அகில இந்திய வானொலியின் திருச்சி செய்திப் பிரிவு மூடல்?: அதிகாரிகள் அதிரடி மாற்றம்; 40 பேர் வேலை இழக்கும் அபாயம்...
அகில இந்திய வானொலி நிலையத்தின் திருச்சி மண்டல செய்திப்பிரிவு மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பணியாற்றிய செய்தியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 46 இடங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருச்சி வானொலி நிலையத்தின் செய்திப்பிரிவு, கடந்த 1981, நவம்பர் 14-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. மத்திய , மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், திட்டங்கள் குறித்த தகவல்களையும், மீனவர்கள், விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் திட்டங்களையும் செய்திகளாக உடனுக்குடன் பொதுமக்களை அறியச்செய்வது, குறிப்பாக, மண்டல அளவில் பகுதி வாரியாக தகவல்களை சேகரித்து உடனுக்குடன் வழங்கி வந்தது.
திருச்சி செய்திப்பிரிவின் தமிழில் மாநிலச் செய்திகள், பண்பலை நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பண்பலையில் மணிக்கொருதரம் ஒலிபரப்பும் செய்திச்சுருக்கம் நிகழ்ச்சி, பொதுமக்கள் மத்தியில் முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது திருச்சி மண்டலம் தவிர தென் மாவட்ட மக்களையும் ஈர்த்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னைகள், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் தேயிலை, காய்கனி மற்றும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி , நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் தொடர்புடைய பிரச்னைகள் என அனைத்தையும் செய்திகளாக்கி தருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக