ஞாயிறு, 16 ஜூலை, 2017

14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா?



14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல்  எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி: நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில், பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்– ்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாருக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களும், சட்டப்பேரவைகளில்  எம்.எல்.ஏ.க்களும் ஓட்டளிக்கின்றனர். தேர்தல் முடிவு 20ம் தேதி தெரியும்.  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்கலாம் முடிவதால், நாட்டின் 14வது ஜனாதிபதி தேர்தவு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான  வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் 14ம் தொடங்கியது. தே.ஜ. கூட்டணி வேட்பாளராக, பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்  நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.  இவர்கள் தலித் வேட்பாளர்கள். இருவருமே அனைத்து மாநில எம்.பி., எம்.எல்.ஏக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்.பி.யின் ஒட்டு மதிப்பு 708. எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும்.  ஜனாதிபதி தேர்தலின் மொத்த ஓட்டு மதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 903. இதில், 50 சதவீதம் அதாவது 5 லட்சத்து 49 ஆயிரத்து 452  ஓட்டுக்கள் பெற்றால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.இன்றைய தேர்தலுக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க தகுதியானவர்கள்.  தமிழகத்தில் காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. தமிழக எம்எல்ஏ.க்கள் அனைவரும் சென்னை தலைமை செயலகத்தின் சட்டசபை  வளாகம் அருகில் உள்ள கூட்ட அரங்கில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கேரள எம்எல்ஏ அப்துல்லாவும், மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனும் சென்னையில் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் மக்களவை செயலாளர் ஜெரல் அனூம் மிஸ்ரா தேர்தல் அதிகாரியாக உள்ளார். வாக்குப்பதிவு முடிந்ததும், எல்லா மாநிலங்களிலும்  இருந்து ஓட்டு பெட்டிகள், நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மூடி முத்திரையிடப்பட்ட ஓட்டுப் பெட்டிகள், 2 வேட்பாளர்களின்  பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் குழு பார்வையாளர்கள் முன்னிலையில் 20ம் தேதி திறக்கப்படும். ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள்அறிவிக்கப்படும். புதிய ஜனாதிபதி வரும் 25ம் தேதி பதவி ஏற்பார்.
எம்பி.க்கு பச்சை வாக்குச் சீட்டு: எம்.எல்.ஏ.க்கு இளஞ்சிவப்பு :அனைத்து தேர்தல் மையங்களுக்கு தேவையான வாக்குச்சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் மையங்களில் எம்.பிக்களுக்களுக்கு பச்சை நிற  வாக்குச் சீட்டும், எம்.எல்.ஏ.க்களுககு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் வழங்கப்படுகின்றன. அதில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் சிறப்பு  பேனாவில் மட்டுமே வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

*நாடாளுமன்றத்தில் அறை எண் 62ல் வாக்குப்பதிவு*

நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் 62-ல்  வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலம் வாரியாக அங்கு மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநில  எம்.பி.க்கள் அங்கு சென்று தங்கள் ஓட்டை  பதிவு செய்யலாம். உத்தரப் பிரதேசத்துக்கு 6ம் எண் மேஜை ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் உ.பி.  எம்.பிக்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் 6ம் எண் மேஜையில்  வாக்களிப்பார்கள். டெல்லியில் வாக்களிக்க விரும்பும் மற்ற மாநில எம்.எல்.ஏ.க்கள் மேஜை எண் 1ல் வாக்களிக்கலாம்.

*கோவிந்துக்கு வாய்ப்பு*

தே.ஜ கூட்டணி வேட்பாளர் ராம்நாத்  கோவிந்துக்கு அவர்களி–்ன் கட்சி சார்பில் 5 லட்சத்து 37 ஆயிரத்து 683 ஓட்டுக்கள் கிடைக்கும். வெற்றிக்கு 12  ஆயிரம் ஓட்டுகளே குறைவாக உள்ளன. ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், அதிமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,  தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளின் ஆதரவும் உள்ளதால், அவர் 60 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

*மனசாட்சிப்படி ஓட்டளிக்கவேண்டுகோள்*

‘‘ஜனாதிபதி தேர்தலில் ரகசிய  வாக்கெடுப்பு நடக்கிறது. இதில், கட்சி கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்க  முடியாது. அதனால், மக்கள் பிரதிநிதிகள்  தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க  வேண்டும்’’ என எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக