திரும்ப வந்துட்டோம்னு சொல்லு' - சிஎஸ்கே ஆடையுடன் தோனி பகிர்ந்த புகைப்படம்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகால தடை முடிவடைந்தது.
இதனையடுத்து ட்விட்டர் மற்ரும் ஃபேஸ்புக்கில் சிஎஸ்கே ரசிகர்கள் பலர் #CSKReturns ஹேஷ்டேக்கை வெள்ளிக்கிழமை முதல் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது அந்த அணியில் கடந்த 8 ஆண்டுகளில் விளையாடிய வீரர்கள் பலரும் செல்ஃபி புகைப்படங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் திரும்ப வந்துவிட்டது என்று பதிவுகளை இட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் எட்டு ஆண்டுகளாக கேப்டனாக பதவி வகித்த தோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'' என்ற தொனியில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அப்புகைப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மஞ்சள் நிற ஆடையில் 'தல' என்ற எழுதப்பட்டு தோனி பின்புறமாக திரும்பி நிற்கிறார்.
இப்புகைப்படத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் #CSKReturns என்று பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்துள்ளதையடுத்து அந்த அணியின் இயக்குநர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜான், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
''சிஎஸ்கே அணிக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிந்துவிட்டது. நாங்கள் திரும்ப வந்துவிட்டோம். எங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களையும், பயிற்சியாளர்களையும் மீண்டும் பெற முயற்சிப்போம். இதுகுறித்து பிசிசிஐயிடம் பேசுவோம். கடந்த இரு தொடரிலும் புனே அணிக்காக விளையாடிய தோனியிடமும், சிஎஸ்கே அணிக்கு திரும்புவது பற்றி பேசுவோம். தலைமைப் பயிற்சியாளராக இருந்த பிளெம்மிங், பந்துவீச்சு பயிற்சியாளர் ஆண்டி பிசெல், பீல்டிங் பயிற்சியாளரான ஸ்டீவ் ரிக்சன் ஆகியோரையும் மீண்டும் அணிக்கு கொண்டுவர முயல்வோம்.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், சிஎஸ்கே அணி மீண்டும் விளையாட வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுடன் எங்கள் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள இணையதளங்களில் சிஎஸ்கே அணியின் பழைய வெற்றிகள் குறித்த பதிவுகளை வெளியிடவுள்ளோம். 2018-ம் ஆண்டின் ஐபிஎல் சீசனை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக