திங்கள், 17 ஜூலை, 2017

பசு கோமியத்தின் நன்மைகளை ஆய்வு செய்ய குழு அமைத்தது மத்திய அரசு..



 பசு கோமியத்தின் நன்மைகளை ஆய்வு செய்ய குழு அமைத்தது மத்திய அரசு..

பசுவின் கோமியத்தில்(சிறுநீர்) என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய மத்திய அரசு 19 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத் தொடர்புடைய உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தலைமையில் இந்த குழு இயங்கும். பசுவின் சானம், சிறுநீர், பால், தயிர், மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ குறித்த அறிவியல் பூர்வமான நன்மைகள், மனிதர்களின் உடல்நலத்துக்கும், வேளான்மைக்கும் எந்த அளவுக்கு உதவும் என்பது உள்ளிட்ட விஷயங்களை இந்த குழுவினர் ஆய்வு செய்வார்கள்.

மத்தியில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி வந்தபின்பும், பா.ஜனதா ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசுக் குண்டர்கள், முஸ்லிமகள், தலித் மக்களை குறிவைத்து தாக்கும் செயல்கள் தொடர்ந்து வருகின்றன. நாடுமுழுவதும் கடந்த சில மாதங்களாக நடக்கும் இந்த தாக்குதல்களால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. பிரதமர் மோடி இது குறித்து சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்து, சட்டத்தை கையில் எடுக்கும் பசுக்குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.

இந்த சூழலில் மத்திய அரசு பசு, அதன் சிறுநீர் உள்ளிட்டவைகள் குறித்த ஆய்வுக்கு புதிய குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 19 பேர் கொண்ட குழுவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை, உயிரி தொழில்நுட்பத்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, ஐ.ஐ.டி. நிறுவனத்தின் ஆய்வாளர்கள்,விஞ்ஞான் பாரதி அமைப்பு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆதரவு பெற்ற ‘கோ-விஞ்ஞான் அனுசாதன் கேந்திரா’ அமைப்பில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்படுவர்.

பசுவின் சிறுநீர், சானம், தயிர்,பால், நெய் உள்ளிட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யத்தில் இருக்கும் அறிவியல் ரீதியான சிறப்புகள் குறித்துஆய்வு செய்ய பஞ்சகவ்யத்தை அறிவியல் ரீதியாக சரிபார்த்து ஆய்வு செய்தல்(எஸ்.வி.ஏ.ஆர்.ஓ.பி.) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மருந்துகள், உடல்நலம் சார்ந்த விஷயங்களிலும், வேளான்துறைகளிலும் பஞ்சகவ்யம் எவ்வாறு அறிவியல் ரீதியாக பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த குழு ஆய்வை முடிக்க 3 ஆண்டுகாலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு பல்வேறு அமைச்சகங்கள், அரசு துறைகள், கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவை உதவ உள்ளன.

அமெரிக்கா அரசு மஞ்சள், பாஸ்மதி அரிசிக்கு காப்புரிமை வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கடுமையாக பிரசாரம் செய்த அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆய்வுக்குழுவின் முன்னாள் இயக்குநர் ஆர்.ஏ. மஷேல்கர், ஐ.ஐ.டி. டெல்லி இயக்குநர் பேராசிரியர் ராம்கோபால் ராவ், வி.கே. விஜய் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற அறிவியல் அமைப்பான விஞ்ஞான் பாரதியின் தலைவர் விஜய் பக்த்கர், விஞ்ஞான் பாரதியின் பொதுச்செயலாளர் ஏ.ஜெயக்குமார், கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திரா அமைப்பின் சுனில் மன்சிங்கா ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக