கிராமத்து தமிழ் ஆசான் தினத்தந்தி பிறந்த தினம்
---------------------------------------
கிராமத்து தமிழ் வாத்தியாரின் சேவைக்கு வயது எழுபத்து ஐந்து!
ஆம்! தினத்தந்தியின் பவள விழாவிற்கு இப்படித்தான் பொருள் கூற வேண்டும்!
உள்ளபடியே தினத்தந்தி ஒரு தமிழ் ஆசான். அரசு ஆசிரியர்கள் செல்ல முடியாத அல்லது செல்ல விரும்பாத கிராமங்களுக்குக் கூட தினம், தினம் தமிழை தலையில் சுமந்து செல்கிறதே!
அதன் வருகைக்குப் பின்தானே இன்னமும் பல கிராமங்களில் விடியலே விடிகிறது!
காட்சி ஊடகங்களின் பெருக்கம் ஒருபுறம் இருக்க, தொழில் நுட்பங்களின் தாக்கம் மறுபுறம் நெருக்க, இருந்தாலும் தமிழை வாசிப்பவர்களின் எண்ணிக்கை வற்றி விடாமல் பார்த்துக் கொள்கிறது, தினத்தந்தி!
பத்திரிகைத் தொழில் என்பது எளிதானது அல்ல!
பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் எல்லாம் அரசியலில் வெற்றி பெற்று இருந்தாலும், வெகுஜன பத்திரிகைத் தொழிலில் தோற்றுப் போனவர்களே!
தங்களது பேச்சாலும், எழுத்தாலும் வாக்காளர்களை ஈர்க்க முடிந்த அளவில், தமிழ் வாசகர்களை தங்கள்பால் அவர்கள் இழுக்க இயலாமல் போனதுதான் விந்தை!
அதை அய்யா சி.பா.ஆதித்தனார் 1-11-1942 ஆம் ஆண்டு தொடங்கிய 'தந்தி'யின் மூலம் வென்று காட்டினார்!
அன்று பத்திரிகை துறை போன்ற அதிகார மையங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கட்டுப்பாட்டில்தான் கட்டப்பட்டுக் கிடந்தன!
மேதாவித்தனம் கொண்டவர்களே பத்திரிகை நடத்தினார்கள். வாசித்தார்கள்! சாதாரணமானவர் களுக்கு அங்கு இடம் இல்லை! அதுவே மரபாக இருந்தது!
அந்த மரபை தகர்த்து எறிந்தார், சி.பா.ஆதித்தனார்!
சாமன்ய மக்களின் பேச்சுத் தமிழை கொச்சை நீக்கி, அச்சுக்கோர்த்து 'தந்தி'யை சாதாரண மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
சென்னை மாநகரில் தினத்தந்தி தலைமை அலுவலகம் அமைக்க, திராவிடர் கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் பாதியைத் தந்தவர், தந்தை பெரியார்!
"பிராமணர் அல்லாத ஒருவர் தமிழ்ப் பத்திரிகை நடத்துவதற்கு கேட்கிறீர் என்பதற்காகவே இந்த இடத்தைத் தருகிறேன்" என்று அப்போது அவர் சொல்லி இருக்கிறார்.
பெரியாரின் அந்த சமூகப் பார்வையை தினத்தந்தி மூலம் சி.பா.ஆதித்தனார் நிறைவேற்றிக் காட்டினார்.
ஆம்! சாமான்ய மக்களுக்கு சாமான்யர்களைக் கொண்டே பத்திரிகை நடத்தினார்.
இன்று ஊடகத்துறையில் கிராமத்து இளைஞர்கள் உட்புகுந்து கோலோச்ச முடிந்து இருக்கிறது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர், சி.பா.ஆதித்தனார்!
பத்திரிகைத் துறையில் சமூக நீதியை சமன் செய்தது, தினத்தந்தி!
அத்தகைய தமிழ் ஏட்டை சீண்டியவர்களும், நையாண்டி செய்தவர்களும் ஏராளம்! அவர்களில் பலர் பிற்காலங்களில் தந்தியின் வளர்ச்சி கண்டு, தந்தியிடமே வந்து ஐக்கியமானார்கள் என்பதே நாடறிந்த உண்மை!
அய்யா சி.பா. ஆதித்தனாருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவிய காலகட்டம்!
1964 ஆம் ஆண்டு வாக்கில், 'தந்தி'யில் அவ்வப்போது எம்.ஜி.ஆர். பற்றிய கேலிச்சித்திரங்கள் வெளிவருவது உண்டு.
அதன் கசப்போ அல்லது வேறு வெறுப்போ, எம்.ஜி.ஆர். ஒரு திரைப்படம் மூலமாக 'தந்தி'யை நையாண்டி செய்து இருப்பார்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஜோடியாக நடித்த படம் என்று நினைவு! அதில் எம்.ஆர்.ராதா, நாகேஷ் கதாபாத்திரங்கள் அந்த நையாண்டி வேலைகளைச் செய்து இருக்கும்!
'தந்தி'யில் அப்போது வெளியிடப்பட்ட செய்திகளின் தலைப்புகள், கவர்ச்சிப் படங்களை சுட்டிக்காட்டி கேலியும், கிண்டலும் செய்து இருப்பார்கள்!
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பிற்காலத்தில் 'தந்தி' யோடு இணக்கமாக இருந்ததும், அய்யா சி.பா.ஆதித்தனார் சிலையை திறந்து வைத்ததும், வரலாறு!
அதுபோல் கலைஞர் கருணாநிதியும், ஆளும் கட்சியாக இருக்கும்போது அனுசரணையாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக வரும்போது எல்லாம் 'தந்தி' யோடு உரசிக் கொள்வது உண்டு!
அவர் விரும்புகிற அளவிலே செய்தி வெளிவராவிட்டால், 'தந்தி' அரசு விளம்பரத்தில் குளித்து வருவதாக குற்றம் சாட்டுவார்!
பின்னாட்களில் அவருக்கு மூத்த தமிழ் அறிஞர் விருதை 'தந்தி' வழங்கி கவுரவித்ததையும், 'தந்தி'யின் 'வரலாற்றுச் சுவடு'களை அவர் வெளியிட்டு பெருமைப்படுத்தியதையும் அனைவரும் அறிவர்!
செல்வி ஜெயலலிதாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல! ஒருமுறை ஏற்பட்ட கருத்து உரசலில் ஒருபடி உயரச் சென்று, 'தந்தி'க்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்பதை "அடிக்க வேண்டிய இடத்தில் அடியுங்கள்"... (அதாவது வருமானத்தில்) என்று வெளிப்படையாகவே சொன்னார்.
இருந்தும் ஜெயலலிதா ஏன்? யாராலும் 'தந்தி'யை அடிக்க முடியவில்லை. அடிக்கவும் முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை!
இவ்வாறு 'தந்தி'யோடு தலைவர்கள் உரசலும், விரிசலும் கொண்டு இருந்தாலும், தங்களை மக்கள் மன்றத்தில் உயிர்ப்போடு முன்நிறுத்திக் கொள்வதற்காக 'தந்தி'யோடு இணக்கமாக இருந்தார்கள் என்பதே இயல்பான உண்மை!
இதை புரிந்தும் புரியாத சிலர், ஆளும் கட்சிக்கு அடிபணிந்தே கிடக்கும், தினத்தந்தி என்று அவ்வப்போது அவதூறு கூறுவதும் உண்டு!
ஆளும் அரசின் செய்திகளை வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை! அதை ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு என்று விமர்சிப்பதில் எங்கு இருக்கிறது உண்மை?
ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், சமூகச் சிந்தனை உள்ள தலைவர்கள் சிறியவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும், ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும், அடக்கப்பட்டவர்களாக இருந்தாலும் 'தந்தி' மதிக்கத் தவறியது இல்லை!
அவரவர் அரசியல் தகுதிக்கேற்ப அங்கீகாரம் அளித்தே வருகிறது.
அரசியல் செய்திகளை வெளியிட்டாலும், 'தந்தி' செய்திகள் வெளியிடுவதில், ஒருபோதும் அரசியல் செய்தது இல்லை! அதுதான் 'தந்தி'க்கு என்றும் வெற்றி முகம்!
1994 அல்லது 95 ஆம் ஆண்டா என்பது நினைவில்லை. பெங்களூரு தினத்தந்தி அலுவலகத்தில் பணி செய்து வந்தோம்.
சின்னய்யா பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பிறந்தநாள் விழா. அதற்காக ஒரு வரவேற்பு கவிதை எழுதி இருந்தேன். கவிதையை அலுவலக மூத்த மேலாளர் வாசித்து அளித்தார்.
விழா முடிந்ததும் ஊழியர்கள், சின்னய்யாவை நேரில் சந்திப்பது வழக்கம்.
அப்போது நானும் அவர்களைச் சந்தித்தேன். கவிதையைப் பாராட்டினார்கள். கவிதையில் அரசியல் கலந்து இருக்க வேண்டாமே என்று அறிவுரையும் தந்தார்கள்.
அது என்ன அரசியல்? நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
இதோ...
"அரசியலை
ஆட்டி வைக்கும்
அய்யா ஒரு சாட்டையே!
உங்கள்-
அரவணைப்பைப்
பெற்றவர்க்கே
ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையே!
உங்கள்-
அவமதிப்பைப்
பெற்றுவிட்டால்
சென்னை ஓரம் பேட்டையே!"
இதுதான் அந்தக் கவிதையின் ஊடே இடம் பெற்று இருந்த அரசியல் அடிகள்!
இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், நான்கு சுவர்களுக்குள் புகழ்ந்து பாடிய கவிதையில்கூட அரசியல் வேண்டாம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சின்னய்யா அவர்கள், பொது வெளியில் எப்படி 'தந்தி'யை அரசியலுக்கு அடிபணிய விட்டு இருப்பார் என்பதே எமது பொதுவான கேள்வி!
ஏதோ பழைய ஊழியன் பாசத்தால் எழுதுவதாக எண்ணிவிட வேண்டாம்.
"பல் உலகிலும் நடைபெறுகின்ற
சங்கதியை, படத்துடனே!
தமிழ்ப் பண்டிதர்கள் மட்டுமல்ல
பாமரரும் படித்திடவே!
எழில் தமிழை எளிய நடையில்
இயம்புகின்ற 'தினத்தந்தி'!
நல்எழில் மிக்க தீந்தமிழை
சுமந்துவரும் தினம் முந்தி!"
-என்று 'தந்தி'க்குள் நுழைவதற்கு முந்தியே கவிதை எழுதி இருக்கிறேன்.
கல்லூரியில் படிக்கும்போதே 'தந்தி'யைக் காதலித்து இருக்கிறேன்!
எங்களது கல்லூரி மேலாதிக்கம் மிகுந்தது! அங்குள்ள நூலகத்திற்கு சில ஆங்கிலப் பத்திரிக்கைகளும், தினத்தந்தி அல்லாத ஓரிரு தமிழ்ப் பத்திரிக்கைகளும் வருவது உண்டு!
ஏன் தினத்தந்தியை வாங்குவது இல்லை? என்று நண்பர்களுடன் வினவினோம்.
அதில் குற்றச் செய்திகள், சினிமாச் செய்திகள், ஆபாசச் செய்திகள்தான் வரும் என்று குற்றம் சொன்னார்கள்.
"ஏ மேன் ரேப்ஸ் தி மைனர் கேள்" என்று ஆங்கிலப் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் செய்தி வெயிடுவார்கள். அதையே 'தந்தி' வெளியிட்டால் ஆபாசம் என்பீர்கள்?
இப்படி எல்லாம் அன்று எங்களுக்கு கேள்வி கேட்கத் தெரியாது. நாங்கள் கிராமப்புறத்து அப்பாவி மாணவர்கள்!
இன்னமும் மெத்தப் படித்த மேதாவிகள் சிலர், 'தந்தி' மீது இந்தக் குற்றச்சாட்டை சுமத்துவது உண்டு!
கவியரசு கண்ணதாசனின் எழுத்துக்கள் ஆபாசமாக இருக்கின்றன என்று 1976 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அரசியல் மேடைகளில் விமர்சிப்பவர்கள் உண்டு!
"செந்தமிழ் தேன்மொழியாள்!
நிலாவெனச் சிரிக்கும்
மலர்க்கொடியாள்!
பைங்கனி இதழில்
பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்!"
- என்றெல்லாம் தமிழை உயர்த்தி எழுதிய கண்ணதாசன்...
இன்று ...
"............................
எதுவரைப் போகுமோ
அதுவரைப் போகலாம்.."
(வசந்தமாளிகை திரைப்படத்தில் ஒரு பாடலில் இடம்பெற்ற அடிகள்) என்று ஆபாசமாக எழுதிக் கொண்டு இருக்கிறார், என்பார்கள்!
"இலந்தப்பழம், இலந்தப்பழம்
செக்க செவந்தப் பழம்
தேனாட்டி இனிக்கும் பழம்... "
- என்ற பாடலும் அவர் எழுதியதுதான்.
ரசிகர்களின் ஏகபோக வரவேற்பைப் பெற்ற அந்தப் பாடல், அந்த நேரத்தில் ஆபாச பாடலென அருவருப்பாகப் பேசப்பட்டது!
அதே கண்ணதாசன்,
" எல்லோரும் எல்லாமே
பெறவேண்டும்!
இங்கு இல்லாமை இல்லாத
நிலைவேண்டும்!"
- போன்ற புரட்சிகரமான பொதுவுடமைப்பாடலை எழுதி தன்னைப் புதுப்பித்தும் இருக்கிறார்!
அப்பேர்ப்பட்ட கவிஞனை இலந்தப்பழ பாடலைச் சொல்லி அடையாளமிடுவதும், சிறுமைப்படுத்துவதும் சிறப்புடமை ஆகாது!
அதைத்தான் "தந்தி'க்கும் சொல்கிறோம். அது கடந்துவந்த காலச் சூழலுக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது.
தினம் தினம் புதுப்பித்துக் கொண்டும் வருகிறது!
அறிவொளி இயக்கம், முறைசாரா கல்வி இயக்கம் என்றெல்லாம் இன்று அரசாங்கம் நடத்திவரும் கிராம கல்விப் பணி இயக்கங்களை எழுபத்து ஐந்து ஆண்டுகளாக "தினத்தந்தி" தன்னந்தனியாக செய்து வருகிறது!
சாதாரண மனிதனை வாசிக்க வைப்பது சாதாரணச் செயல் அல்ல; அதை வெகு சாதாரணமாகச் செய்து, சாதித்து வருகிறது, தினத்தந்தி!
இந்த சாதனை ஏட்டை இன்று, பவளவிழா மேடைக்கு அழைத்து வந்து இருக்கும் மேதகு இளைய அய்யா அவர்கள், நாளை நூற்றாண்டு விழா மேடைக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வாழ்த்தி வணங்குவோம்! வெல்க தமிழ்!
க.முத்துநாயகம்,
தினத்தந்தி செய்தி ஆசிரியர் ஓய்வு
லாலாக்குடியிருப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக