ஊரே கொண்டாடும் நேர்மையான ரேஷன் கடை அதிகாரி..
ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் கடை மூடியிருப்பதைப் பார்த்து சீல் வைக்க முயற்சி செய்ய, ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைத் தடுத்த சம்பவம் யாருக்காவது தெரியுமா?
அது தெரியும் என்றால் உங்களுக்கு நாகராஜனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கிராமத்தில் நேர்மையாகப் பணிபுரிந்த ரேஷன் அதிகாரி.
பொது விநியோகப் பொருட்கள் கையிருப்பில் இருக்கும்போதே தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்களைத் திருப்பி அனுப்புவது, ரேஷன் பொருட்களைப் பெற வரும்போது ஆதார் கட்டாயம் என்று கூறி, பொருட்களை வழங்க மறுப்பது அல்லது ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்கப் பணம் பெறுவது ஆகியவை பெரும்பாலான ரேஷன் கடைகளில் பழக்கமான ஒன்று.
ஆனால் ரேஷன் கடை மேற்பார்வையாளரான நாகராஜன், அவர்களில் இருந்து வித்தியாசமானவராக இருந்தார். நாகராஜனின் தன்னலமற்ற சேவை குறித்துப் பொதுமக்களே கூறுகின்றனர்
''கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தள்ளி வட்டத்தில் உள்ள கிராமம் தாக்கட்டி. அங்கு பொது விநியோக சேவையின் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர்... இல்லை சேவையாற்றியவர் நாகராஜன். 53 வயதான நாகராஜன் அங்கு சம்பாதித்தது கிராம மக்களாகிய எங்களின் அன்பை மட்டுமே.
மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றான தளி வட்டத்தில் இருக்கும் சுமார் 1,350 ஏழைக் குடும்பங்களுக்கு விரைவாகவும், சீராகவும் ரேஷன் பொருட்களைப் பெற்றுத் தந்தவர் நாகராஜன். காலை 7.30 மணிக்கு சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டையில் இருந்து கிளம்பி, 8.45 மணிக்கு எங்கள் ஊரை அடைவார். தினமும் சரியாக காலை 9 மணிக்குக் கடை திறக்கப்படும். மாலை 6 மணி வரை கடை இயங்கும்.
நிறைய இடங்களில், ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் பல முறை பயணிக்க வேண்டும். ஆனால் நாகராஜனின் கடையில் ஒருவர் ஒருமுறை வந்தாலே போதும். அவர் அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்ல முடியும்.
இதற்காக அனைத்து அட்டைதாரர்களின் தொலைபேசி எண்களையும் வாங்கி வைத்துவிடுவார் நாகராஜன். பொருட்கள் வந்தபிறகு, அனைவருக்கும் தகவல் சொல்லி, அரசு வழங்கிய எல்லாப் பொருட்களையும் ஒரேமுறையில் வழங்கிவிடுவது அவரின் வழக்கம். அத்துடன் கடைசித் தேதி வரை பொருட்கள் வாங்காதவர்களுக்கு நியாபகப்படுத்துவார்'' என்கின்றனர் பொதுமக்கள்.
இதுகுறித்து பேசும் நாகராஜன், ''நிறையப் பேர் சுமார் 5 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டெல்லாம் பொருட்களை வாங்க வருவர். அவர்களை அலைக்கழிப்பது முறையாகாது. அத்துடன் அன்றாடப் பாட்டில் ரேஷன் வாங்க மறந்துவிடுபவர்களும் இருப்பார்கள். அவர்கள் யாரும் பொருட்கள் கிடைக்காமல் பட்டினியாக இருக்கக்கூடாது'' என்கிறார்.
நாகராஜன் வழக்கமான பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை. அந்தாயோதயா அன்னா யோஜனா அட்டைகளைப் பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு அதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் ஒரு குடும்பம் 35 கிலோ அரிசியைப் பெறமுடியும். அதைப் பெறும் பழங்குடிகள் தங்களுக்குள் அதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
இவை அனைத்துக்கும் மேலாக ஒன்று நடந்திருக்கிறது. அதுகுறித்து நினைவு கூர்கிறார் ஊர்க்காரரான சங்கே கெளடு.
''அது 2009-ம் ஆண்டின் ஒரு ஞாயிற்றுக்கிழமை. ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ள வந்தார் மாவட்ட ஆட்சியர். அந்த நேரம் பார்த்து நாகராஜன் தன் நோயாளி மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். கடை மூடியிருப்பதைப் பார்த்து ஆட்சியர், கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
கைவசம் பூட்டு இல்லாததால் உடனே அதிகாரிகள் கிராம மக்களிடம் கடைக்கு சீல் வைக்கப் பூட்டைக் கேட்டனர். ஆனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பூட்டு வழங்க மறுத்தனர். எங்களுக்கு இந்த ஊரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அதிகாரிகளிடம் வாதிட்டனர். பின்னர் எங்கிருந்தோ ஒரு பூட்டைப் பெற்ற அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்துச் சென்றனர்'' என்கிறார்.
ஆனால் அடுத்த நாள் நாகராஜனைப் பற்றிக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், நாகராஜனிடம் புன்னகையுடன் சாவியைக் கொடுத்தது அவரின் நேர்மையைப் பறைசாற்றியதாக மகிழ்கின்றனர் ஊர் மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக