வியாழன், 28 செப்டம்பர், 2017

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22, 2016 இரவு நடந்தது என்ன?



ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22, 2016 இரவு நடந்தது என்ன?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்படும் நிலையில், அது குறித்து விசாரணை செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, அதாவது மருத்துவ மொழியில் நோயாளியின் உடல்நிலை அறிக்கை (patient care report) புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு, ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இரவு 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. 10:01-க்கே அப்போலோவில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் போயஸ் இல்லத்தை அடையும்போது மணி 10:06. ஆம்புலன்ஸில் இருந்து விரைந்து சென்ற 3 பேர் கொண்ட மருத்துவக்குழு, போயஸ் தோட்ட இல்லத்தின் முதல் தளத்திற்கு சென்றது. அங்கு மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்த முதல்வரை தட்டி எழுப்ப முயற்சித்துள்ளனர். அசைவு மட்டுமே இருந்ததும், முதல்வரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தமானது 140/70 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், நிமிடத்திற்கு சராசரியாக 72 என இருக்க வேண்டிய இதயத்துடிப்பானது 80 ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை அளவானதும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. சராசரி மனிதனுக்கு 120 எம்ஜி இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவானது ஜெயலலிதாவுக்கு 508 எம்ஜி என்ற அபாய நிலையில் இருந்ததும் நமக்கு கிடைத்துள்ள உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, ஜெயலலிதாகாய்ச்சல் மற்றும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் உடலில் 100% இருக்கவேண்டிய ஆக்சிஜன் அளவு 45% என்ற அபாய நிலையிலேயே இருந்திருக்கிறது.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று இரவில் அவரது இல்லத்தில் நடந்தவை என பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், ஜெயலலிதாவின் உடலில் எந்த பகுதியிலும் காயமோ, புண்களோ இல்லை என்பதற்கான குறிப்பும் நமக்கு கிடைத்த ஆதாரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சர்க்கரை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், தைராய்டு, நிமோனியா காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் இருந்ததாக மருத்துவ உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக