யார் இந்த தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு?
அரியலூர் வீரத் தமிழச்சி அனிதாவின் மரணத்தை தாங்க முடியாமல் சாதி மதம் இனம் வேறுபாடின்றி தமிழக மக்கள் மனபாரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த போராட்டத்தை திசை திருப்பும் விதமாக பாசிச பாஜகவின் அடிவருடி, கைக்கூலி மற்றும் அரசியல் அடிமை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இந்தச் சாவிற்கு தூண்டுதலாக இருந்ததாக தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவை அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக பிரச்சனைகளுக்காக போராடும் அனைத்துப் போராளிகளுக்கும்
தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு யார் என்பது தெரியும்.
அவரைப் பற்றி அறியாதவர்களுக்கு என் அனுபவத்தில் நான் சொல்லும் சிறிய விளக்கம்தான் இது!
நான் சென்னையின் புகழ் பெற்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன் , நான் கடந்த பத்து ஆண்டுகளாக தோழர் பிரின்ஸ் அவர்களுடன் சமூகம் சார்ந்த பல போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன்.தோழர் பிரின்ஸ் தம் வாழ்க்கையின் பெரும் பகுதியை பல்வேறு சமூக அவலங்களை எதிர்த்து துணிவுடன் போராடுவதிலேயே கழித்தவர். அவரைப் பற்றி மேம்போக்காக தெரிந்தவர்களுக்கு அவர் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளராக இருந்துகொண்டு வெறும் கல்வி சார்ந்த விடயங்களுக்காக மட்டும் போராடி வருபவர் எனத் தெரியும், ஆனால் கல்வி சார்ந்த விடயங்கள் மட்டுமின்றி சாதீயக் கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள், காவிரி நீர் பிரச்சனை, தமிழீழம் சார்ந்த பிரச்சனைகள், தீண்டாமைக் கொடுமை மற்றும் கொலைகள், நாட்டின் அடிப்படை பிரச்சனைகள் ஆகிய பிரச்சனைகளுக்காகவும் துணிந்து போராடியிருக்கிறார்.
நாட்டில் ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது அதைப் பற்றி ஒரு பொது விவாதம் அல்லது கலந்துரையாடல் செய்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டுமென விரும்பினால் தோழர் பிரின்ஸ் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்தால் போதும், உடனே நாள் குறித்து இடமும் தேர்வு செய்து நம்முடைய போராட்டக் குணத்திற்கு வலு சேர்ப்பார். மிக எளிமையாக நடக்கும் அப்படிப்பட்ட கூட்டத்தின் அரங்கிற்காக சில நேரங்களில் தனியார் அரங்கை வாடகைக்கு ஏற்பாடு செய்துவிடுவார், அவ்வாறு ஒருமுறை ஏற்பட்ட நிகழ்வில் தனியார் அரங்கிற்கு வாடகைக்கு கொடுக்க பணம் இல்லாததால் கூட்டத்தினரிடம் துண்டு ஏந்தி நிதி கேட்டு அந்தப் பணத்தில் வாடகையை செலுத்தினார், அந்த நிகழ்வு அவரின் மீதான கூடுதல் மதிப்பை என் மனதில் நிலை நிறுத்தியது! கல்லூரியில் நடக்கும் சமூகம் சார்ந்த கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக அவரைப் பலமுறை அழைத்திருக்கிறேன், அப்போதெல்லாம் எந்த மறுப்பும் சொல்லாமல் மிக எளிமையாக தன் சொந்தச் செலவில் பேருந்திலோ அல்லது ஆட்டோவிலோ வந்து கலந்து கொண்டு தன் கருத்துகளை மாணவர்கள் மத்தியில் விதைத்துச் செல்வார், நிகழ்ச்சியில் அளிக்கப்படும் நினைவுப் பரிசுகளைக் கூட ஏற்க மறுத்துவிடுவார், காரணம் கேட்டால் என்னுடைய கருத்துக்கள் இத்தனை மாணவர்களைச் சென்றடைந்ததே எனக்கு சிறந்த பரிசு என பதிலளிப்பார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில்
நாட்டின் அவலங்களுக்கெதிராக
அரசியல் கட்சி சாராத எந்த அமைப்பு போராட்டம் நடத்தினாலும் தன்னுடைய ஆதரவைத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் சென்னையில் அவர் இருக்கும் பட்சத்தில் ஒரு சாமானியனாக நேரடியாக கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பைச் செய்வார்.
பாஜக அரசு
புதிய கல்விக் கொள்கை வரைவை வெளியிட்ட போது அதைத் திறம்பட ஆராய்ந்து அதன் தீமைகளையும், வலிந்து திணிக்கப்படும் பார்ப்பன மனு தர்மத்தையும் எதிர்த்து தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் வீதிப் பிரச்சாரம் செய்து சமூக விழிப்புணர்வை ஊட்டினார், மேலும் அறிவுசார் கல்வியாளர்களும் இந்த வரைவின் பார்ப்பன உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் விதமாக பல்வேறு கல்லூரிகளில் கருத்துரை மூலம் பேராசிரியர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, முதல் தலைமுறை மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல்வேறு போராட்டங்கள் வாயிலாகவும் தொலைக்காட்சி விவாதங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்தவர் தோழர்.பிரின்ஸ்.
தமிழகத்தின் சமச்சீர் கல்விக்கான போராட்டத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது போல், நீட் விவகாரத்திலும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சட்டப் போராட்டங்கள் நடை பெற்ற நேரத்தில் இந்த நீட் விவகாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் சட்டப் போராட்டங்களுக்கு ஆறுதலாக இருந்து பல்வேறு உதவிகளைச் செய்தவர் தோழர் பிரின்ஸ். நீட் விவகாரத்தில் நீதி கிடைக்கும் பட்சத்தில் ஒரு அனிதாவுக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட ஓராயிரம் அனிதாக்களுக்கும் மருத்துவக் கனவு நனவாகும் என்ற நல்ல நோக்கத்தில் அல்லும் பகலும் பாடுபட்டவர் தோழர் பிரின்ஸ்.
மாநில அரசின் தவறான நடவடிக்கைளாலும் மத்திய அரசின் வறட்டு பிடிவாதத்தாலும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக நடந்துகொண்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகளாலும் மனமுடைந்திருந்த சகோதரி அனிதா தன்னுடை மருத்துவக் கனவு நனவாகாமல் போய்விட்டதே எனக் கருதி தம்மையே மாய்த்துக்கொண்டார், தம்மையே தியாகம் செய்து போராட்டங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய தோழர் முத்துக்குமார், தோழர் செங்கொடி ஆகியோர் வரிசையில் இணைந்து கொண்டார் போராளி தோழர் அனிதா!
போராட்டங்கள் தோற்கலாம் ஆனால் போராளிகள் தோற்கக்கூடாது என்ற கூற்று நம் நடைமுறையில் இருந்தபோதும் சில நேரங்களில் காலச் சூழல்கள் இத்தகைய போராளிகளைத் தோற்கடித்துவிடுகிறது!
சகோதரி அனிதாவின் சாவில் கூட அரசியல் செய்து பிழைக்க விரும்பும் பாசிச பாஜக தன் கைக்கூலியான கிருஷ்ணசாமி மூலம் நாள்தோறும் ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவதோடு மட்டுமல்லாமல் தோழர் பிரின்ஸ் போன்ற சமூகப் போராளிகளின் போராட்டக் குணத்தை நசுக்கும் விதமாக அனிதாவின் சாவிற்கு தோழர் பிரின்ஸ் போன்றோரின் தூண்டுதல் தான் காரணம் என நச்சுப் பிரச்சாரம் செய்து வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு தவறான நடவடிக்கைகளை தன் போராட்டங்கள் மூலம் தட்டிக்கேட்ட தோழர் பிரின்ஸின் குரல் வளையை நெறிக்கும் விதமாக அவரைப் பற்றி தவறான தகவல்களை பொய்ப்பிரச்சாரம் செய்து அவரின் போராட்டக் குணத்தை மழுங்கடிக்கச் செய்ய கிருஷ்ணசாமி போன்ற கைக்கூலிகளை பயன்படுத்துகிறது பாசிச பாஜக.
"மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்கவிடுவதில்லை" என்றார் தோழர் மாவோ. அவரின் கூற்றைப் போல போராளிகள் சும்மா இருந்தாலும் ஆட்சியாளர்கள் சும்மா இருக்கவிடுவதில்லை என்ற நிலைக்கு வந்து இன்றைக்கு கிருஷ்ணசாமியின் முகத்திரையை கிழித்து அவரின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்கிறார்கள் தோழர் பாலபாரதி போன்ற அரசியல்வாதிகள்.
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், மாணவர் அமைப்புகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், மற்றும் சமூக நலன் சார்ந்த இயக்கங்கள் ஆகியவை பல்வேறு வடிவங்களில் தம் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர், இந்தப் போராட்டங்கள் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும், அனிதாவின் படுகொலைக்கு நீதி வேண்டியும் நடப்பதோடு மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக நடந்தேறி வருகின்றது!
உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் மறுமலர்ச்சிக்காகவும் மத்திய அரசை எதிர்த்து போராடுபவர்களை *"தேச விரோதி"* என முத்திரை குத்திவிடுகிறது பாசிச பாஜக.
தேச விரோதி எனத் தம்மை யார் அழைத்தாலும் கோபப்பட்டு வெகுண்டு எழாமல் பெருமைதான் கொள்கிறார்கள் தோழர் பிரின்ஸ் போன்ற போராளிகள், எனக்கும் அந்தப் பெருமை உண்டு!
நன்றி! வணக்கம்!
இப்படிக்கு
உரிமைகளுக்காக போராடும்
தேச விரோதி!
- Arul Kamaraj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக