மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியை ஜெனிபாவை விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜோதிமுருகன் கத்தியால் குத்தியது ஏன் என்பது குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர் ஜெனிபா. இன்று காலை பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெனிபாவை ஜோதி முருகன் என்பவர் கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த ஜெனிபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். பேராசிரியை ஜெனிபாவை ஜோதிமுருகன் கொலைசெய்ய முயன்றது ஏன் என்பது குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை குளமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவர் எம்.எஸ்ஸி., எம்ஃபில் இதழியல்துறை படித்துள்ளார். கடந்தாண்டு காமராஜர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார் ஜோதிமுருகன். தற்காலிகப் பணியாளராகச் சேர்ந்த இவர், தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் சில்மிஷம் செய்துவந்துள்ளார். மாணவிகளிடம் தவறாகப் பேசுவது; போனில் தொல்லை செய்வது உள்ளிட்ட தவறுகள் செய்துள்ளார். இந்தத் தகவல் இதழியல்துறைத் தலைவர் பேராசிரியை ஜெனிபாவுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கினார் ஜெனிபா. இவருக்குப் பதிலாக இரண்டு விரிவுரையாளரைக் கடந்த வியாழன் அன்று நியமித்துள்ளார் ஜெனிபா.
இதனால் கோபத்திலிருந்த ஜோதிமுருகன் இன்று காலை பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளார். பேராசிரியை ஜெனிபா அறைக்குச் சென்ற ஜோதிமுருகன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். அறையிலேயே இருந்துகொண்டு ஜெனிபா கத்துவதை ரசித்துள்ளார். தகவல் அறிந்து மாணவர்கள் ஜோதிமுருகனைத் தாக்கியதோடு, நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். வேலை கிடைக்காத கோபத்தில் பேராசிரியை ஜெனிபாவை ஜோதிமுருகன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. வேலை பறிபோனதால் மனைவியும் அவரை மதிக்காமல் இருந்துள்ளார். இந்த விரக்தியால் ஜோதிமுருகன் இவ்வாறு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது ஜோதிமுருகன் மனநோயால் சற்றுப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஜோதிமுருகன் நண்பர்களிடம் பேசினோம். "ஜோதிமுருகன் தற்போது பி.ஹெச்டி படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார். பேராசிரியர் ஜெனிபா இவரை அவரது அலுவலக வேலைகளைப் பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தினார். இதனிடையே, தன்னை கெளரவ விரிவுரையாளராக நியமிக்கும்படி பலமுறை ஜோதிமுருகன் கேட்டுள்ளார். ஆனால், ஜெனிபா மறுத்துவிட்டார். ஜோதிமுருகனின் மனைவி அரசு ஆசிரியராக இருப்பதால் இவர் வேலைக்குச் செல்லவில்லை என்று அடிக்கடி சண்டைபோட்டுள்ளார். ஜோதிமுருகன் தன் நிலைமையை எடுத்துக்கூறியும் ஜெனிபா அவரைத் தொடர்ந்து அலுவலக வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ஜோதி முருகன் விரக்தியில் இப்படி ஒரு காரியம் செய்துவிட்டார்" என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக