நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்..
*நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.*
*குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜக்தீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.*
*இதன் மூலம் நாட்டின் முதல் குடிமகன் என்றும் பெருமைமிக்க பதவியான குடியரசுத் தலைவர் பதவியில் ராம்நாத் கோவிந்த் வரும் 5 ஆண்டுகளுக்கு இருப்பார்.*
*குடியரசுத் தலைவராக பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதிக்கான இருக்கையில் ராம்நாத் கோவிந்த் அமர்ந்தார்.*
*கடந்த 5 ஆண்டுகளாக குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.*
*இதனையடுத்து இந்த பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் இன்று முறைப்படி நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.*
*நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவராக கடந்த 1997 முதல் 2002 வரை கே.ஆர்.நாராயணன் பணியாற்றினார்.*
*அவருக்கு அடுத்து 2-வது தலித் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.*
*இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் பங்கேற்றனர்.*
*தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் OPS, முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.*
*நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது*
*முன்னதாக குடியரசுத் தலைவராக பதவியேற்க வந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையின் முன் பகுதியில் உள்ள மைதானத்துக்கு ராணுவ செயலர் உள்ளிட்டோரால் அழைத்து வரப்பட்டார்.*
*பின் ராம்நாத் கோவிந்தும், முந்தைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பாரம்பரிய பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ காரில் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.*
*பின்னர் அங்கு இருவரையும் மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.*
*பின் அவர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.*
*அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.*
*பதவிப் பிரமாண நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாவலர்கள் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்வர். பின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மாளிகையை ராம்நாத் கோவிந்திற்கு சுற்றிக் காட்டுவார்.*
*அதை தொடர்ந்து டில்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள புதிய இல்லத்திற்கு பிரணாப் முகர்ஜியை அழைத்துச் சென்று ராம்நாத் கோவிந்த் வழியனுப்பி வைப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.*
*முன்னதாக நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது.*
*இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 20-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.*
*இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரைவிட அதிக வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார்.*
*மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றிருந்தார்.*
*இதையடுத்து நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக