ஒரு மணிநேர மழை... ஒரு கோடி லிட்டர் நீர் சேமிப்பு! - பட்டையைக் கிளப்பும் பண்ணைக்குட்டை!
கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடுமையான வறட்சியால் பாடம் கற்றுக்கொண்ட நாம், இப்போதுதான் மழைநீர் சேமிப்பு, நீர் மேலாண்மை ஆகியவை குறித்துச் சிந்திக்க ஆரம்பித்துள்ளோம். மழைநீர் சேமிப்பில் பெரிய பங்கு வகிப்பது பண்ணைக்குட்டை. பண்ணைக்குட்டை அமைப்பது குறித்துக் கருத்தரங்குகள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது ‘பசுமை விகடன்’. அதனால், பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் பண்ணைக்குட்டைகளை அமைத்து மழை நீரைச் சேகரித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அடுத்துள்ள சின்னக்கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசுந்தர்.
தன்னுடைய நிலத்தில் 1 கோடியே 25 லட்சம் லிட்டர் கொள்ளளவுகொண்ட பண்ணைக்குட்டையை அமைத்து, அதில் தளும்பத் தளும்பத் தண்ணீரைச் சேகரித்து வைத்திருக்கிறார் ஞானசுந்தர்.
ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள்கொண்ட தோப்பின் ஒரு பகுதியில் வீராணம் ஏரிபோல விரிந்து கிடந்தது பண்ணைக்குட்டை. அதிலிருந்த தண்ணீரை மோட்டார்மூலம் தென்னைக்குப் பாய்ச்சிக்கொண்டிருந்த ஞானசுந்தரைச் சந்தித்தோம்.
“எங்க ஊர்ல முக்கிய விவசாயம் தென்னைச் சாகுபடிதான். எங்க குடும்பத்துக்குப் பல இடங்கள்ல தென்னந்தோப்பு இருக்கு. பத்து வருஷத்துக்கு முந்தின வரைக்கும் எங்க பகுதியில தண்ணீர்ப் பஞ்சம் வந்ததேயில்ல. ஜூன், ஜூலை மாசங்கள்ல தென்மேற்குப் பருவமழை கிடைச்சுடும். திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி வாய்க்கால்மூலம் தண்ணி சரியா கிடைச்சிடும். அதனால, நிலத்தடிநீர் குறையாமல் இருந்திச்சு. கிணறுகள்ல முப்பது அடியிலேயே தண்ணீர் இருக்கும். சில வருஷங்களா பருவமழை கிடைக்காததால, முறையா கிடைக்க வேண்டிய தண்ணீர் வந்து சேரல. கிராமத்துல ஏரி, குளம், குட்டைகளும் வறண்டுபோய், கிணறுகள் எல்லாம் காய்ஞ்சு போச்சு. பல விவசாயிகள் லட்சக்கணக்குல செலவு செஞ்சு போர்வெல் போட்டும் பிரயோஜனமில்லாமப் போயிடுச்சு.
புள்ளமாதிரி பல வருஷம் வளர்த்துன தென்னை மரங்களை வெட்டி, சூளைக்கு அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. அந்த மாதிரி ஓர் இக்கட்டான சூழ்நிலையிலதான் நானும் இருந்தேன். அந்தச் சமயத்துல ‘பசுமை விகடன்’ புத்தகத்துல பொறியாளர் பிரிட்டோராஜ் சொல்லியிருந்த பண்ணைக்குட்டை சம்பந்தமான தகவல் வெளியாச்சு. உடனே, அவர்கிட்ட போன்ல பேசினப்போ நிறைய யோசனை சொன்னார். உடனே, இந்த 30 ஏக்கர் தோப்புல பண்ணைக்குட்டை எடுக்கலாம்னு முடிவு செஞ்சோம்” என்ற ஞானசுந்தர், பண்ணைக்குட்டையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.
“எங்க நிலத்துல தென்பகுதிதான் சரிவானது. அதனால, இந்த இடத்தைத் தேர்வு செஞ்சோம். 30 ஏக்கர் நிலத்தையும் ஒவ்வொரு ஏக்கரா பிரிச்சு, சுத்தியும் 3 அடி உயரத்துக்கு வரப்பு அமைச்சோம். ஒவ்வொரு ஏக்கர் வயல்ல இருந்தும் தண்ணீர் அடுத்தடுத்த வயலுக்கு வழிஞ்சு போய்க் கடைசியில பண்ணைக்குட்டையில சேர்ற மாதிரி வாய்க்கால் வெட்டினோம். அப்படி எடுத்ததால, மழை பெய்யும்போது ஒரு துளிகூட வீணாகாம பண்ணைக்குட்டையில் சேர்ந்திடுச்சு.
200 அடி நீளம், 150 அடி அகலம், 16 அடி ஆழம் கொண்டது இந்தப் பண்ணைக்குட்டை. 20 அடி ஆழம் தோண்டலாம்னுதான் முடிவு செஞ்சோம். ஆனா, பாறைகள் அதிகமா இருந்ததால தோண்ட முடியல. பண்ணைக்குட்டையில் தண்ணீர் இஞ்சிடாம இருக்குறதுக்காகக் கெட்டியான ‘பாலித்தீன் ஷீட்’டை விரிச்சுருக்கோம். பண்ணைக்குட்டைக்கு அடியில தென்னை நார் போட்டு, அதுமேல பாலித்தீன் ஷீட்டை விரிச்சுருக்குறதால, அதுல ஓட்டை விழாது. இதுல, ஒரு கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேகரிக்க முடியும். பண்ணைக்குட்டை எடுத்துட்டு எப்படியும் மழை கிடைச்சுடும்னு காத்திருந்தோம். எங்க நம்பிக்கை வீண்போகல. புரட்டாசி மாசத்துல நல்ல மழை கிடைச்சது. ஒரு மணி நேரம் பெஞ்ச மழையிலயே பண்ணைக்குட்டை முழுசா நிரம்பிடுச்சு. பக்கத்துத் தோட்டத்துக்காரர் மூணு உழவு மழை பெஞ்சதுனு சொன்னார். அந்தளவு மழையிலேயே குட்டை நிறைஞ்சிடுச்சு.
இப்போ, மழை பரவலா பெஞ்சதால மண்ணுல ஈரம் இருக்கு. அதனால, மரங்களுக்கு அதிகமா பாசனம் தேவைப்படலை. ரொம்ப காய்ஞ்சாத்தான் பாசனம் செய்றோம். ஐப்பசி, கார்த்திகை மாசங்கள்ல பருவமழை கிடைச்சுடுச்சுனா மார்கழி மாசம் வரை, தென்னைக்குத் தண்ணி கொடுக்க வேண்டியதில்லை. அதுக்கப்புறம் தை, மாசி, பங்குனி, சித்திரை வரையிலான 4 மாசத்துக்கு ஒருநாள்விட்டு ஒருநாள், சொட்டுநீர்மூலம் தண்ணி பாய்ச்சுறதுக்குப் பண்ணைக்குட்டைத் தண்ணி உதவியா இருக்கும். முப்பது ஏக்கர் தோப்புக்குமே, இது போதுமானதா இருக்கும்னு நினைக்கிறேன்” என்ற ஞானசுந்தர் நிறைவாக, “இந்தப் பண்ணைக்குட்டை அமைக்க 10 லட்சம் ரூபாய் செலவாச்சு. அதே நேரத்துல போர்வெல் அமைக்கிற செலவு எங்களுக்கு மிச்சமாகிடுச்சு. இதுல தண்ணி தேங்குனதைப் பார்த்ததும் எங்களுக்கே பிரமிப்பாகிடுச்சு. ஒவ்வொரு விவசாய நிலத்திலும் ஒரு பண்ணைக்குட்டை இருந்தா, தண்ணீர் பிரச்னையே இருக்காது” என்று சொல்லிவிட்டுச் சொட்டுநீர்ப் பாசனத்தில் மும்முரமானார்.
தொடர்புக்கு:
ஞானசுந்தர்,
செல்போன்: 94425 58353
சோலார் மோட்டார் பொருத்தலாம்
பண்ணைக்குட்டை குறித்துப் பேசிய பிரிட்டோராஜ், “பெரிய விவசாயிகள் மட்டுமல்ல... சிறு குறு, நடுத்தர விவசாயிகள் என அனைவரும் பண்ணைக்குட்டை அமைத்துப் பயன்பெற முடியும். நிலத்தின் அளவைப் பொறுத்துக் குறைந்தபட்சம் 3,500 ரூபாய் செலவில்கூடப் பண்ணைக்குட்டை அமைக்க முடியும்.
ஞானசுந்தருக்கு இந்தப் பண்ணைக்குட்டை மூலம் இரண்டு விதமான பலன்கள் கிடைத்துள்ளன. பண்ணைக்குட்டையில் நீர் சேமிப்பு. வயலில் வரப்புகள் அமைத்து நீர் தேக்கியதால், அவரது பண்ணைக்குள் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது என இரண்டு விதமான பலன்கள் கிடைத்துள்ளன. மின் இணைப்புக்கு வாய்ப்பில்லாத இடத்தில் பண்ணைக்குட்டை அமைப்பவர்கள், அருகிலுள்ள வேளாண் பொறியியல்துறைமூலம் மானிய விலையில் சோலார் மோட்டார்களைப் பெற்றுப் பயனடையலாம்” என்றார்.
ஜி.பழனிச்சாமி
படங்கள்: க.விக்னேஷ்வரன்
நன்றி
விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக