யார் சொத்து?... யார் இவர்கள்?...
அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சுற்றிவளைத்து அவர்களது நண்பர்கள், உறவினர்களையும் குறிவைத்து.. பங்களாக்கள், பண்ணை வீடுகள், நிறுவனங்கள் என புகுந்து புகுந்து வருமான வரித்துறை மிகப் பெரிய அளவில் சோதனை நடத்தியிருக்கிறது.
சசிகலா - நடராஜன்
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா. அதற்குப் பிறகு, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினரானபோது, அவரோடு டெல்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார்
எம்ஜிஆர் மறைந்தபோது, கட்சி இரண்டாக உடைந்த சமயத்தில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவுக்குப் பின்னால் அணி திரண்டனர். வெகுவாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்திருப்பவராக மாறினார் ஜெயலலிதா. இதை சாதகமாக்கிக்கொண்டார் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். ஆனால், அவரை நெருங்கவிடாமல் சற்று தொலைவிலேயே வைத்திருந்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் மாபெரும் சக்தியாக உருவெடுக்க விரும்பிய நடராஜன், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது ஓய்வில் உள்ளார்.
டிடிவி.தினகரன்
சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன் டிடிவி தினகரன் (54). திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். மாமன் (சசிகலாவின் அண்ணன்) சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துகொண்டார்.
1988-ல் அதிமுகவில் சேர்ந்தவர், பின்னர் அதிமுக பொருளாளராகப் பதவி வகித்தார். 1999-ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004-ல் அத்தொகுதியில் தோற்றாலும், மாநிலங்களவை எம்.பி.யாகி மீண்டும் டெல்லி சென்றார். 2011-ல் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பிறகு, நேரடி அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்தார். சசிகலா சிறைக்குச் செல்லும் முன்பு, அதிமுக துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
திவாகரன்
சசிகலாவின் தம்பி. மன்னார்குடியில் வசிக்கிறார். பல நிலைகளிலும் அக்கா சசிகலாவுக்கும், மைத்துனர் நடராஜனுக்கும் பேருதவியாக இருந்தவர். 1987-ல் போயஸ் கார்டனுக்கு செல்லத் தொடங்கினார். ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டினார். அவரது நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு சசிகலா ஏற்பாடு செய்த தனியார் பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்தார்.
1989-ல் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினார். மீண்டும், 1991 தேர்தலில் தனது செல்வாக்கை பயன்படுத்தி திருச்சி மண்டலத்தில் அறிவிக்கப்படாத பொதுச்செயலாளர் போல செயல்பட்டார். 1994-ல் சுந்தரக்கோட்டையில் செங்கமலத்தாயார் மகளிர் கல்வி அறக்கட்டளை தொடங்கினார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா உறவினர்களில் முக்கியமானவர்.
விவேக் ஜெயராமன்
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகன் விவேக். ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தை கவனித்துவந்த தந்தை ஜெயராமன் மின்கசிவால் உயிரிழந்த பிறகு, தாய் இளவரசியோடு போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேறினார். ஆஸ்திரேலியாவில் பிபிஏ, புனேவில் எம்பிஏ படித்தவர்.
ஐடிசி நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றியவர், அதில் இருந்து விலகி தனியாக தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். தற்போது ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரி.
தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் தாய் இளவரசி, சசிகலாவை அடிக்கடி சென்று பார்த்து கவனித்து வருகிறார்.
கிருஷ்ணபிரியா
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதிக்கு 2 மகள்கள். ஒருவர் ஷகிலா, 2-வது கிருஷ்ணபிரியா. சசிகலா சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் கணவர் நடராஜனை சந்திக்க பரோலில் சென்னை வந்தபோது, தி.நகரில் கிருஷ்ணபிரியாவின் வீட்டில்தான் தங்கினார்.
கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் நிறுவனர். இவரது கணவர் கார்த்திகேயன், மதுபானங்கள் உற்பத்தி செய்யும் மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவன இயக்குநர்.
ஜாஸ் சினிமாஸ், ஜெயா ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இயக்குநர்களாக உள்ளார்.
வழக்கறிஞர் எஸ்.செந்தில்
நாமக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர். பெங்களூரு சட்டக் கல்லூரியில் பயின்றபோது, சசிகலா உறவினரான மகாதேவன், இவருடன் பயின்றுள்ளார். இந்த பழக்கம் காரணமாக டிடிவி தினகரனின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதையடுத்து சென்னைக்கு குடிபெயர்ந்த செந்தில், நவநீதகிருஷ்ணன் எம்.பி.யிடம் உதவியாளராக இருந்துள்ளார். இதன்மூலம் அதிமுகவில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டவர், ஒரு கட்டத்தில் சசிகலாவிடம் நேரடியாக பேசும் அளவுக்கு உயர்ந்தார்.
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்த வழக்கறிஞர் குழுவில் இவரும் இடம்பெற்றார்.
டாக்டர் எஸ்.சிவக்குமார்
சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவதியின் கணவர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் கிராமத்தைச் சேர்ந்தவர். பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர். சென்னையில் பணியாற்றுகிறார்.
முக்கியமாக, ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவராக இருந்தவர். சசிகலா குடும்பத்தில் பலரும் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட நிலையிலும், ஜெயலலிதாவுடன் தொடர்ந்து நட்பில் இருந்தவர்.
பின்னாளில், உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் அவரது இறப்பு வரை மருத்துவமனையில் அனைத்தையும் ஒருங்கிணைத்தவர்.
கலியபெருமாள்
சசிகலாவின் அண்ணியான இளவரசியின் சம்பந்தி. அதாவது, இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் மாமனார். திருச்சி சுந்தர் நகரை சேர்ந்தவர். நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்புப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.
ஜெயலலிதா - சசிகலா நட்புறவு நன்றாக இருந்த முந்தைய காலக்கட்டத்தில் அதிமுகவின் அறிவிக்கப்படாத திருச்சி மண்டல பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். மத்திய மண்டல பகுதியைச் சேர்ந்தவர்கள் இவரைச் சந்தித்து கட்சி மற்றும் ஆட்சியில் பல வேலைகளை சாதித்துக்கொண்டதாக தகவல் உண்டு.
இவரது மகனும் மருமகளும் மிடாஸ் மதுபான ஆலையை கவனித்து வருகின்றனர்
டாக்டர் வெங்கடேஷ்
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ். 2009-ல் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.
அதிமுகவின் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளராகவும் செயல்பட்டார். இவரது திருமணத்தை ஜெயலலிதாதான் நடத்திவைத்தார். ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழின் ஆஞ்சநேயா பிரின்டர்ஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
2009 மக்களவை தேர்தலில் வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர். 2010-ல் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்தார். தினகரனுக்கு அடுத்ததாக கட்சியில் செல்வாக்கு மிகுந்தவர்.
வழக்கறிஞர் புகழேந்தி
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர். கர்நாடக மாநில அதிமுக செயலாளர். பெங்களூருவில் உள்ள முருகேஷ் பாளையாவில் குடும்பத்துடன் வசிக்கிறார். சசிகலாவுக்கு நெருக்கமானவரான புகழேந்தி, சிறையில் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் நிர்வாகியாக உள்ளார். கல்வி நிறுவனம், பர்னிச்சர் கடை உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்தார். பெங்களூருவில் நடந்துவந்த சொத்துக் குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்தார். அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா கைதானபோது புகழேந்தியும், குடும்பத்தினரும் தங்கள் சொத்துகளை பிணையாக வழங்கி கையெழுத்திட்டனர்.
ஓ.ஆறுமுகசாமி
தொழிலதிபரான ஓ.ஆறுமுகசாமி, ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை அதிமுகவில் ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்டவர். தமிழகத்தில் மணல் அள்ளும் ஒப்பந்தத்தை எடுத்து நிர்வகித்தார்.
அதன் தொடர்ச்சியாக ராவணன், சசிகலா, தினகரன் தரப்புக்கு நெருக்கமாக இருந்தார். 2004 மக்களவை தேர்தலில், கொங்கு மண்டலத்தில் அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் முக்கியப் பங்கு வகித்தார்.
மணல் ஒப்பந்தம் கைவிட்டுப் போன பிறகு அரசியலில் ஈடுபாட்டைக் குறைத்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முற்றிலுமாக ஒதுங்கினார். ஆனால், கோடநாடு எஸ்டேட் கட்டமைப்பு, நிர்வாகத்தில் முக்கியப் பங்கு கொண்டவர்.
சஜ்ஜீவன்
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். கோடநாடு பங்களாவில் கடைசி வரை உள்கட்டமைப்பு, பர்னிச்சர் பணிகளை மேற்கொண்டவர். கடந்த ஏப்ரலில் நடந்த கோடநாடு பங்களா காவலாளி கொலை சம்பவத்தின் விசாரணையின் போதுதான், வெளியுலகில் அறியப்பட்டார்.
கூடலூர் பகுதியில் அதிமுகவின் முக்கிய விஐபியாக வலம் வந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் முக்கியப் பங்காற்றியவர். குறுகிய காலத்தில் அதிக அளவில் இவரிடம் சொத்துகள் சோ்ந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கூடலூர் அடுத்த அல்லூர் வயல் பகுதியில் 20 ஏக்கர் காபி தோட்டம் வாங்கியுள்ளார்.
வழக்கறிஞர் ஏ.வி.பாலுசாமி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பிலிக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர். அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்தார். அரசு வழக்கறிஞராகவும் 10 ஆண்டுகள் இருந்தார்.
வழக்கறிஞர் செந்திலும் இவரும் ஒரே ஊர்க்காரர்கள். அந்தப் பழக்கம் காரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் பதவியைப் பெற்றார்.
அதிமுக (அம்மா) அணி மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான எஸ்.அன்பழகனின் நெருங்கிய நண்பர். கட்சி செல்வாக்கால் தொழில் ரீதியாகவும் பலமாகியுள்ளார். நாமக்கல் அலங்காநத்தத்தில் பல தொழில் நிறுவனங்கள் நடத்துகிறார்.
பூங்குன்றன்
சசிகலாவின் ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாளின் மகன் பூங்குன்றன். ஆரம்ப காலத்தில் இருந்தே சசிகலாவின் குடும்ப நண்பர். ஜெயலலிதாவின் உதவியாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். ஜெயலலிதா வீட்டுக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படிப்பது, முக்கிய கடிதங்களை ஜெயலலிதாவிடம் காட்டி, பதில்களை தயாரிப்பது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் நிர்வாகம் போன்ற பணிகளைச் செய்தார்.
‘நமது எம்ஜிஆர்’ பத்திரிகையின் நிர்வாக பொறுப்பிலும், வெளியீட்டாளராகவும் உள்ளார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா நிலைய இல்லத்தையும், அவரது மறைவுக்குப் பிறகு பூங்குன்றன்தான் கவனித்துவந்தார். சசிகலா குடும்பத்தினர் தொடங்கிய சில நிறுவனங்களில் பங்குதாரர்.
அடையாறில் வசிக்கும் இவருக்கு வேதா நிலையத்தில் தனி அறையே உண்டு.
கார்த்திகேயன்
அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதியின் தம்பி கார்த்திகேயன். கடந்த 2006-ல் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சசிகலா குடும்பத்தினரோடு இவரும் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்.
மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சசிகலாவின் தம்பி திவாகரனுடன் சேர்க்கப்பட்டார். தினகரன் அணிக்கு புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தேவையான உறுப்புகளைத் தானமாகப் பெற கடும் முயற்சி மேற்கொண்டவர். நன்றி தமிழ் தி இந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக