இந்த சிரிப்புக்கு பின்னால் எத்தனை எத்தனை துயரம்!...
பல ஆண்டுகளாக எழக் கூட முடியாமல் படுத்த படுக்கையாகி கிடந்த பெண், இவ்வளவு உற்சாகமாக சிரித்துக் கொண்டிருக்கிறார் என்றால் பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது அல்லவா?. இந்த சிரிப்புக்காக அவர் சந்தித்த துயரங்களை விவரிக்கவும் நிச்சயமாக வார்த்தைகள் இல்லை!
எகிப்தை சேர்ந்த இமான் அகமதுவின் எடை இரண்டரை மாதங்களுக்கு முன், 500 கிலோவாக இருந்தது. எந்த பெண்ணும் வாழ்க்கையில் விரும்பாத பட்டமும் அவருக்கு கிடைத்தது. அதாவது, உலகிலேயே அதிக எடை கொண்ட பெண் என்கிற பட்டம். இரு கைகள் இருந்தும் கையை அசைக்க கூட முடியாத நிலை என்றால் எத்தகைய வேதனையான விஷயம். அப்படிப்பட்ட நிலையில், இமான் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். மும்பையில் உள்ள சைஃபி மருத்துவமனையில் இமானுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டடது. பின்னர், அமீரகத்தில் உள்ள அபுதாபி புர்ஜில் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மும்பையில் இருந்து புறப்படுகையில் இமானின் எடை 242 கிலோவாக இருந்தது.
அபுதாபி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால், மிகவும் எடை குறைந்து விட்டார் இமான். அவரால் கை, கால்களை அசைக்க முடிகிறது. உணவை அவரே எடுத்து சாப்பிடுகிறார். படுக்கையில் எழுந்து உட்கார முடிகிறது. மருந்துகள் கூட அவரே எடுத்துக் கொள்கிறார். இமானின் முன்னேற்றம் குறித்து புர்ஜில் மருத்துவமனை நேற்று வீடியோ வெளியிட்டது. வீடியோவில் மிகுந்த மகிழ்வுடன் உற்சாகமாக இருக்கிறார் . அடுத்தக்கட்ட சிகிச்சையில் இமானின் எடையை 100 கிலோவுக்குள் கொண்டு வர மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இமான் எழுந்து நடமாட தொடங்கியதும் அவருக்கு வேறு பணி காத்திருக்கிறது. உலகம் முழுக்க சென்று உடல்பருமன் குறித்து விழிப்புணர்வில் அவரை ஈடுபடுத்த புர்ஜில் மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக