இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி ரயில் சேவை தொடங்கியது..
டெல்லியில் நாட்டின் முதல் சூரிய மின்சக்தி ரயில் வெள்ளிக்கிழமை அன்று தன் பயணத்தைத் தொடங்கியது. விழாவை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். விளக்குகள், மின்விசிறிகள், தகவல் காட்சிப்படுத்தப்படும் அமைப்பு ஆகியவை அனைத்தும் முழுக்க முழுக்க சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும். சூரிய ஒளி இல்லாதபோது, ரயிலை இயக்க பேட்டரி அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய அமைச்சர் சுரேஷ் பிரபு, ''ரயில்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உருவாக்கும் திட்டத்துக்கு இதுவொரு தொடக்கப்புள்ளி. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறோம். பயோ- டாய்லெட்டுகள், தண்ணீர் மறுசுழற்சி, கழிவுகளை சுத்திகரிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த உள்ளூர் ரயிலின் பயணப் பாதை விரைவில் முடிவு செய்யப்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி ரயில் சுமார் 21,000 லிட்டர்கள் டீசலை மிச்சப்படுத்தும். இதனால் ஒவ்வொரு வருடமும் ரூ.12 லட்சம் மிச்சமாகும்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக