ஞாயிறு, 5 நவம்பர், 2017

“சென்னையில் இனி மழை நீர் தேங்காது! நிறைவேற்றிக் காட்டுகிறேன்!”- தமிழக அரசுக்கு பொன்ராஜ் சவால்!



“சென்னையில் இனி மழை நீர் தேங்காது! நிறைவேற்றிக் காட்டுகிறேன்!”- தமிழக அரசுக்கு பொன்ராஜ் சவால்! Thanks- Nakkheeran

“சென்னையில் இனி மழை நீர் தேங்காது! நிறைவேற்றிக் காட்டுகிறேன்!”- தமிழக அரசுக்கு பொன்ராஜ் சவால்! “மூன்றே ஆண்டுகளில் சென்னையை இந்த துயரத்தில் இருந்து மீட்டுக் காட்டுகிறேன் ” என்று தமிழக அரசுக்கு சவால் விடுகிறார் அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி வெ.பொன்ராஜ். அவரது ஆதங்கம் இதோ –
அமைச்சர் மறைத்த மழை நீர் விஷயம்!
“மழை சிறிதுதான். ஆனால் சென்னையில் எங்கும் மழை நீர் தேக்கம், சாலை நெடுகிலும் தண்ணீர் தேக்கம், நீர் வழிய வழியில்லை. 10 முதல் 20 சதவீதம்தான் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பியிருக்கின்றன. தாழ்வான பகுதிகளில், ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விட்டது. பெரிய மழை இல்லை. 5 செ.மீ முதல் 30 செ.மீ மழை தான் கடந்த சில நாட்களில் பெய்திருக்கிறது . இன்றைக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும், காவல்துறையும் ஒருங்கிணைந்து நன்றாக செயல்பட்டு, நிலைமையைச் சமாளித்து வருகிறார்கள். அதற்காக தமிழக அரசை பாராட்டலாம். அதே நேரத்தில், இந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுகளினால்தான், இன்றைக்கு சிறு மழைக்கே சென்னையில் மழை நீர் வடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
‘அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கன மழை அதிகமாகப் பெய்தால் தண்ணீர் தேங்கும் தான், தெருவில் மழை நீர் தேங்கும் தான். ’ என்று கூறுகிறார் அமைச்சர் வேலுமணி. அவரது கூற்றில் உண்மை இருந்தாலும், ஒன்றை அவர் மறைத்துவிட்டார். அதாவது, அமெரிக்காவில் தேங்கிய மழை நீர் எவ்வளவு நேரம் தேங்கி நிற்கும் என்பதை அமைச்சர் சொல்லவில்லை. அங்கெல்லாம் சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்துவிடும் என்பதுதான் வரலாறு. அப்படியென்றால் சென்னையில் ஏன் பல நாட்களாக வடியவில்லை? என்ற கேள்வி எழும் அல்லவா?

தமிழக அரசு இயங்கும் லட்சணம்!
சென்னையில் பல்லாயிரம் கோடிகளில் உருவாக்கப்பட்ட மழை நீர் வடிகால்கள் அனைத்தும் குப்பைகளால், திடக் கழிவுகளால், மண்ணால் அடைக்கப்பட்டு விட்டன. நீர் செல்ல வழியில்லை. இதற்குக் காரணம் - நம்மை ஆண்ட, ஆளுகின்றன அதிகார வர்க்கத்தின், அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஊழலும், செயலற்ற தன்மையும்தான். இன்றைக்கு ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனை உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள். அந்தக் குடியிருப்புகள் ஒன்றில் கூட சிக்கலில்லாத சாக்கடை அமைப்பு இல்லை. தாராளமாக வெளியேறும் மழை நீர் வடிகால் அமைப்பு இல்லை. தரைக்குக் கீழான மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு பிரம்மாண்டமாக எங்கும் உருவாக்கப்படவில்லை. ஆனால், இதை உருவாக்க வேண்டிய மாநகராட்சி அமைப்பு சென்னையில் இருக்கிறது. இதற்கு அனுமதி கொடுக்கும் வானளாவிய அதிகாரம் படைத்த டி.டி.சி.பி.யும் ( DTCP ) இயங்கவே செய்கிறது. இவை அனைத்தையும் நிர்வகிக்கின்ற அமைச்சரவையும் இயங்காமல் இல்லை. இதற்காக, வருடம் தோறும் கோடிக்கணக்கில் பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. வருடம் தோறும் ஆயிரக்கணக்கான கோடிகள், இதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு செலவழிக்கப்படுகிறது. கூவத்தை சுத்தப்படுத்த வருடம் தோறும் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்யப்படுகிறது. என்ன பிரயோஜனம்? ஒவ்வொரு ஆண்டும் இதே பிரச்சினை தொடரவே செய்கிறது.

பிரச்சனைகள் யாவும் மறக்கடிக்கப்படும்; மறந்துவிடுவோம்!
சிறு மழைக்கே நீர் தெருவில் தேங்குகிறது. உடனே ஊடகங்கள் அலறுகின்றன. வாடஸ்ஆப்பில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. மக்கள் மத்தியில் பய உணர்வை ஏற்படுத்துகிறார்கள். கடைசியில் மக்கள் வேதனைப்படுகிறார்கள்; சிரமப்படுகிறார்கள். 2 குழந்தைகள், மற்றும் சில பேர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்திருக்கின்றனர். மழை நின்றவுடன் இந்தப் பிரச்சனை இத்தோடு மறைக்கப்படும்; மறக்கப்படும். ஆம். நீட் பிரச்சனை மறக்கடிக்கப்பட்டுவிட்டது. நெடுவாசல் பிரச்சனை மறக்கடிக்கப்பட்டுவிட்டது. விவசாயிகள் பிரச்சனை மறக்கடிக்கப்பட்டுவிட்டது. பண மதிப்பிழப்பால், ஜிஎஸ்டியால் பல்லாயிரக்கணக்கான சிறு மற்றும் குறுந்தொழில்கள் அழிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்து, தெருவுக்கு வந்து விட்டதும் மறக்கடிக்கப்பட்டு விட்டது.
நமது வாழ்க்கையை வாழவே தினமும் சிரமப்படும் நிலையில், இதைப்பற்றி யெல்லாம் நினைப்பதற்கு, நமக்கு எங்கே நேரம் இருக்கிறது? ஏனென்றால், அடுத்து நடிகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? என்று மீடியா அவர்கள் பின்னால் சென்றுவிடும். அதைப் பார்த்து விவாதிப்பதற்குத்தான் ஊடகங்கள் நமக்கு கட்டளை இட்டிருக்கின்றனர். எவனையாவது, குண்டக்க மண்டக்க ஆபாசமாகத் தீட்டினால், நமது வீடியோ வைரலாக அனைவரிடமும் சென்று விடும், ஜாதி, மத, இன, மொழி மோதலை உருவாக்கினால், ஏதாவது ஒரு விளம்பரம் கிடைத்துவிடும். இதை விட்டு விட்டு அரசுக்கு அறிவுரை கூறினால், ‘இவனுக்கு வேறு வேலை இல்லை’ என்ற பட்டம்தான் கிடைக்கும்.
அறிவுறுத்தினேன்; ஆலோசனை தந்தேன்? கேட்டார்களா?
2015 ஆம் ஆண்டு இந்த அதிமுக அரசுக்கு அறிவுரை கூறினேன். பல்வேறு நாடுகளின் தொழில் நுட்ப செயல்முறைகளைக் கண்டு, உணர்ந்து, அறிந்து, தெளிந்து, அதை நம் நாட்டிற்கு ஏற்ற முறையில் உருவாக்கிட ஆலோசனைகள் தந்தேன். அதைக் கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு செயல்படுத்தி இருந்தால், இன்றைக்கு சென்னையில் மழை நீர் தேங்கி இருக்காது. எந்த அறிவுரையையும் செயல் படுத்துபவர்களாக இவர்கள் இல்லை. பிரச்சனை வரும் போது சமாளித்து விட்டு, அடுத்த வசூலுக்குச் செல்பவர்களிடம் அறிவுரை எடுபடாது.
சவாலை ஏற்றுக்கொள்ளுமா தமிழக அரசு?
சரி, என்ன செய்யலாம்? ஒரு சவால் விடலாமா? சரி, தமிழக அரசுக்கு ஒரு சவால்? நான் சொல்வதைக் கேட்டு செயல்பட, ஒரு அதிகார அமைப்பை உருவாக்கி என்னிடம் கொடுங்கள்.
மூன்றே ஆண்டுகளில் சிக்கலில்லாத சாக்கடை, தேங்காத மழை நீர் வடிகால் அமைப்பு, பூமிக்கு கீழ் மின்சார கட்டமைப்பு, சுத்தமான கூவம் . இவற்றை உருவாக்கிக் காண்பிக்கிறேன். அது மட்டுமல்ல. இதன் மூலம், மாதம் ஒன்றுக்கு ரூ 20 கோடி வருமானம் சென்னை மாநகராட்சிக்கு கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்தித் தருகிறேன்.
எனது சவாலை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு தயாரா? இல்லையென்றால், நாங்களே உருவாக்கிக் காட்டுவோம் என்று சொல்லி, நான் மேலே சொன்னவற்றை செயல்படுத்திக் காண்பியுங்கள் பார்ப்போம்!” என்று தமிழக அரசை சவாலுக்கு அழைக்கிறார் பொன்ராஜ்.
டாக்டர் அப்துல் கலாம் மற்றும் மேஜர் ஜெனரல் சாமிநாதனோடு இணைந்து, நீடித்த நிலையான மாநில வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை தயாரித்தவர் பொன்ராஜ். அத்திட்டத்தை, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, சத்தீஸ்கர், மிசோராம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா போன்ற 15 மாநிலங்களுக்கு அளித்திருக்கின்றனர். அதனால், பொன்ராஜுவின் சவாலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசு சீரியஸாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக