வெள்ளி, 14 ஜூலை, 2017

சன் குழுமத்தின் ரூ.742 கோடி சொத்துக்களை விடுவிக்க முடியாது -உச்சநீதிமன்றம்



சன் குழுமத்தின் ரூ.742 கோடி சொத்துக்களை விடுவிக்க முடியாது  -உச்சநீதிமன்றம்..

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கில் முடக்கப்பட்ட சன்டிவி குழுமத்தின் 742 கோடி ரூபாய் சொத்துக்களை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு மிரட்டி விற்கச் செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு கைமாறாக 742 கோடி ரூபாய் அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் சன் குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சன்டிவி குழுமத்தின் 742 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியிருந்தது. இதனை விடுவிக்கக்கோரி மாறன் சகோதரர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது சன்டிவி குழுமங்களின் 742 கோடி ரூபாய் சொத்துக்களை விடுவிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. மேலும், மாறன் சகோதரர்களை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக வழக்குத் தொடரவும் அமலாக்கப்பிரிவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக