இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா 3 மாதத்தில் 23 சர்வதேச போட்டிகள்..
கோல்கட்டா: இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் மழையில் நனையலாம். சொந்த மண்ணில் 3 மாதத்தில் 23 சர்வதேச போட்டிகளி்ல இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இந்தியா–இலங்கை இடையிலான தற்போதைய தொடர் வரும் செப்டம்பர் 6ல் முடிகிறது. பின், சொந்த மண்ணில் இந்தியா அதிக போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கான இடங்களை பி.சி.சி.ஐ., அட்டவணை குழு நேற்று வெளியிட்டது. போட்டி நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னைக்கு வாய்ப்பு:
வரும் செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா– ஆஸ்திரேலிய தொடர் துவங்க உள்ளது. 5 ஒரு நாள் போட்டிகள் முறையே சென்னை, பெங்களூரு, நாக்பூர், இந்துார், கோல்கட்டா இடங்களில் நடக்கவுள்ளன. இதன்பின், ஐதராபாத், ராஞ்சி, கவுகாத்தியில் 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் நடக்கும். சமீபத்தில், கவுகாத்தியில் (அசாம்) கட்டப்பட்ட பார்சபாரா மைதானத்தில் முதல் முறையாக போட்டி நடக்கவுள்ளது.
நியூசி.,யுடன் மோதல்:
இதன் பின், அக்டோபர் மத்தியில் இந்தியா வரும் நியூசிலாந்து அணி முதலில் 3 ஒரு நாள் (புனே, மும்பை, கான்பூர்) போட்டிகளில் பங்கேற்க உள்ளது. 3 ‘டுவென்டி–20’ யை பொறுத்தவரை, டில்லி, கட்டாக், ராஜ்கோட்டில் அரங்கேற உள்ளன.
இந்த ஆண்டு, சொந்த மண்ணில் கடைசி அணியாக இலங்கையை இந்தியா சந்திக்கவுள்ளது. நவம்பரில் கோல்கட்டாவில் முதல் டெஸ்ட் துவங்குகிறது. 2,3வது போட்டிகள் முறையே நாக்பூர், டில்லியில் நடக்கும்.
ஒரு நாள் போட்டிகள் முறையே தரம்சாலா, மொகாலி, விசாகப்பட்டனத்தில் நடக்கவுள்ளன. முதல் ‘டுவென்டி–20’ கொச்சி அல்லது புதிதாக திருவனந்தபுரத்தில் (கேரளா) கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடக்கும். அடுத்த இரண்டு போட்டிகள் முறையே இந்துார் மற்றும் மும்பையில் அரங்கேறும்.
23 போட்டிகள்:
ஒட்டுமொத்தமாக, சொந்த மண்ணில் செப்டம்பர் இறுதி முதல் டிசம்பர் இறுதி வரை மொத்தம் 23 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு தற்காலிக செயலர் அமிதாப் சவுத்ரி கூறுகையில்,‘‘ மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடப்படும். வடகிழக்கு மாநிலங்களிலும் பண்டிகைகள் உள்ளன. இதை கணக்கில்கொண்டு போட்டிக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக