# அறம் விகடன் விமர்சனம்
எது #அறம்? எது அறம் சார்ந்து வாழ்தல்? கலெக்டர் 'மதிவதனி'யின் மூலம் ஒரு நியாயமான தர்க்கத்தை 'அறம்' திரைப்படத்தில் வைக்க முயன்றிருக்கிறார், இயக்குநர் #கோபி.
இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட ‘விஜயசாந்தி’களுக்கும், ‘சிநேகா'களுக்கும் இடையில் ஒரு பெண் ஆளுமையை திரையில் வார்த்திருக்கிறார். 'மதிவதனி'யாக வரும் நயன்தாராவின் மிடுக்கு ஆரம்பத்தில் தொடங்கி இறுதிவரை படத்தைக் துடிப்புடன் கடத்திச் செல்கிறது...#அறம்
திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே, வறட்சியில் வாடும் கிராமங்கள். மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தை. அதை மீட்க நடைபெறும் போராட்டம். இதற்கு நடுவே தன்னால் இயன்றவரை அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர்.
தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க முடியாத நிர்வாக சீர்கேட்டினைப் பற்றி மட்டும் பேசாமால், பிரச்னையின் வேர்வரைப் பாய்கின்றன வசனங்கள். “என்னைக்கு தண்ணிய பாட்டில்ல அடச்சி விக்க ஆரம்பிச்சாங்களோ, அன்னைக்கு ஆரம்பிச்சது இந்தப் பிரச்சன'' என்று தண்ணீர் தனியார்மயமானதையும், அரசின் தண்ணீர் சார்ந்த கொள்கையையும் ஒரே வரியில் பொட்டில் அறைந்தார்போல் சொல்கிற வசனம் அருமை. போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்காக கிராமத்துக்குள் நுழையும் மருத்துவரிடம், கிராமவாசி தண்ணீர் கேட்க, அதற்கு மாற்றாக நர்ஸ் ஆரஞ்சு நிற குளிர்பான பாட்டிலை நீட்டும்போது, நீர்நிலைகளெல்லாம் குளிர்பானங்களாக உறிஞ்சப்படுவதை இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார். ராட்சத போர்களால் பூமியின் அடிமடிவரை பெரு நிறுவனங்களை தாராளமாக தண்ணீர் எடுக்கவிட்டுவிட்டு, 'Wastage of water is a criminal offence' என சாமான்ய மக்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். ஒரு பக்கம் மேட்டுக்குடிகள் வாழும் விடுதிகளுக்கு லாரி லாரியாக தண்ணீர் செல்ல, இன்னொரு பக்கம் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கீழ்த்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள் செத்துப் பிழைக்கிறார்கள் என்ற உண்மையை போகிற போக்கில் உடைத்துவிட்டுப் போகிறது படம்.
படத்தில் பேசப்படும் மற்றொர் அரசியல், அந்த மக்களின் தொழில். ஒரு காலத்தில் விவசாயக் கூலிகளாக இருந்த மக்கள், அதே நிலம் பிளாட் போட்டு விற்கப்படும்போது, அங்கு பெயின்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் குழந்தையை மீட்க அவ்வளவு சிரமங்களை மேற்கொள்ளும்போது, இன்னொரு புறம் ராக்கெட்கள் விடப்படுகின்றன. இங்கு கண்டுபிடிப்புகளே நடப்பதில்லை என்பதை மறுத்து, அந்தக் கண்டுபிடிப்பால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அவை அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை நமக்கு உணர்த்தும் காட்சி அது. விண்வெளி அறிவியலில் இந்தியாவை புலிப்பாய்ச்சல் பாயவைக்கும் இத்தனை விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் இருக்கும் நாட்டில், இன்றுவரை சாக்கடையை அள்ளவும், மலக்குழியைச் சுத்தம் செய்யவும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க முடியாதா? வல்லரசு கனவு காணும் நாட்டுக்கு அது இயலாத காரியமா என்ன? அந்த அசட்டைதான் ஆழ்துளை கிணற்றில் விழும் உயிர்களின் மீதும் அரசுக்கு.
இதுவரை இந்தியாவில் 381 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்துபோயிருக்கிறார்கள் எனும்போது, அது விபத்தல்ல, கொலை என்கிறது படம். படத்தில், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையைக் காப்பாற்ற ஒருவர் ஒரு ரோபோவை கண்டுபிடித்திருக்கிறார். ஆனால், அவரைக் கண்டுபிடிக்கவே ஒரு நாள் தேவைப்படுகிறது. மக்களுக்கான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்துபவர்களின் நிலை அதுதான். அவர் போன்றவர்களை அரசு ஊக்குவிக்குமா, அல்லது பெரு நிறுவனத்தில்தான் அவர்களுக்கு வேலைகிடைக்குமா? இன்னொரு பக்கம், ராக்கெட் புறப்பட ஆயத்தமாகும் காட்சிகள் காட்டப்படுகின்றன. இப்படி படம் பேசும் ஒப்பீடுகள் அனைத்தும் படம் முடிந்த பின்னரும் மனதில் தங்குகின்றன.
நயன்தாரா
படத்தில் வரும் குடும்பத் தலைவிகள், அவர்களுக்கு இடையேயான உறவு, பெண்கள் உலகின் அன்புமிகு ஆறுதல் பக்கங்களைக் காட்டும் அந்தக் காட்சிகள், அருமை. குறிப்பாக, தன் பிள்ளையை மீட்கப் போராடும் பெற்றோராக நடித்திருக்கும் சுனுலட்சுமி, ராமச்சந்திரன் துரைராஜ் இருவரும் நமக்கும் அந்தத் தவிப்பைக் கடத்துகிறார்கள். அண்ணன் 'முத்து (சின்ன காக்கா முட்டை ரமேஷ்)' - தங்கை 'தன்ஷிகா' இவர்களுக்கு இடையேயான உறவைக் க்ளிஷே காட்சிகளாகக் காட்டாமல், முதலிலும் முடிவிலும் அண்ணன், தங்கையைச் சுமக்க வைத்திருப்பது அழகு. இயல்பான நடிப்பால் அந்தக் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறாகள் குட்டீஸ் இருவரும். குடோஸ்!
''உன்ன கபடி ஆட விடாதவுங்க; இவன் நீச்சல் அடிக்காம படிக்கப்போனா படிக்க மட்டும் விட்டுருவாங்களா?” என்று தன் கணவனிடம் கேட்கிறார் ஒரு மனைவி. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த அந்த அப்பா, “மரியாதைக்காகதான் கல்வி” என்று பதிலளிக்கிறார். ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் கல்வி என்பது பணத்துக்கானது என்பதையும் தாண்டி, அவர்களுக்கான சமூக மரியாதையையும் பெற்றுத்தர அவசியமானது என்பதை மேட்டுக்குடி மனங்களுக்கு பதியவைக்க முயல்கிறார் இயக்குநர். தண்ணீருக்காக மக்கள் சாலையை மறித்துப் போராட, பள்ளி வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் நகர முடியாமல் நிற்க, ''பசங்கள்லாம் ஸ்கூல் போகணும் வழிய விடுங்க'' என்கிறார் 'மதிவதனி'. போராட்டக் கூட்டத்திலிருக்கும் ஒரு பருவ வயதுப் பெண், ''அப்போ நானெல்லாம் ஸ்கூல் போக வேண்டாமா?" என்று கேட்குமிடம், நச்.
''ஒரு குழந்தையைக் காப்பாற்ற இன்னொரு குழந்தையை அனுப்பலாம்’' என்ற முடிவுக்கு முன்னால், இயக்குநர் இன்னும் சரியான ஜஸ்டிஃபிகேஷனை கொடுத்திருக்கலாம். படத்தில், ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தை இடையிடையே காட்டுகிறார்கள். அதில் ஒருவராகக் கலந்துகொள்ளும் வழக்கறிஞர் அஜிதாவின் குரல், அங்கு ஒலிக்கவே இல்லையே ஏன்? 'ஹீரோயின் சினிமா'வில் வரும் ஒரு விவாத மேடையில், பெண்ணுக்கு உரிய இடம் கொடுத்திருக்க வேண்டாமா? மீடியாக்காரர்கள் செய்திக்காக அலைவார்கள் என்ற விமர்சனங்கள் எழும் சூழலில், குழந்தை மீட்டெடுக்கப்படும்போது அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழும் காட்சிக்கு நன்றி கோபி.
“நாமளே நெனச்சாலும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது” என்று தீயணைப்புத் துறையினர் கை விரிக்கிறார்கள். அதாவது ஒரு நேர்மையான அதிகாரியாக நின்று உழைக்க முற்பட்டாலும், இந்த ‘அமைப்புக்குள்’ இவர்கள் கையில் அதிகாரம் இல்லை. தீயணைப்புத்துறை வண்டி அமைச்சர் வீட்டுக்குச் செல்கிறது. இப்படி பல்வேறு சிக்கல்கள். ஆனாலும், அரசியல்வாதிகளின் தலையீடுகளையும் மீறி ஓர் அதிகாரியாக தன்னால் இயன்றளவு முயற்சி செய்கிறார் ‘மதிவதனி’. பொதுவாக, அடக்கமான குடும்பப் பெண், தொண்டை வறண்டுபோக கத்தி, ஆக்ஷன் காட்சிகள்வரை செல்லும் புதுமைப்(!) பெண், லூஸுப் பெண், அழகுப் பெண்... என கோடம்பாக்க க்ரியேட்டர்கள் தங்கள் பட நாயகிகளுக்குத் தரும் ஷேடுகளில் செயற்கைதனமே மிஞ்சியிருக்கும். ஆனால், உயர் பொறுப்பிலிருக்கும் பெண் ஆளுமையான நயன்தாரா, அந்தப் பணிக்கு உண்டான எதார்த்த அழுத்தங்களுடன், நிதர்சனத்துக்கு நெருக்கமான பிம்பமாக நெஞ்சில் நிற்கிறார். அந்தக் கம்பீரத்துக்குப் பொருந்திப்போகும் உடைகளும், அந்த ஆளுமைக்கான உடல் மொழியும் என, ஆசம் நயன்தாரா!
அறம்
இப்படியான ஒரு கதைக்கு, ஓர் ஆண் கலெக்டரை கதாநாயகனாக்கி ஸ்கிரிப்ட் எழுதி ஹீரோயிஸம் காட்டாமல், அந்தக் கதாப்பாத்திரத்தை ஒரு பெண்ணாக வார்த்தெடுத்த இயக்குநருக்கு ஒரு பொக்கே. கதாநாயகர்கள் மட்டுமே அரசியல் பேசும் தமிழ் சினிமாவில், ஒரு கதாநாயகி அரசியல் பேசுகிறார். அம்பேத்கருடைய மேற்கோள்களைச் சுட்டுகிறார். திரையில் அதிகாரிகளிலிருந்து அமைச்சர்கள்வரை வெளுத்து வாங்கி, நேர்மையாக, தைரியமாக முடிவெடுக்கும் இந்த 'மதிவதனி', பல குட்டி மனுஷிகளுக்கு கலெக்டர் கனவு கொடுக்கலாம்.
ஒரு புறம் அரசியல்வாதிகளால் ஏற்படும் சிக்கல்கள், மறுபுறம் அரசின் கொள்கை சார்ந்த சிக்கல்கள், இவற்றுடன் நிர்வாகச் சிக்கல்கள் என அனைத்தையும் ஒரே கோட்டில் எடுத்துச் செல்கிறது 'அறம்'. அழகுப் பதுமைகளாக கதாநாயகிகள் உருவேற்றப்படும் தமிழ் திரைப்படச் சூழலில், 'மதிவதனி'களை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கும் #கோபிக்கும், நயன்தாராவுக்கும் ஹை ஃபைவ்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக