வெள்ளி, 10 நவம்பர், 2017

முதன் முறையாய்த் தமிழில் ஒரு மக்கள் சினிமா


முதன் முறையாய்த் தமிழில் ஒரு மக்கள் சினிமா
--------------------------------------------------
சாதாரணக் கிராமத்தில் முள்ளுக்காட்டில் வறுமையோடு மல்லுக்கட்டும் மனிதர்களில் ஒரு குடும்பம். பிழைப்பிழந்து, பிளாட்டுகளுக்காக மொட்டையடிக்கப்பட்ட நிலத்தில் ஊன்றப்பட்ட பிளாட் கல்லுகளுக்குப் பெயிண்ட் அடிக்கும் வேலை பார்க்கும் அப்பன், நீச்சல் வீரனாகும் கனவோடு நீண்ட நேரம் தம் பிடித்து நீருக்குள் இருக்கிற திறனுள்ள அரசுப்பள்ளியில் படிக்கிற மகன். அவனுக்கு அம்மா இடுப்பை விட்டு இறங்காத தன்மை கூட மாறாத பாசக்காரச் சிறு தங்கை. சிப்பி கழுவும் வேலை, முள் வெட்டும் வேலை என்று உதிரி வேலைகளாகப் பார்க்கிற அம்மா.

அம்மா முள் வெட்டும் வேலையில் இருக்கும் போது, மற்ற குழந்தைகளோடு முள்ளுக்காட்டுக்கு அப்புறம் உள்ள வெற்று நிலத்தில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர் இவர்களது குழந்தைகளும்.

திடீரென்று மகளைக் காணாமல் அம்மா பதற்றத்தோடு தேடத் துவங்குகிறாள்.  திடீரென உடன் வேலை பார்ப்பபோரின் அலறல் சத்தம். இவள் ஓடுகிறாள். மற்ற பெண்கள் இவளைத் தடுக்கின்றனர். அங்கே நிலத்தில் தோண்டப்பட்டிருந்த ஆள்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து விட்டாள். அங்கிருந்து படம் பற்றிக் கொள்கிறது. அப்புறம் படம் முடியும் வரை திகு திகு வென்று கோபி நயினாரின் திரைக்கதை அதிகார வர்க்கத்தின் பொட்டில் ஒவ்வொரு அடியாக இறக்குகிறது.

குழந்தையை மீட்கப் போராடுகின்ற சமூக உணர்வுள்ள ஒரு மாவட்ட ஆட்சியர். அவரைச் சுற்றியுள்ள புரையோடிப் போயுள்ள அதிகார வர்க்கம். பலகோடி செலவில் ராக்கெட் விடுகின்ற திறனுள்ள அதிகார வர்க்கம், ஆழ்துளையில் மாட்டிக் கொண்டுள்ள ஒரு குழந்தையை மீட்க முடியாமல் தினறுகிறது. அதிகாரவர்க்கத்தின் அதிகார ஆடைகள் ஒவ்வொன்றாகக் கிழிந்து அது முழுக்க அம்மணமாகிறது. மக்களோ தங்கள் கூட்டு உணர்வோடு நம்பிக்கையோடு தன் முயற்சியில் இறங்குகிறார்கள்...

அதிகாரத்தை மக்களுக்கானதாக மாற்ற முயல்கிற கலெக்டர் அதிகாரத்தின் விதிப்படி அதிகார எதிரியாகிறார். அதிகாரம் துறந்து அறத்தொடு நிற்க நடக்கிறார்.

கோபி நயினாரின் இயக்கத்தில் வந்துள்ள "அறம்"தமிழில் முதன் முதலாக ஒரு மக்கள் சினிமா உருவாகியிருக்கிறது.

பாசாங்கற்ற மொழியில் வலுவான கதைத்தளத்தோடு பார்வையாளரையும் சேர்ந்து பயணிக்க வைக்கிற திரைக்கதையில் இயக்குநர் கோபி நயினார் பெரு வெற்றி அடைந்துள்ளார்.

இடையிடையே வருகின்ற தொலைக்காட்சி விவாதங்கள் தான் கொஞ்சம் செயற்கைத்தனத்தோடு இருந்தாலும், படத்தின் கதையோட்டத்தில் அது அத்தனை பெரிய தடுக்குக் கல் இல்லை.

நயன்தாராவை முதன் முதலாக மனிதக் கதாபாத்திரமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். நயன்தாரா அழுத்தமான நடிப்பைத் தெளிவாக வழங்கியுள்ளார்.

அதைவிடப் படத்தில் நடித்துள்ள அத்தனை சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்களிடமிருந்தும் தேவையான இயல்பு நடிப்பை வரவழைத்துள்ளார் இயக்குநர்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதையை வலுவூட்டும் சிறந்த காரணி. ஜிப்ரானின் இசை கதையோட்டத்திற்கு வலுச்சேர்க்கிறது. பாடல்கள் கதையோட்டத்தோடு இழைந்து கசிகின்றன.

கூர்மையான கதைகூறலோடு கிடைத்துள்ள சட்டகங்களின் வழியாகவே, கோபி நயினார் கதை ஆர்ப்பரிக்கும், ஒரு மக்கள் சினிமாவை மிகத் தெளிவான வலிவோடு முன்வைத்துள்ளார்.

இத்தகைய படங்களை வெற்றி பெற வைப்பது, நல்ல சமூகத்தை உண்மையில் நாடும் மக்களின் கடமை.

இத்தகைய படங்களுக்குத் தரும் ஆதரவு என்பது தமிழ் சினிமாவுக்கான புதிய திறப்புகளை மென்மேலும் உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக