ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்



காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

வீரமாமுனிவர் பங்குகுருவாகப் பணியாற்றிய இவ்வாலயத்தில் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு பரலோக மாதாவின் பாதுகாவலரான மிக்கேல் ஆண்டகையின் திருவுருவம் பவனியாக சப்பரத்தில் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து, கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக ஆலயக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக்கொடிகள் அணிவகுப்பாகக் கட்டப்பட்டன.

திருச்சி புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரி அருள்திரு அந்தோணிசாமி கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனி பங்குதந்தை அருள்அம்புரோஸ், பூண்டி பூண்டிமாதா திருத்தல அதிபர் பாக்கியசாமி, கீழஅலங்காரத்தட்டு பங்குதந்தை ஜாண்செல்வம் ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினர். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் சமபந்தி விருந்து நடைபெற்றது.

கொடியேற்று விழாவையொட்டி, செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

திருவிழாவின் 7ஆம் நாளான  ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 9  மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மரியன்னை மாநாடு, 8ஆம் நாளான 13ஆம் தேதி காலை 8 மணிக்கு புதுநன்மை விழா, 9ஆம் நாளான 14ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி மற்றும் மாலை ஆராதனை நடைபெறுகிறது.

10ஆம் திருநாளான ஆக.15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில், தேரடித் திருப்பலி நடைபெறும்.  அதைத் தொடர்ந்து, கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலயப் பங்குதந்தை எஸ்.எம்.அருள்ராஜ், உதவி பங்குதந்தை அலெக்ஸாண்டர், அருள்சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக