தடை…. தடை… தடை…. – பின் எதற்கு தீபத்திருவிழா ?.
2017 ஆம் ஆண்டுக்கான தீபத்திருவிழா வரும் நவம்பர் 23ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 2ந்தேதி மகாதீபம். மகாதீபத்தன்று மட்டும் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்ற காரணத்தினால் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்தை வணங்க தடை, கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்ய தடை, கோயிலுக்குள் வந்து பரணி தீபம், மகா தீபம் காண சாதாரண பொதுமக்களுக்கு தடை என்கிறார் கலெக்டர். ஏற்கனவே ஏற்கனவே கோயில் குளங்களில் குளிக்க தடை, தீர்த்தம் எடுக்க தடை என சில தடைகள் உள்ளன. அடுத்து கோயில் முன் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கலாமா என ஆலோசனை நடக்கிறது. அடுத்து என்னச்சொல்ல போகிறார்கள் என்பது தெரியவில்லை.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுயிருந்தாலும் இதன் வரலாறு யுகங்களை கடந்தது என்கிறது புராணங்கள். பிரம்மாவுக்கும் – விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட மோதலில் சிவபெருமான் ஜோதியாக உருவெடுத்து சாந்தமாகி மலையாக மாறியதால் மலையை சிவனாக நினைத்து வணங்குகிறார்கள் ஆன்மீகவாதிகள். கார்த்திகை மாதம் தான் சிவபெருமான் ஜோதியாக காட்சியளித்தார் என புராணத்தில் கூறியுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 13 நாள் திருவிழா நடக்கும். 10வது நாள் மலை மீது தீபம் ஏற்றுவார்கள், அந்த தீபத்தை காண நாடு முழுவதிலும்மிருந்து லட்ச கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள். 14 கி.மீ சுற்றுளவுள்ள மலையை கிரிவலம் வருவார்கள், லட்சத்துக்கும் அதிகமானவர்கள் 2662 அடி உயரமுள்ள மலை உச்சி மீது ஏறி வணங்கிவிட்டு தீபம் ஏற்றுவதை காண்பார்கள். இதன் மூலம் சிவபெருமான் அருள் புரிகிறார் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. இது காலம் காலமாக நடைபெறுவது.
இந்த ஆண்டு முதல் தீபத்தன்று மலையேற தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மகாதீபத்தன்று 3 லட்சம் பக்தர்கள் மலைமீது ஏறுகிறார்கள். வயதானவர்கள் மலையேறிவிட்டு இறங்க முடியாமல் தவிக்கிறார்கள், இதயநோய் பாதிப்பு போன்ற பல்வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள் மலையேற முடியாமல் ஏறிவிட்டு இறந்து விடுகிறார்கள் அவர்களை அடையாம் காண முடியவில்லை, மலையேறுபவர்கள் மலையில் தீவைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள், மலை மீது கடைப்போடும் வியாபாரிகள் சிறுச்சிறு நீர் ஊற்றுகளில் பெட்ரோல், சாணி கலந்துவிடுகிறார்கள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை என காரணம் கூறுகிறார் கலெக்டர். குடிநீரை அசுத்தம் செய்யும் கடைக்காரர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தால் அடுத்த முறை அந்த தவறை அவர் செய்யமாட்டார். வயதானவர்கள் ஏறாதீர்கள் என வேண்டுக்கோள் விடலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையேறி தீபம் ஏற்றுவதை பார்த்துவிட்டு இரவில் இறங்குபவர்கள் தீவைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள் என மலை அடிவாரத்திலேயே சோதனை செய்தே அனுப்புகிறது போலிஸ். இதனால் கடந்த 3 வருடங்களாக தீ வைப்பது என்பது கிடையாது. மலையேறும் பக்தர்களிடம் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு பாதுகாப்பு வழங்கமுடியாது என நெஞ்சை நக்குவது போல சென்டிமெண்டாக பேசி மலையேற தடை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல், அன்னதானம் செய்பவர்கள் அந்த இடத்தை சரியாக பராமரிப்பதில்லை. உணவு ருசியாகயில்லையென அதை வாங்கும் பக்தர்கள் சாலையில் கொட்டிவிட்டு செல்கின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதனை மிதித்தபடி செல்கிறார்கள். அதனால் கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. நாங்கள் குறிப்பிடும் ஆறுயிடத்தில் மட்டும் தான் அன்னதானம் செய்ய வேண்டும், உணவை நாங்கள் குறிப்பிடும் ஒருயிடத்தில் மொத்தமாக சமைத்து அங்கிருந்து கொண்டும் போய் அன்னதானம் வழங்க வேண்டும். இது சிரமமாக உள்ளது என்பவர்கள் எங்களிடம் பணத்தை தந்துவிட்டால் நாங்கள் காலை, மதியம், இரவு சமைத்து ஒரே வகையான உணவை வழங்கிவிடுவோம் என்கிறார். அன்னதானம் வழங்க ஏற்கனவே ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, அந்த கட்டுப்பாடுகளையெல்லாம் கடைபிடித்துக்கொண்டு தான் அன்னதானம் வழங்குகிறார்கள். கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் என்றால் அபராதம் விதிக்கலாம், அடுத்தமுறை அனுமதி தராமல் நிறுத்தலாம். அதைவிட்டுவிட்டு அன்னதானம் போடாதே, நீ காசு என்னிடம் கொடு நான் சமைத்து போடுகிறேன், நான் போடுவதை சாப்பிட்டால் சாப்பிடட்டும் இல்லையேல் வீட்டில் போய் பிரியாணி செய்து சாப்பிடட்டும் என பொதுமக்களுடனான தீப ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவிக்கிறார். ஏன் இவர்கள் அன்னதானம் போட்டால் அந்தயிடம் அசுத்தமாகாதா?, கோயில்களில் நடைபெறும் அரசின் அன்னதானம் வழங்கும் திட்டம் என்ன லட்சணத்தில் செயல்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். லட்ச கணக்கான பக்தர்கள் வரும் இடத்தில் சில அசவுகரியங்கள் இருக்கத்தான் செய்யும் அதை சரிச்செய்ய வேண்டும்மே தவிர, அதற்காக தடை செய்வது என்பது ஏற்புடையதல்ல.
அடுத்ததாக கோயிலுக்குள் 7 ஆயிரம் பக்தர்கள் வந்து பரணி தீபம், மகா தீபம் காணலாம். இது அனுமதி பாஸ் உள்ளவர்களை மட்டும்மே அனுமதிப்போம், பொதுமக்கள் அனுமதியில்லை. இந்த பாஸ் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்மே வழங்கப்படும் என்கிறார். பரணி தீபம், மகாதீபத்தை காண கோயில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதிஅட்டை அதாவது பாஸ் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பாஸ் அச்சடிக்கிறார்கள். கோயிலுக்குள் பரணி தீபத்தன்று 4 ஆயிரம் பேரும், மகாதீபத்தன்று 7 ஆயிரம் பேரும்மே அனுமதிக்கப்படுவார்கள், பொதுமக்கள் அனுமதியில்லை என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார் ஆட்சியர் கந்தசாமி. 7 ஆயிரம் பேர் மட்டும்மே அனுமதிக்கப்படும் நிலையில் 20 ஆயிரம் பாஸ் எதுக்கு அச்சடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்ல தயாராகயில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபத்திருவிழாவின் போது சாதாரண பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். பிறகு கோயிலுக்குள் வர பாஸ் போட்டார்கள், அதில் கட்டுப்பாடு என்றார்கள், இப்போது சாதாரண பக்தர்களுக்கு அனுமதியில்லை எனச்சொல்லியுள்ளார்கள். இதுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை என்கிறார்.
எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு என்ற ஒற்றை சொல்லை சொல்லி வாயை அடக்குகிறது மாவட்ட நிர்வாகம். ஒரு உண்மையை அறிந்துக்கொள்ளுங்கள், தீபத்திருவிழா பாதுகாப்புக்காக வரவைக்கப்படும் 9 ஆயிரம் காவல்துறையினரில் 4 ஆயிரம் காவலர்களை கோயிலுக்குள் சென்று சுகமாக தீப தரிசனம் செய்யும் 7 ஆயிரம் பேரின் பாதுகாப்புக்கும், ஆயிரம் காவலர்களை முக்கிய பிரமுகர்களுக்கு எடுபிடி வேலை செய்ய நியமிக்கப்படுகிறார்கள். மீதியுள்ள 4 ஆயிரம் காவலர்கள் மட்டும்மே 25 லட்சம் பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகிறார்.
திருமணம்மாக வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும், தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என பல்வேறு வேண்டுதல்களை கடவுள் முன் வைப்பார்கள். அப்படி நடந்துவிட்டால் மலை சுற்றுகிறேன் என்றோ அல்லது மலையேறுகிறேன் என்றோ அல்லது அன்னதானம் வழங்குகிறேன் என்றோ வேண்டிக்கொள்வார்கள். வேண்டியது கிடைத்தபின் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இது மக்களிடம் காலம் காலமாக உள்ள நம்பிக்கை, பழக்க வழக்கம். இந்த மத நம்பிக்கையில் தான் இப்போது குறுக்கீடு செய்கிறது மாவட்ட நிர்வாகம்.
திருவிழா தொடங்கியது முதல் ஏகப்பட்ட சிரமத்தை பக்தர்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக தங்குவதற்கு போதுமான இடவசதியில்லை, லாட்ஜ்களில் ஒருநாள் வாடகையே யானைவிலை, குதிரைவிலை. ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலை தறுமாறு, ஆட்டோக்களின் அராஜகம், பணம் இருப்பவர்களுக்கு மட்டும்மே அண்ணாமலையார் தரிசனம் என பல குறைபாடுகள் உள்ளதை பல தரப்பினரும் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுங்கள் என்றபோது, 4 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த அன்சுல்மிஸ்ரா, நாம சொல்றதை தான் பொதுமக்கள் கேட்கனும், பொதுமக்கள் சொல்றதை கேட்டு நாம திருவிழா நடத்தக்கூடாது என அதிகாரிகளிடம் கூறினார். அவர் அன்று கூறியதைத்தான் அதன்பின் வந்த அதிகாரிகள் கடைபிடிக்கிறார்கள்.
ஊர் கூடி தேர் இழுத்தால் தான் திருவிழா. அரசாங்கம்மே தேர் இழுப்பேன் என்பது திருவிழாவல்ல, அது அரசு நிகழ்ச்சி. திருவண்ணாமலை தீபத்திருவிழாவை மக்கள் விழாவாக நடத்தாமல் தங்களுக்கான அரசு நிகழ்ச்சியாக நடத்த அதிகார வர்க்கம் விரும்புகிறது. அதற்கான முன்னோட்டம் சில ஆண்டுகளாகவே தீபத்திருவிழாவில் நடக்க துவங்கியுள்ளன. வருங்காலத்தில் தீபம் என்றால் டிவியில் பார்த்துக்கொள் எனச்சொன்னாலும் சொல்வார்கள் போல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக