செவ்வாய், 18 ஜூலை, 2017

17 ஆண்டுகளில் 31 பணியிட மாற்றம்: டிஐஜி ரூபாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசு



17 ஆண்டுகளில் 31 பணியிட மாற்றம்: டிஐஜி ரூபாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசு

ரூபா டி.மவுட்கில் பெங்களூரு சிறையில் முறை கேடுகளை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா டி. மவுட்கில் 17 ஆண்டுகளில் 31 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்தவர் ரூபா, இளம் வயதில் இருந்தே துணிச்சலானவர். பள்ளி, கல்லூரி நாட்களில் தேசிய மாணவர் படை, சாரணர் படை உள்ளிட்டவற்றில் பங்கேற்று தேசிய அளவில் பதக்கங்களை பெற்றவர். பள்ளிப் பருவத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பங்கேற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் சிறப்பு விருது பெற்றவர்.

கடந்த 2000-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரூபா, இந்திய காவல் பணியை விரும்பி ஏற்றார். கடந்த 2000-ம் ஆண்டு பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ரூபா கனிமவள கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். நேர்மை காரணமாக அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இவர், யாதகிரி, கதக், தும்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். ஹூப்ளியில் நடந்த கலவரத்தில் அப்போதைய‌ மத்திய‌ பிரதேச முதல்வர் உமாபாரதியை துணிச்சலாக கைது செய்த போது நாடு முழுவதும் கவனிக்கப்பட்டார்.

பெங்களூரு மாநகர காவல் இணை ஆணையராக பணியாற்றிய போது அரசியல் வாதிகளுக்கு தேவையில்லாமல் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றார். மேலும் அப்போதைய முதல்வர் எடியூரப்பா வாகன அணிவகுப்பில், உரிய அனுமதி இல்லாமல் இடம்பெற்ற வாகனங்களையும் திரும்பப் பெற்றார். அண்மையில் மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா உடன் ட்விட்டரில் தைரியமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.

கடந்த மாத இறுதியில் கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியாக பொறுப்பேற்ற ரூபா, பத்தே நாட்களில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இதனால் சிறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் சத்தியநாராயண ராவ் ரூபாவுக்கு 2 மெமோ கொடுத்த போதும், அஞ்சாமல் அவருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி ரூ. 2 கோடி லஞ்சப்புகாரை கிளப்பினார்.

*எதிர்த்ததால் இட‌மாற்றம்*

கர்நாடக அரசுக்கு சிக்கல் உருவானதால் முதல்வர் சித்தராமையா ரூபாவிடம் ஊடக ங்களுக்கு பேட்டிக்கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். அதை மீறி ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதி வழங்கப்படுவதாக பேட்டியளித்தார். இதனால் கோபமடைந்த சித்தராமையா ரூபாவுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு ரூபா, 'இந்த விவகாரத்தில் என்னை குறி வைப்பது நியாயமல்ல. குற்றவாளிகளை தண்டியுங்கள்' என அஞ்சாமல் சொன்னார்.

ரூபா தொடர்ந்து சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலா, முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்டோரிடம் நேருக்கு நேர் மோதியதால் ரூபாவுக்கு அதிகார மட்டத்தில் மட்டுமல்லாமல், வெளியில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

ரூபாவுக்கு எதிரான அதிகார புள்ளிகள் அவருக்கு எதிராக வலுவாக காய் ந‌கர்த்தின. சிறைக்குள் இருக்கும் தாதாக்களை கொண்டு அங்கே கலகத்தை உருவாக்கி, சிறையை பதற்றமாக்கினர். அரசியல் வட்டாரமும், அதிகார மட்டமும், சட்ட விரோத கும்பலும் ஒரே நேரத்தில் கைக்கோர்த்ததால் ரூபா ஒரே மாதத்தில் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, மனிதா பிமானம் தொடர்பாக கன்னடத்தில் முன்னணி தினசரி இதழ்களில் ரூபா கட்டுரையும் எழுதி வருகிறார்.

காவல்துறையில் இவர் பணியில் சேர்ந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அரசியல்வாதிகள், பணக்காரர்கள், ரவுடிகள், அதிகாரிகள் என‌ எத்தனையோ எதிர்ப்புகளை பார்த்துவிட்டார். எதற்கும் அடிபணிந்து செல்லாத ரூபாவுக்கு அதிகார வர்க்கம் அளிக்கும் தண்டனை தான் அடிக்கடி இடமாற்றம். கடந்த 17 ஆண்டுகளில் 31 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது தான் ரூபாவின் நேர்மைக்கு தரப்படும் மாபெரும் பரிசு என அவரது நெருங்கிய நண்பர்கள் வருத்தத்தோடு கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக