பெரியார், அண்ணாவின் கொள்கைகளை பரப்புவதில் ‘முரசொலி’யின் பங்களிப்பு அளப்பரியது: கி.வீரமணி, ‘இந்து’ என்.ராம் புகழாரம் ; பவள விழாவில் ரஜினி, கமல் பங்கேற்பு..
முரசொலி பவள விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் காட்சி அரங்கத்தை ‘இந்து’ என்.ராம் திறந்து வைத்தார். தொடர்ந்து முரசொலி ஆசிரியரும் திமுக தலைவருமான கருணாநிதியின் அறையில் வைக்கப்பட்டிருந்த அவரின் தத்ரூபமான உருவச் சிலையைப் பார்வையிடும் ‘முரசொலி’ செல்வம், திமுக செயல் தலைவ ர் மு.க.ஸ்டாலின், தி.க.தலைவர் கி.வீரமணி, ‘இந்து’ என்.ராம், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர்.
பெரியார், அண்ணாவின் கொள்கைகளை பரப்புவதில் முரசொலி நாளிதழின் பங்களிப்பு அளப் பரியது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘இந்து’ என்.ராம் ஆகியோர் புகழாரம் சூட்டினர்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யின் 75-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று தொடங்கியது. கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடந்த தொடக்க விழாவில் முரசொலி பவள விழா காட்சி அரங்கை ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் திறந்துவைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த இந்த விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கி.வீரமணி, ‘‘திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி மூலம் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்தார். திமுகவின் வளர்ச்சிக்கு முரசொலி நாளிதழின் பங்களிப்பு அளப்பரியது. எத்தனையோ சோதனைகளை, சவால்களை கடந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது முரசொலி. மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்திலும் பெரியார், அண்ணா, கருணாநிதியின் கொள்கைகளை முரசொலிதான் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. முரசொலி பவள விழா கண்காட்சி இன்றைய தலைமுறைக்கு 75 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும் வகையில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும்’’ என்றார்.
கண்காட்சியை பார்வையிட்ட பிறகு நிருபர்களிடம் ‘இந்து’ என்.ராம் கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட முரசொலி நாளிதழ் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது சாதாரணமான நிகழ்வல்ல. ஓர் அரசியல் கட்சி 75 ஆண்டுகளாக நாளிதழ் நடத்துவது வரலாற்றுச் சாதனை. இதற்காக எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டேன். 75 ஆண்டுகளில் திமுக மட்டுமின்றி திராவிட இயக்கத்தின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பத்திரிகை துறையில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை இந்தக் கண்காட்சி உணர்த்துகிறது. அரசியலிலும், கொள்கையிலும் வந்த சவால்களை கருணாநிதி எப்படி எதிர்கொண்டார். சவால்களை மீறி சாதுர்யமான யோசனைகள் மூலம் எப்படி சாதனை படைத்தார் என்பதையும் காட்சி அரங்கம் நமக்கு வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகம் இன்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுவதை குஜாரத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பார்த்தோம். இதுபோன்ற சூழலில் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை பரப்புவதில் முரசொலியின் பங்களிப்பு அளப்பரியது.
சட்டப்பேரவை கூண்டில் முரசொலி ஆசிரியர் செல்வம் நிறுத்தப்பட்டார். அப்போது இந்த சவாலை துணிவுடன் அவர் எதிர்கொண்டார். 2003-ல் ‘தி இந்து’வுக்கு நெருக்கடி வந்தபோது, ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகளை எதிர்கொள்ள முரசொலி செல்வம் எதிர்கொண்ட விதம் எங்களுக்கு உதவியது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக கண்காட்சியை அமைத்துள்ளார். அரசியலில் அவர் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு என்.ராம் கூறினார்.
ரஜினி, கமல் பங்கேற்பு
முரசொலி பவள விழா நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு பத்திரிகைகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் இவ்விழாவில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழா நிறைவுரையாற்றினார்.
திராவிடம் தமிழ்நாட்டுக்கானது மட்டுமல்ல; நாடு தழுவியது: முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் புகழாரம்
திராவிடம் என்பது தமிழக அளவில் நின்றுவிட்டது அல்ல; அது இந்தியா முழுவதுக்குமானது என முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் 75-ம் ஆண்டு நிறைவு விழா (பவள விழா) சென்னையில் நேற்று நடை பெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு முன்னணி தமிழ், ஆங்கில பத்திரிகைகளின் ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு கருணாநிதி மற்றும் முரசொலி நாளிதழுடனான தங்களது நினைவு களைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
தமிழில் நான் கேட்ட இரண்டா வது குரல் கருணாநிதியின் குரல்தான். முதல் குரல் சிவாஜி கணேசனுடையது. திரைப்படங் களில் நடிகர் சிவாஜி கணேசன் பேசுவது எல்லாம் அவரே எழுதியது என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சிவாஜியின் குரலுக்கு பின்னால் இருந்தது கருணாநிதி என தெரியும் வயது வந்ததில் இருந்து அவரது ரசிகனாகிவிட்டேன்.
இந்த விழாவுக்கு வருமாறு ஸ்டாலின் அழைத்தபோது ரஜினிகாந்த் வருகிறாரா என கேட்டேன். வருகிறார் என்றார். பேசுகிறாரா என்றேன். இல்லை. பார்வையாளராக அவர் வருகிறார் என்றார். அப்படியெனில் நானும் பார்வையாளராகவே வருகிறேன் என்று கூறினேன். ரஜினியின் கையை பிடித்துக் கொண்டு பேசி மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.
இவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கலாமா என எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். தற்காப்பு அல்ல முக்கியம், தன்மானமே முக்கியம் என்பதால் நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்த விழாவுக்கு நான் வரும் செய்தி வெளியானதும் திமுகவில் சேரப் போகிறாயா என சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்கிறார்கள். திமுகவில் சேரு வதாக இருந்தால் 1983-ம் ஆண்டி லேயே சேர்ந்திருக்க வேண்டும். 1983-ல் நீங்கள் ஏன் திமுகவில் சேரக் கூடாது எனக் கேட்டு கருணா நிதியிடம் இருந்து எனக்கு தந்தி வந்தது. அதற்கு பதில் அளிக்கவும் தைரியம் இல்லை, வெளியில் சொல்லவும் தைரியம் இல்லை. அதன்பிறகு அதுபற்றி கருணாநிதி கேட்கவில்லை. இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
இது ஒரு பத்திரிகையின் வெற்றி விழா. 75 ஆண்டுகள் ஒரு பத்திரிகையை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை 100 ஆண்டுகள், 90 ஆண்டுகள் பத்திரிகை நடத்துபவர்கள் இங்கே எடுத்துக் கூறினார்கள். வெவ்வேறு கருத்துக்களை கொண்ட பத்திரிகை யாளர்கள் இங்கே கடமை, கண்ணியததோடு தங்களது எண் ணங்களை பகிர்ந்து கொண்டார்கள். தமிழக வரலாற்றில் இந்த மேடை ஓர் அத்தியாயம். இந்த வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்.
திராவிட இயக்கம் இதோடு முடிந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரையில் திராவிடம் இருக்கும். திராவிடம் என்பது தமிழகத்துக்கு மட்டுமானது, தென்னிந்தியாவுக்கு மட்டுமானது என நினைக்கக் கூடாது. திராவிடம் என்பது நாடு தழுவியது.
சிந்து சமவெளியில் இருந்து திராவிடம், நாடு தழுவிய அளவில் வளர்ந்துள்ளது. அதனால் திராவிட இயக்கம் என்பது இந்தியா முழுமைக்குமானது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
நிறைவாக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக