கேளாய் பெண்ணே: தள்ளிப் போகுதே குழந்தைப் பேறு...
எனக்குக் கருவுற்றல் தள்ளிப் போவதால் என் தோழிகள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அறிவுரை என்ற பெயரில் என்னைக் கஷ்டப்படுத்துகிறார்கள். என் கஷ்டத்தை அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?
- வந்தனா மனநல ஆலோசகர்
பிருந்தா ஜெயராமன், கோவை
உங்களுக்கு அறிவுரை சொல்பவர்கள் பெரும்பாலும் உங்களுக்கு நெருக்கமானவர்களாகத்தான் இருப்பார்கள் என நம்புகிறேன். அதனால் அவர்களிடம் எடுத்த எடுப்பிலேயே ‘எனக்கு உங்கள் அறிவுரை எல்லாம் வேண்டாம்’ என்று சொல்ல முடியாதுதான். உங்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய வகையில் யாராவது இனிமேல் அறிவுரை சொன்னால் அவர்களிடம், “கருவுறுவது தள்ளிப்போவதால் நானே வருத்தத்தில் இருக்கிறேன். இது சம்பந்தமாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுவருகிறேன். நான் இந்த விஷயத்தில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள்போல, அதனால்தான் எனக்கு அறிவுரை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இப்படி ஒவ்வொருவரும் அவர்கள் இஷ்டப்படி பேசுவதால் என் வருத்தம் அதிகமாகிறது. எனக்கு எப்போது தேவையோ, அப்போது நானே உங்களிடம் வந்து அறிவுரை கேட்டுக்கொள்கிறேன்” என நயமாகச் சொல்லுங்கள்.
பிறருக்கு அறிவுரையோ ஆலோசனையோ சொல்ல நினைப்பவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. உங்களிடம் யாராவது வந்து அவர்களின் கஷ்டத்தைச் சொல்லி வருத்தப்பட்டால், அவர்கள் ஒரு தீர்வுக்காகத்தான் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள் என அர்த்தமில்லை. அவர்கள் கஷ்டத்தைச் சொல்லும்போது உங்கள் அனுபவத்தில் இருந்து அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள். பாதிக்கப்பட்டவர் முழுமையாக விஷயத்தைச் சொல்லி முடிக்கும் முன்பே, “இது ஒரு பெரிய விஷயமா, இப்படிச் செய்தால் சரியாகிவிடும்” என நாமாகவே அறிவுரை சொல்லக் கூடாது. முதலில் அவர்கள் சொல்லும் விஷயத்தைக் காது கொடுத்துப் பொறுமையாகக் கேளுங்கள். அப்போதுதான் அவர்கள் மனதில் இருப்பதை முழுமையாக வெளிப்படுத்த முடியும். அவர்கள் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு இதமான வார்த்தைகளைச் சொல்லுங்கள்.
உதாரணத்துக்கு, “அடடா, இப்படியா ஆயிடுச்சு? அந்த மாதிரி நடந்து இருக்கக் கூடாதுதான்” என்பது போன்ற வார்த்தைகள் அவர்களின் காயத்துக்கு மருந்து போடுவதுபோல் அமையும். இப்படிச் செல்லிவிட்டு அதன் பின்னர், “எனக்கு ஒரு வழி தோன்றுகிறது சொல்லட்டுமா?” என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுவிட்டு அறிவுரை சொல்வது சிறந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக