். குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை 'ஆள்தூக்கிச் சட்டம்' என்று விமர்சிக்கிறார்கள், குண்டாஸை எதிர்க்கும் அத்தனை பேரும்."இந்தியாவில் நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில், 'மிசா' சட்டம் தானே இருந்தது? அது எப்போது தொலைந்தது? குண்டாஸ் எப்போது வந்தது?".
*யாருக்காக வந்தது இந்த சட்டம் ?*
வீரபாண்டி ஆறுமுகம்
இன்று நான்கைந்து துண்டுகளாய்க் கிடக்கும் அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வை நிறுவிய எம்.ஜி.ஆர். தான் முதல்வராக இருந்தபோது குண்டர் சட்டத்தையும் கொண்டுவந்தார். கடந்த 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் இந்த குண்டர் தடுப்புச் சட்டம். "தொடர் கொள்ளை, உள்ளூர் தாதாக்கள் கையாளும் அச்சுறுத்தல், கொலை, தொழில்முறை ஆதாயக் கொலை, பணம் பறிப்புக்காக ஆள் கடத்தலில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்கவே இந்தச் சட்டம்" என்று முதலில் சொல்லப்பட்டது. அடுத்து போதைப்பொருள் கடத்தல், நில அபகரிப்பு, மோசடி ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் 'குண்டாஸ்' பாய்ந்தது. அதன் பின்னர் திருட்டு வி.சி.டி. தயாரிப்பு குற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் மீது ஏவி விடப்பட்டது. பின்னாளில், ஆளுங்கட்சியினரை மேடையில் அவதூறாகப் பேசுகிறவர்கள், ஆளுங்கட்சியினரின் சொல்லை மீறி நடப்பவர்கள் என்று அரசு இந்தச் சட்டத்தை பயன்படுத்தத் தொடங்கியதும், வெண்டைக்காயை விட பிசிபிசுத்துப் போக ஆரம்பித்தது குண்டர் தடுப்புச் சட்டம். "கல்வி, பொருளாதாரம், அடிப்படை வசதிகள் என அனைத்திலும் பின் தங்கியிருக்கும் வடசென்னையில் தெருவுக்கு இரண்டு பேர் என்ற அளவில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறை சென்றவர்களாக இருக்கிறார்கள்" என்பதை வைத்தே இந்தச் சட்டம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணரமுடியும்.
*குண்டாஸாக மாறும் செக்ஷன் 75-ஐ*
சாதாரணச் சண்டை, வாய்த்தகராறு, குழாயடிச் சண்டை, எதிர்பாராத வாகன விபத்தின்போது ஒருவரை மற்றொருவர் ஆத்திரத்தில் தாக்கிக் கொள்ளுதல் போன்ற குற்றங்களுக்கு போடப்படும் சட்டப்பிரிவு 75-ஐ போலீஸார் எதற்கெல்லாம் போடுகிறார்கள் என்று பார்த்தால், அது இன்னொரு தனிப் பாதைக்கு டார்ச் அடித்துக் காட்டும். கையில் கத்தியுடன் திரியும் ரவுடிகளுக்கும் அதே சட்டப்பிரிவு 75-ஐத்தான் முதலில் போடுவார்கள். ஒரே வித்தியாசம் கத்தியுடன் திரிந்தால், 15 நாள் வரை ரிமாண்டுக்கு அனுப்புவார்கள். மற்றவர்களை சொந்த ஜாமீனில் விடுவிக்க முடியும். சொந்த ஜாமீனில் வீட்டுக்குப் போக வசதியில்லை என்றால், அவரும் 'கத்தி ஆசாமி'-க்கு இணையாக ரிமாண்டுக்குப் போக வேண்டியதுதான். கல்வியாளர்கள், தனித்தமிழில் பேசியவர்கள், இயற்கைக்கு எதிராக செயல்படும் அரசைக் கண்டித்தவர்கள் மீதும் குண்டாஸ் சட்டம்தான் பாய்ந்தது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய நான்கு பேரும் கடந்த மே மாதம் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர் போலீஸார். மெரினாவில் போராட்டம் நடத்தத் தடை இருக்கும் நிலையில் தடையை மீறி, நினைவேந்தல் கூட்டம் நடத்தியதாக திருமுருகன் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், மத்திய அரசு அலுவலகத்தைத் தாக்கியது உள்ளிட்ட 17 வழக்குகள் அவர் மீது ஏற்கெனவே உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். ஆனால், 'திருமுருகன் காந்தியுடன் கைதான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோருக்கு எதிராக குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன்? அவர்கள் மீது என்னென்ன வழக்குகள் இருந்தன?' என்ற கேள்விக்கு விடை சொல்ல ஆளில்லை. ஆனால், இப்போது (செப்டம்பர் -19) நால்வரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சேலம் மாணவி வளர்மதி, இந்த நால்வருக்குப் பிறகு (ஜுலை மாதம்) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி, இவர்களுக்கு முன்னதாக நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
*ஊழலை சுட்டி கட்டிய பத்திரிகையாளர் மீது போடப்பட்ட குண்டாஸ்*
இதை போல் சென்னை பத்திரிக்கை மன்ற தலைவரும் மூத்த பத்திரிக்கை ஆசிரியருமான வி.அன்பழகன் மீது பார்தீபன், மதிவாணன் என பல நகராட்சி அதிகாரிகளின் தூண்டுதலின் பெயரில் பல வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டம் ஏவப்பட்டது அதன் பிறகு அவரது குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது
*கோர்ட் வைத்த குட்டு*
சென்னை மதுரவாயலில் 2012-ம் ஆண்டிலும் இதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியது.... புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த திவாகர், குமரேசன், அசோக் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப்போட, பல முயற்சிகளை மேற்கொண்டது அரசு. 'கத்தி முனையில் பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்தனர்' என்பது அப்போது, போலீஸ் முன்வைத்த குற்றச்சாட்டு. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க நிர்வாகி சிவா என்பவரையும் இதேபோல் வேறொரு வழக்கில் கைதுசெய்து ஓராண்டு சிறைக்கு அனுப்பியது போலீஸ். கடைசியில் இந்த நால்வருமே குண்டாஸ் சட்டத்திலிருந்து விடுதலை ஆனார்கள். ஐம்பத்தெட்டே நாள்களில் குண்டாஸ் சட்டத்தில் இருந்து விடுதலை ஆன பெருமை 'சிவா' வுக்கு கிடைத்தது. அதேபோல் 58 நாள்களில் நாம் குற்றவாளியாக சிறைக்கு அனுப்பியவர் (?!) வெளியில் வந்து விட்டாரே என்ற வரலாற்று வேதனை போலீஸூக்கும் கிடைத்தது.
கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் 1,926 பேரை போலீஸ் கைதுசெய்தது. அதில் 146 பேர் மட்டுமே ஓராண்டு சிறையில் இருந்தனர். 1,291 பேர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவாலும், 489 பேர் அறிவுரைக் குழும (அட்வைஸரி ஃபோர்டு) ஆணைகளாலும் குண்டாஸிலிருந்து விடுதலையானார்கள். ஓராண்டு உள்ளே இருந்த 146 பேரும் யாராவது ஒரு வழக்கறிஞர் துணை இருந்திருந்தால், அவர்களும் விடுதலை ஆகியிருப்பார்கள். இப்படி நூற்றுக்கணக்கானோர் தங்களை குண்டாஸ் பிடியிலிருந்து விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருந்ததையொட்டி, அந்த வழக்குகளை விரைந்து முடிக்குமாறு சென்னை ஐகோர்ட்டின் அன்றைய தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்குகளை மட்டும் விசாரிக்க சிறப்பு பெஞ்ச் உருவாக்கப்பட்டது. நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோர், ஜூன் 2014-ல் வழக்குகளை விசாரித்தனர். மொத்தம் 220 வழக்குகளை இந்த நீதிபதிகள் விசாரித்தனர். 212 பேர் அப்போது குண்டாஸிலிருந்து நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டனர்.
*எமர்ஜென்ஸியும், குண்டர் தடுப்புச் சட்டமும்*
இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோதுதான் எமர்ஜென்ஸி என்ற சொல்லாடலுடன் ‘மிசா’ என்ற சட்டம் பயன்படுத்தப்பட்டது. தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட பலர் போலீஸாரால் தாக்கப்பட்டு, படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். முன்னாள் மேயர் சிட்டிபாபு உள்ளிட்ட பலர் பரிதாபமாக சிறையிலேயே உயிரிழந்தனர். பின்னர், 'தடா' சட்டம் வந்தது. 'பொடா' சட்டம் வந்தது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் என பல சட்டங்கள் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டன. இப்போது ... அதிகமில்லை, ஜென்டில்மேன் ! உங்கள் மீது சட்டப்பிரிவு 75-ன் கீழ் மூன்றுமுறை வழக்குப்பதிவு செய்தாலே போதும், உங்களுக்கு எதிராக 'குண்டாஸ்' சட்டம் பாய்ந்து விடும். அதன்படி, ஓராண்டு உங்களை உள்ளே தள்ளலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக