புதன், 19 ஜூலை, 2017

இந்த நாளை எப்படி மறந்தோம்... தமிழக அரசு கொண்டாட மறந்த ’பொன்விழா’


இந்த நாளை எப்படி மறந்தோம்... தமிழக அரசு கொண்டாட மறந்த ’பொன்விழா’

’தமிழ்நாடு’ என்னும் பெயருக்கு அங்கீகாரம் கிடைத்த நாள், இன்று. 1967-ம் ஆண்டு ஜூலை 18 அன்றுதான், தமிழக சட்டமன்றத்தில் “ ‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானம் கொண்டுவந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.
தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நாள். தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் இந்த நாளை கொண்டாடத் தவறிவிட்டது. தற்போது, தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளராக இருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு உருவான வரலாற்றை 2006-ம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டு, பிரமாண்ட விழாவாகக் கொண்டாடினார். அதன் பிறகு, இந்த தினத்தை விமரிசையாக யாரும் கொண்டாடவில்லை. இதுகுறித்து ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் மிகுந்த வருத்தத்தோடு பேசியது பின்வருமாறு...

”’சென்னை மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் கொண்டுவந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. இதை யாரும் கொண்டாடாதது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற யதார்த்த நிகழ்வுகளையும் உண்மைகளையும் இப்போது இருக்கும் தமிழக அரசு நினைவுகூர்வது கிடையாது. போலி பிம்பங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உண்மை நிகழ்வுகளுக்கு அல்ல. இது எவ்வளவு விமரிசையாகக் கொண்டாடப்படவேண்டிய நாள்.
மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் தோன்றிய நாளை, அந்தந்த மாநிலங்கள் ஆண்டுதோறும் விசால ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என்று விழாக்கள் நடத்திக் கொண்டாடிவருகின்றன. ஆனால், தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.
தமிழ்நாடு எல்லை உருவாகி 50 ஆண்டுகள் நிறைவுற்றதை 2006-ம் ஆண்டு ’தமிழ்நாடு 50’ என்ற பெயரில் பிரமாண்ட விழாவாக நான் கொண்டாடினேன். அதுவும் என் சொந்த முயற்சியில்தான். எந்த அரசியல் கட்சியும் இதைக் கொண்டாடவில்லை. நான் விழா நடத்தி, ’தமிழ்நாடு 50’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டேன். இதுகுறித்து, அன்றைய ஆனந்தவிகடன் இதழில் கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை வெளியான பிறகுதான், இப்படியொரு வரலாற்று நாள் உள்ளது என்பதே அனைவருக்கும் தெரிய வந்தது. அதன்பிறகுதான் அரசியல் கட்சிகள் விழாவாகக் கொண்டாடினார்கள். 'தமிழ்நாடு 50’ என்னும் நம் அடையாளைத்தையே மறந்தவர்கள், மாநில உரிமைகளை எப்படி மீட்டெடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை’ என்று முடித்தார் விரக்தியுடன்.


மெட்ராஸ் ராஜதானி தமிழ்நாடான கதை!

செ ன்னை மாகாணமாக இருந்துவந்த மெட்ராஸ் ஸ்டேட் எனும் பெயர் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் ஆன பின்பும்கூட, இப்போதும் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் போராடும் சூழ்நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும்கூட 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது இன்னுயிரைத் துறந்தார். இதன் பின்னரும்கூட தமிழுக்காக இறங்கிவர மறுத்த அப்போதைய காங்கிரஸ் அரசு, தமிழில் மட்டும் 'சென்னை மாகாணம்' என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என எழுதிக்கொள்ளலாம் என அறிவித்தது. இதனால் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரே மாநிலத்திற்கு இரண்டு பெயர்வைத்து அழைத்து வந்ததை முடிவுக்குக் கொண்டுவந்த தினம் இன்று...
1967-ல் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற தி.மு.க அரசு, சட்டசபையில் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்போதைய சபாநாயகர் சி.பா. ஆதித்தனார் தலைமையில் 1967 ஜூலை 18-ல் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் அண்ணா, 'தமிழ்நாடு' என பெயர் சூட்டுவதற்கான அரசியல் சட்டத்திருத்தத்திற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலசுப்பிரமணியம், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை தமிழன் என்றே அழைக்க வேண்டும். மதராஸி என அழைக்கக் கூடாது" என்றார். தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி, "இந்தத் தீர்மானத்தை உணர்ச்சிப்பூர்வமாக, உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.க ஆட்சியில்தான் இது நிறைவேற வேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். பாரதிக்கு தாய் நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி மூன்றாயிரம் ஆண்டுகளாக புகழ்பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தால் நம் மனம் கொதிக்காதா? முதல்வர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்தபோது, அவரை கட்டித்தழுவ வேண்டும் என உணர்ச்சி மேலிட்டது. அதனை அடக்கிக் கொண்டேன்" என்றார்.
விவாதத்துக்குப் பின்னர் பதிலளித்துப் பேசிய அப்போதைய முதல்வர் அண்ணா, "இந்தநாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டியநாள். நீண்ட நாட்களுக்கு முன்னரே வந்திருக்க வேண்டிய இந்தத் தீர்மானம் காலம்தாழ்த்தி வந்தாலும் அனைவரின் பேராதரவுடன் வந்துள்ளது. இதனை இந்தசபையில் நிறைவேற்றி, இந்தியப் பேரரசுக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்து மத்திய மந்திரிகளுடன் பேசியபோது 'தமிழ்நாடு' என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதில் தடைஏதும் இல்லை என்றனர்.



நாடாளுமன்றத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என பேசிவந்த மத்திய அமைச்சர் சவான், தற்போது மிக கவனத்துடனும், சிரமத்துடனும் 'டமில் நாட்' என பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தைத் திருத்த நல்லவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத்தீர்மானம் எதிர்ப்பு ஏதும் இன்றி நிறைவேறினால் அது ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி, தமிழர் வரலாற்றின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதாலேயே தனிநாடு ஆகவில்லை. இந்திய பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால், சர்வதேச சிக்கல்கள் எழாது. சங்கரலிங்கனாரது எண்ணங்கள் ஈடேறும்நிலை இன்று ஏற்பட்டிருப்பது நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவதாகும். இந்தப் பெயர் மாற்றத்திற்கு பேராதரவு அளித்ததற்காக, எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப்பார்த்தால் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்குப் பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்" என்றார்.
இதனைத்தொடர்ந்து சட்டசபையில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டதும் மண்டபம் அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து எழுந்த முதல்வர் அண்ணா, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நன்னாளில், 'தமிழ்நாடு வாழ்க' என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என மூன்றுமுறை குரல்எழுப்ப, உறுப்பினர்கள் அனைவரும் "வாழ்க" என குரல்எழுப்பி, சட்டசபையே உணர்ச்சிமயமாகக் காட்சி அளித்தது.
அன்று எழுந்த உணர்ச்சியின் வேகம்தான் 50 ஆண்டுகள் கடந்தும், இன்றும் தமிழுக்காக தமிழர்கள் அனைவரையும் துடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக