சனி, 9 செப்டம்பர், 2017

கல் நெஞ்சத்தையும் உருக வைக்கும் பதிவு..!!



கல் நெஞ்சத்தையும் உருக வைக்கும் பதிவு..!!
----------------------------

ஜூனியர் விகடன்

“நான் தோற்றுப் போயிட்டேனா?” - அனிதா கேட்ட கடைசிக் கேள்வி
 தி.ஹரிஹரசுதன் எம்.திலீபன்

‘‘ரெண்டு நாளுக்கு முன்னாடிதான், அவ அம்மா போட்டோவை எடுத்துப் பாத்துக்கிட்டு இருந்தா. அம்மா ஞாபகம் வரும்போதெல்லாம் அனிதா இப்படித்தான் செய்வா. அந்த நேரத்துல நாங்க ஏதாவது பேசினா அழுதுடுவா. அதனால பேசாம இருந்துட்டேன். ஆடி 18-க்கு அவங்க அம்மாவுக்குப் புடவை வாங்கிப் படைக்கிறது வழக்கம். அந்தப் புடவையை திடீர்னு எடுத்து ஆசையா கட்டிக்கிட்டா. ‘எனக்குப் புடவை நல்லா இருக்கா பாட்டி’ன்னு கேட்டா. எப்பவும் இல்லாம இப்படி அவ செய்யறது புதுசா இருந்துச்சு. ‘உன்கிட்டேயே வந்துடறேன்மா’னு அம்மாகூட அவ மனசுக்குள்ள பேசிக்கிட்டே இருந்திருக்கான்னு தெரியாம போச்சு. தெரிஞ்சிருந்தா தனியா விட்டிருக்க மாட்டேன். 

தெரிஞ்சவங்க வந்திருக்காங்களேன்னு பேசறதுக்காக பக்கத்து வீட்டுக்குப் போனேன். கொஞ்ச நேரத்துல ஒரே சத்தம். ‘உன்னோட பேத்தி தூக்கு மாட்டிக்கிச்சு. உசுரு இருக்கானு வந்து பாரு’ன்னு யாரோ கூப்பிட்டாங்க. பதறிப் போய் பார்த்தேன். பிணமாகத்தான் கிடந்தா. டாக்டராகி, என் உடம்புல உசுரு இருக்கானு கையைப் பிடிச்சு பார்க்க வேண்டியவ... ஆனா, அவ உடம்புல உசுரு இருக்கானு பாக்கவேண்டிய நிலைக்கு இந்தக் கிழவியைக் கொண்டுவந்துட்டாளே... பாவி மக!’’ 

பெருங்குரலெடுத்து அழத் தொடங்குகிறார் பெரியம்மா. அனிதாவின் பாட்டி. அரியலூர் மாவட்டத்தின் குழுமூர் என்ற ஒரு குக்கிராமத்துக்கு அநேகமாக தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வந்து போன வாகனங்களின் தடங்கள் அந்த மண் வீதிகளில் தெரிகிறது. இன்னமும் கட்டி முடிக்கப்படாத அந்த எளிய வீட்டுக்கு வெளியே மலைகளாகக் குவிந்து கிடைக்கின்றன மாலைகள். வீட்டுக்குள் ஒரு பழைய இரும்பு டிரங்க் பெட்டியிலும் அதன் மேலேயும் கிடக்கின்றன அனிதாவின் பாடப் புத்தகங்களும் சான்றிதழ்களும். ஒரு இனிய கனவு கலைந்து போனதன் துயரம் அந்த வீடெங்கும் கலந்திருக்கிறது.  

அனிதாவின் பாடப் புத்தகங்களைப் பார்த்து பாட்டியின் அழுகை இன்னும் பெரிதாகிறது. ‘‘அனிதா ரெண்டு வயசு குழந்தையா இருக்கும்போதே, அவ அம்மா ஆனந்தி இறந்துட்டா. அதுக்குப்பிறகு அவளுக்கு அம்மா நான்தான். அண்ணன்கள் நான்கு பேர். ஒரே பொண்ணு என்பதால் செல்லமா வளர்ந்தா. நல்லாவும் படிப்பா. அவ அப்பாவும் அண்ணனுங்களும், படிக்கறதைத் தவிர வேற எதையும் செய்ய விட மாட்டாங்க. திருச்சி காந்தி மார்க்கெட்ல மூட்டை தூக்கற தொழிலாளியா இருந்தாலும், மகளை மகாராணி மாதிரி தாங்கினாரு அனிதாவோட அப்பா .

அனிதாவோட அம்மா உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்த நேரத்துல பக்கத்துல டாக்டர் இருந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம். ஆஸ்பத்திரிக்குப் பல மைல் தூரம் போக வேண்டியிருந்துச்சு. அப்படியும் காப்பாத்த முடியாம போச்சு. அந்தச் சோகத்தைக் கேட்டுக் கேட்டு அவ மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. ‘எங்க அம்மா மாதிரி இந்த ஊர்ல இனிமே யாரும் சாகக்கூடாது. அதுக்காகவே நான் டாக்டர் ஆவேன்’னு சொல்லுவா. பத்தாம் வகுப்பில் 476 மார்க் எடுத்தா. ‘இந்த ஊருக்கு முதல் டாக்டரா அவ வருவாள்’னு ஊரே பேசும். கேட்கக் கேட்க எனக்குச் சந்தோஷமா இருக்கும். 

ப்ளஸ் 2-வுல 1176 மார்க் எடுத்தா. அவ எடுத்த மார்க்குக்கு நல்ல காலேஜ்ல நேரா போய் டாக்டருக்குச் சேர்ந்துடலாம்னு அவங்க ஸ்கூல்ல பெருமையா சொன்னாங்க. ‘நான் டாக்டராகிட்டேன்’னு ஊர்ல எல்லாருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுத்தாள். எங்க மக்கள் அவளைக் கொண்டாடினாங்க. 

ஆனால், எங்கிருந்து வந்துச்சோ இந்த நீட்? இதை அறிவிச்ச அன்னைக்கே அவ பாதி செத்துப்போயிட்டா. ‘என் கனவு எல்லாம் போச்சு’ன்னு வீட்டில் முடங்கி உக்காந்துட்டா. அவளோட அண்ணன் மணிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் தம்பியிடம் என் புள்ளைய கூட்டிட்டுப் போய் மனு கொடுத்துச்சி. அதை வச்சு அந்த தம்பியும் பல முயற்சிகளை எடுத்துச்சி. டெல்லி வரைக்கும் போய் நீதிப் போராட்டம் நடத்துச்சி.  ஏதாவது முடிவு வரும் என்று தினம் தினம் டி.வி பொட்டியையே பார்த்துக்கிட்டே இருந்துச்சி. நீதிமன்றமும் கையை விரிச்சிருச்சி. அன்னையில இருந்தே அவ சோகமா இருந்தா. ஆனா, இப்படி ஒரு முடிவு எடுப்பாள்னு எங்களுக்குத் தெரியாதே’’ என்கிறவர், பேச வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறார். 

அனிதாவின் அத்தை கோமதியிடம் பேசினோம். “நீதிமன்றத் தீர்ப்பு வந்ததுமே, ‘எல்லாம் முடிஞ்சு போச்சி’ன்னு அனிதாவுக்குத் தெரிஞ்சிடுச்சி. அவ அப்பாகிட்ட அடக்க முடியாத ஆதங்கத்தோட, ‘அப்பா! நான் தோற்றுப் போயிட்டேனாப்பா?’ன்னு கேட்டிருக்கா. அவரும் துக்கத்தை அடக்கிக்கிட்டு, ‘நீ தோற்கலைப்பா, இந்த அரசுகள் உன்னைத் தோற்க வச்சிருச்சிப்பா. நீ கவலைப்படாத. வேற நல்ல படிப்பு படி’ன்னு சொல்லியிருக்காரு. அதிலே பாதி உடைஞ்சுட்டா. 

அன்றைக்கு திடீர்னு கடைக்குப் போனா. ‘எங்கே போறே’னு கேட்டேன். ‘எனக்குப் புடிச்ச தேன் மிட்டாயை வாங்கி சாப்பிடப்போறேன்’னு சொல்லிட்டுப் போனா. ‘இன்னமும் குழந்தையா இருக்கியே’னு கிண்டல் பண்ணினேன். இந்த முடிவுக்குத்தான் அதுன்னு தெரியலை. அவ எப்போதும் தனிமையில்தான் உட்கார்ந்திருப்பா. ஆனா, இப்போ எங்களைத் தனிமைப்படுத்திட்டு அவள் போய் சேர்ந்துட்டா” என்று கண்ணீர் சிந்தினார்.

அனிதாவின் பள்ளித் தோழி பிரியங்காவிடம் பேசினோம். “ஏன் அனிதா நல்லா படிச்ச? ஏன் அனிதா நீதிமன்றப் படியேறி எல்லாரையும் உன்பக்கம் திரும்பிப் பாக்க வச்சே? இப்ப எதுக்கு அனிதா எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போன?’’ என ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார். “அவளோட  கனவு, லட்சியம் எல்லாமே டாக்டராகணும்ங்கிறதுதான். சின்ன வயசுல இருந்தே அதைச் சொல்லிச் சொல்லித்தான் படிச்சுட்டு இருந்தா. ஆனால் ‘நீட்’ தேர்வால் அவ கனவெல்லாம் சிதைஞ்சுபோச்சு. எல்லோரிடமும் குழந்தைத்தனமாக பேசுவா. நல்லா பழகுவா. ‘எனக்கு டாக்டர் சீட் கிடைக்கலைன்னா தற்கொலை பண்ணிப்பேன்’னு சொல்லிட்டேதான் இருந்தா. என்கிட்டேயே பலமுறை சொல்லியிருக்கிறாள். அதைத்தான் மோடி ஐயாவுக்கும் கடிதமா அனுப்பியிருந்தா. என்னிடம் சொல்லும்போதெல்லாம் பல தடவை திட்டியும் இருக்கிறேன். விளையாட்டா சொல்றதாதான் நினைச்சேன். இப்படி விபரீதமா முடிவெடுப்பாள்னு நம்ப முடியலை.

ஸ்டெதஸ்கோப் மாட்டி மக்களுக்கு மருத்துவம் பார்க்க நினைத்தவளை, இந்த அரசு அதிரடி சட்டத்தால் தூக்குக்கயிறு மாட்ட வைத்திருக்கிறது. அனிதாவின் கனவு சிதைந்துவிட்டது. இனி வேறு எந்த அனிதாக்களின் கனவுகளும் சிதையக்கூடாது. மோடி ஐயா, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு, எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை நினைத்துப் பார்த்து செயல்படுத்துங்கள். உங்கள் அதிரடி அறிவிப்பு சட்டத்துக்கு எங்கள் அனிதாவே கடைசிப் பலியாக இருக்கட்டும். இனி ஒரு அனிதாவை உருவாக்கிவிடாதீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்” என்று முடித்தார்.

தமிழகத்தின் எல்லா வீதிகளும் அனிதாவுக்காக போராடுகிறவர்களால் நிறைந்திருக்கிறது. தாயற்ற குடும்பத்தில் தன்னுடைய நான்கு அண்ணன்களுக்கும் ஒரு தாயாகவே இருந்தார் அனிதா. இன்று பார்த்தால் தமிழகம் முழுக்க அனிதாவுக்காக குரல் கொடுக்க எத்தனை அண்ணன்கள்? அத்தனை பேரும் கையறு நிலையில் தவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக