MATHI BREAKING NEWS..
சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய சிறை அதிகாரிகள்.. லிஸ்ட் என் கிட்ட இருக்கு.. குமாரசாமி அதிரடி!
பெங்களூர்: சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்க அவர் தரப்பில் இருந்து யார் யார் லஞ்சம் பெற்றார்கள் என்ற விவரங்கள் தன்னிடம் உள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவை விதிமுறைகளை மீறி பார்வையாளர்கள் வந்து செல்வதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டது.
பரப்பன அக்ரஹார சிறையில் சிறைத் துறை டிஐஜி ரூபா, கடந்த 4 நாள்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சசிகலா அறையில் தனி கிச்சன் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனி கிச்சன் உள்ளிட்ட சலுகைகளுக்காக சசிகலா தரப்பு சிறை துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2கோடி வரை லஞ்சம் அளித்ததாகவும் அவருக்கு தெரியவந்துள்ளது.
*கஞ்சா புழக்கம்*
மேலும் சிறையில் உள்ள கைதிகள் லஞ்சம் கொடுத்தால் கஞ்சா உள்ளிட்ட போதா பொருள்களும் சர்வ சாதாரணமாக கிடைப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சான்றிதழ் வழங்குமாறு சிறையில் உள்ள மருத்துவக் குழுவினரை கைதிகள் மிரட்டுவதாகவும் ரூபாவுக்கு தெரியவந்தது.
மாநில டிஜிபிக்கு கடிதம்
இதைத் தொடர்ந்து தான் நேரில் சென்று ஆய்வு செய்தபோது பார்த்தவற்றையும், வதந்திகளாக தன் காதுக்கு வந்த தகவலையும் மாநில டிஜிபி தத்தாவுக்கு பெண் அதிகாரி ரூபா அறிக்கையாக அனுப்பினார். இது தமிழகம், கர்நாடக அரசியலில் பெரும் புயலையே கிளப்பியது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை டிஜிபி ராவ் மறுத்துள்ளார். ஆனால் தன்னிடம் ஆதாரம் உள்ளதாக ரூபா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சிறையில் தனி கிச்சன் உள்ளிட்ட வசதிகளை பெற ரூ. 2 கோடியை லஞ்சமாக அளித்ததோடு, மாதந்தோறும் ரூ.10 லட்சம் என்ற அளவில் சிறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குமாரசாமி குற்றம்சாட்டினார். இதன் மூலம் கிணற்றிலிருந்து மேலும் ஒரு பூதம் கிளம்பியுள்ளது.
*ஒவ்வொரு பிரமுகரிடமும்...*
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலாவைப் பார்க்க வரும் ஒவ்வொரு பிரமுகரிடமும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர். இந்த தகவல்கள் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. எனவே ரூபா மீது துறை சார்ந்த குற்றச்சாட்டை எழுப்புவது நியாயம் அல்ல.
விடுப்பில் செல்லுங்கள்
இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடியும் வரை இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் நீண்ட விடுப்பில் செல்ல அரசு வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் உண்மையை கண்டறிய முடியும். இல்லாவிட்டால் ஆதாரங்களை அதிகாரிகள் அழித்து விடுவார்கள்.
என்னிடம் ஆதாரம்
சசிகலா தரப்பிடம் இருந்து சிறை துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்தோ அல்லது ஊடகங்களிலோ வெளியிடுவேன். உள்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் சித்தராமையா அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, ஊழலற்ற நிர்வாகம் என்றெல்லாம் கூறுவார். ஆனால் இன்று அவர் முதல்வர் பதவிக்கான கௌரவத்தை தாழ்த்திவிட்டார் என்றார் குமாரசாமி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக