சசி ராஜ்ஜியம்: 117 நாள், 82 பார்வையாளர்கள்..
*பெங்களூரு:* நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்காக கர்நாடக சிறைத்துறை அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. கடந்த, 117 நாட்களில், 82 பார்வையாளர்கள் அவரை பார்த்துள்ளனர் என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
*தகவல் அறியும் சட்டம்*
பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் உள்ள சசிகலா பார்க்க எத்தனை பார்வையாளர்கள் வந்தனர் என கேட்டு, தகவல் ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறைக்கு மனு அனுப்பி இருந்தார். அவருக்கு கிடைத்த தகவல்கள் வருமாறு:கடந்த, 117 நாட்களில், 82 பார்வையாளர்கள், 32 முறை சசிகலாவை பார்த்துள்ளனர். சிறைத்துறை விதிகளின்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை தான் கைதியை பார்க்க முடியும். ஆனால், சசிகலாவை பார்க்க, வாரத்துக்கு மூன்று முறை கூட பார்வையாளர்களை அனுமதித்துள்ளனர்.
மேலும்,காலை, 11:00 மணி முதல், 5:00 மணி வரை தான் கைதிகளை பார்கக முடியும். ஆனால், சசிகலாவை இந்த பார்வை நேரம் முடிந்த பிறகும் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
*அடுத்தடுத்து சந்திப்பு*
கடந்த மார்ச், 6ம் தேதி சசிகலாவை பார்க்க, கோகுல இந்திரா, சரஸ்வதி ஆகியோர் வந்தனர்; 45 நிமிடங்களுக்கு மேலாக சந்தித்து பேசினர். மார்ச், 8 ம் தேதி தினகரன் வந்து, சசிகலாவுடன், 45 நிமிடங்களுக்கு மேல் பேசியுள்ளார். மார்ச், 13ம் தேதி, அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். மார்ச், 18 ம் தேதி, வழக்கறிஞர் அசோகன், சசிகலாவை சந்தித்துள்ளார். ஏப்., 3ம் தேதி சசிகலாவை, சாமிநாதன், ஜமாலுதீன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளார். சசிகலாவுக்கு மட்டுமல்ல, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் இதேபோன்று விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக