புதன், 16 ஆகஸ்ட், 2017

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1947-ம் ஆண்டு பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடி எங்கே? - புதிய தகவல்



செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1947-ம் ஆண்டு பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடி எங்கே? - புதிய தகவல்

வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற நாளில் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 15-8-1947 அன்று ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடி பற்றிய புதிய தகவல்களை பார்ப்போம்!

வெள்ளையரின் ஆட்சியின்கீழ் ஒன்றுபட்ட பாரத தேசமாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இங்குள்ள இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என மகாத்மா காந்தியுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகமது அலி ஜின்னா மிகவும் வலியுறுத்தினார்.

இதற்கு காந்தி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காதபோதிலும், பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்கு தூபமிட்டனர். இதன் விளைவாக, நமது நாட்டின் பல பகுதிகள் தாரைவார்க்கப்பட்டு பாகிஸ்தான் என்ற புதிய நாடு உதயமானது.

நமது நாட்டில் இருந்து துண்டாடப்பட்ட இந்த பாகிஸ்தானுக்கு 14-08-1947 அன்று விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நமது நாட்டுக்கு அதே நாளின் நள்ளிரவில்தான் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் 15-8-1947 அன்று விடுதலை பெற்ற இந்திய நாட்டின் முதல் தேசிய கொடியை ஜவஹர்லால் நேரு ஏற்றி வைத்தார்.

அதேநாளில் இந்திய நாட்டின் தேசியக் கொடி கொல்கத்தா மும்பை உள்ளிட்ட பெருநகரங்களிலும் ஏற்றி வைக்கப்பட்டன. அகிம்சை முறையின் மூலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தை இந்திய மக்கள் அனைவரும் அன்று வெகு எழுச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர். டெல்லியில் முதன்முதலாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றிவைத்த தேசிய கொடியை காணவில்லை என்று இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தகவல் வெளியானது.

நாடு விடுதலை அடைந்த 15-8-1847 முன்னர் சென்னை ராஜதானியாக இருந்த சென்னை மாகாணத்தின் தலைமை ஆட்சிப்பீடமாக இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் ‘ஜாக்’ கொடி இறக்கப்பட்டு, கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் முதன்முதலாக நம் தாய்த்திரு நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

அன்றைய தினம் அந்த கொடியை ஏற்றி வைத்தவர் யார்? என்பது தொடர்பாக வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்கள் தற்போது நம்மிடம் இல்லை.

எனினும், பட்டுத் துணியில் 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு, 15-8-1947 அன்று அதிகாலை 5.05 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்டு, பட்டொளி வீசிப் பறந்த அந்த தேசியக் கொடி கடந்த 70 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் நாட்டின் பழைமையான ஒரே தேசியக் கொடி என்ற சிறப்பு கிடைத்துள்ளது.

கடந்த 26-1-2013-ல் இருந்து இந்த சிறப்புக்குரிய தேசியக் கொடியை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் சிறப்பு பேழையில் காட்சிப் பொருளாக வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

கண்ணாடி பதித்த மரத்தினால் செய்யப்பட்ட பேழையில் வைக்கப்பட்டுள்ள இந்த பட்டு கொடி தட்பவெப்ப நிலையினால் உருக்குலைந்துப் போகாமல் இருக்கும் வகையில் அந்தப் பேழைக்குள் ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேழை வைக்கப்பட்டுள்ள அறைக்குள் 24 மணி நேரமும் குளிர்சாதன வசதி பராமரிக்கப்பட்டு வருகிறது. தூசு மற்றும் வெளிப்புற வெளிச்சம் கொடியை பாதிக்காத அளவு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வரலாற்று சிறப்புக்குரிய தேசியக் கொடியைக் காண்பதற்காக பார்வையாளர்கள் அந்த அறைக்குள் நுழையும்போது மட்டும் பேழைக்குள் விளக்குள் எரியும் வகையில் உயரிய தொழில்நுட்பம் இங்கு கையாளப்பட்டு வருகிறது. கொடியின் சில இடங்கள் லேசாக மங்கியுள்ளதுபோல் காணப்பட்டாலும், நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மிக பழைமையான ஒரே தேசியக் கொடி என்னும் வரலாற்று தனிச்சிறப்பு பெற்றுள்ள இந்த கொடியை பேணிப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

வெள்ளையரிடம் இருந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை போற்றிப் பேணிப் பாதுகாப்பதுபோல் தமிழ்நாட்டுக்கும், தமிழகத்தின் தலைநகரான சென்னயில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் மேலும் சிறப்பை சேர்க்கும் வகையில் இந்த வரலாற்று சிறப்புக்கும் பெருமைக்கும் உரிய தேசியக் கொடியை போற்றிப் பேணிப் பாதுகாப்பதுடன் நாட்டின் 70-வது சுதந்திர தினமான இன்று இதுதொடர்பாக பெருமிதம் கொள்ளவும் இந்தியர்களாகவும், தமிழர்களாகவும் நாம் அதிகம் கடமைப்பட்டுள்ளோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக