சாதனைகள் சுவாரசியங்கள்..
உலகக் கோப்பை கிரிக்கெட் என்ற வடிவத்துக்கு முதன்முதலில் உயிர் கொடுத்ததே மகளிர் கிரிக்கெட்தான். ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் 1975-ம் ஆண்டுதான் முதன்முதலாக நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பே 1973-ம் ஆண்டிலேயே முதல் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றுவிட்டது.
1973-ல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி இடம்பெறவேயில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜமைக்கா, டிரினிடாட் அண்ட் டுபாகோ ஆகிய அணிகளே பங்கேற்றன.
1978-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது உலகக் கோப்பையில்தான் இந்தியா அறிமுகமானது.
முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகள் தற்போதைய வடிவத்தில் நடத்தப்படவில்லை. அரையிறுதி, இறுதி போட்டி எதுவும் நடத்தப்படவில்லை. லீக் போட்டிகளின் முடிவில் பட்டியலில் அதிகப் புள்ளிகள் பெற்ற அணிக்குக் கோப்பை வழங்கப்பட்டது. 1975-ல் இங்கிலாந்து 20 புள்ளிகளும் 1978-ல் ஆஸ்திரேலியா 6 புள்ளிகளும் பெற்றுக் கோப்பையை வென்றன.
1973-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை நடைபெற்று முடிந்துள்ள 10 உலகக் கோப்பைகளில் 6 முறை (1978, 1982, 1988, 1997, 2005, 2013) ஆஸ்திரேலியாவே கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து (1973, 1993, 2009) 3 முறையும், நியூசிலாந்து (2000) ஒரு முறையும் கோப்பை வென்றுள்ளன.
இதற்கு முன்பு 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. இப்போது இரண்டாவது முறையாக முன்னேறியிருக்கிறது. ஆசியாவிலிருந்து இறுதிப் போட்டிவரை முன்னேறியுள்ள ஒரே நாடு இந்தியா மட்டுமே.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் டெப்பி ஹாக்லி (நியூசிலாந்து): 1,501 ரன்கள் (5 தொடர்கள்)
தனி நபர் அதிகபட்ச ரன் - பெலிண்டா கிளார்க் (ஆஸ்திரேலியா): 229 அவுட் இல்லை (1997-ம் ஆண்டு)
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் - லைன் ஃபுல்ஸ்டோன் (ஆஸ்திரேலியா): 39 விக்கெட்டுகள் (2 தொடர்கள்)
சிறந்த பந்துவீச்சு - ஜேக்கி லார்ட் (நியூசிலாந்து): 10 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது (1982-ம் ஆண்டு)
ஓர் அணியின் அதிகபட்ச ரன்: 412/3, டென்மார்க் அணிக்கு எதிராக 1997-ல் ஆஸ்திரேலியா குவித்தது.
குறைந்தபட்ச ரன்: 27, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1997-ல் பாகிஸ்தான் அணி எடுத்த மோசமான ரன்.
2017-ம் ஆண்டு சாதனைகள்
இந்தத் தொடரில் அதிக ரன் குவித்தவர் எலிசி பெர்ரி (ஆஸ்திரேலியா): 404 ரன் (8 போட்டிகள்). மித்தாலி ராஜ் 392 ரன் (இறுதிப் போட்டி பாக்கி உள்ளது).
அதிக சதம் அடித்தவர் நடாலை சீவர் (இங்கிலாந்து): 2 சதங்கள்.
அதிக அரை சதம் அடித்தவர் எலிசி பெர்ரி (ஆஸ்திரேலியா): 5 அரை சதங்கள்.
தனி நபர் அதிகபட்ச ரன் சமாரி அட்டப்பட்டு (இலங்கை): 178 (அவுட் இல்லை).
அதிக விக்கெட் வீழ்த்தியவர் டேன் வான் நீகெர்க் (தென்னாப்பிரிக்கா): 15 விக்கெட்டுகள் (7 போட்டிகள்).
சிறந்த பந்துவீச்சு - ராஜேஸ்வரி கெய்க்வாட் (இந்தியா): 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் (நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக